1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்

கதைச்சுருக்கம்

1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்


சினிகோ பிலிம்ஸ் தயாரிப்பில் 1988 ஆமாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்.


No description available.

இந்தப் படம் முழுமையான திரைக்கதை அமைப்புக்கு எடுத்துக் காட்டு. சோகம் ததும்பும் முன் கதை. தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி பாடலை ஜெயச்சந்திரன் கண்மல்கும் வண்ணம் பாடி இருப்பதைக் கேட்டுக் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது. எல்லோராலும் கைவிடப்படுவோருக்குத் தெய்வமே துணை என்பது வழக்கம். இங்கே நாற்பது பக்க நோட்டு ஒன்றைக் கையில் பற்றியதும் தனக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக் கொள்ளும் நூதனத் திருடன் ராஜன். சந்தர்ப்பவசமாக அவனோடு வந்து சேர்கிற நண்பன் செந்தில்.

ஊரில் உள்ள பைத்தியங்களை எல்லாம் பிடித்துக் கொண்டு வந்து நூதனமாக ஒரு ஏலக்கடைக்காரரை ஏமாற்றுவது ரசிக்க வைக்கும் காட்சி. எங்கே திருமணம் நடந்தாலும் அங்கே மொய்ப் பணத்தைத் திருடிவிட்டுச் சிட்டாய்ப் பறந்து விடுவது ராஜனின் ஸ்பெஷாலிட்டி.எத்தனை திருடினாலும் செல்வ விநாயகருக்கு ஒரு பங்குப் பணத்தை தவறாமல் தந்துவிடுவது தான் ராஜனின் ஃபார்முலா. நன்றாகவே பலிக்கின்றது.

நடுவில் ஒரு பணக்கார நங்கையை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறான். அவள் சினேகிதம் காதலாகிறது. தான் செய்யும் அத்தனை பித்தலாட்டங்களும் தன் ஒரே தங்கைக்குப் பூவினும் மெல்லியதோர் வாழ்வைப் பரிசளிப்பதற்குத் தான் என்று தெரியவரும் போது உடன் வரும் சினேகிதனும் மனம் குளிர்கிறான். பிழைப்பதற்கு பாண்டியன் ஒரு ரயில்வே கூலித் தொழிலாளி. பித்தலாடுவதற்கு ராஜன் ஒரு பலேகேடி. இந்த இரட்டை வாழ்க்கை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறது. சத்தியத்தை மீறி 40 பக்க நோட்டைக் கையில் எடுக்கிற பாண்டியன் போலீசில் மாட்டுகிறான். சிறை செல்கிறான். சிறையில் சில அனுபவங்கள் நேர்கின்றன.

20-06-67 என்ற தேதி ஒன்றினைச் சொல்லி அடிக்கடி மிரட்டுகிறான் முத்து. மிரட்டப்படுபவள் ஒரு பணக்காரி. சிறையில் யாரோடும் பேசாமலேயே தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் பெரும் தனவந்தர் நாயகம். ஆசைத் தங்கைக்குத் தேடித் தேடிச் செய்து வைத்த திருமணம் சிக்கலாகிறது. தங்கையின் புகுந்த வீட்டார் ராஜனைக் காட்டிலும் பல மடங்குக் கேடிகள் என்பது தெரிந்து அதிர்கிறான் ராஜன். நாயகம் ராஜனைச் சந்திக்க வேண்டுமென்று பிரியப்படுகிறார்.

ராஜன் ஜெயிலில் இருந்து வெளிவந்தானா..? அவன் தங்கை வாழ்க்கை சீரானதா..? ராஜனின் காதல் கைகூடியதா..? நாயகம் என்னவானார்..? அதென்னது 20-06-67 எனும் எண்களின் பின்னே உறைந்திருக்கும் ரகசியம்..? அந்தத் தேதிக்கும் இவர்களது வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம்.?

மீதியை வெண்திரையில் காண்க!


நடிகர்கள்

கலைப்புலி ஜி.சேகரன் இயக்கத்தில் ஆர்.பாண்டியராஜன்- பல்லவி- செந்தில்-ஜெய்சங்கர்-மலேசியா வாசுதேவன்-பீலி சிவம்-எஸ்.எஸ்.சந்திரன்-குமரிமுத்து-சார்லி- சின்னி ஜெயந்த்-கிஷ்மு-லூஸ்மோகன்-கோடைமழை வித்யா-ஒருவிரல் கிருஷ்ணாராவ் மற்றும் பலர் நடித்த படம்.

சங்கீதம்

கங்கை அமரன்

பாடல்கள்

வாலி

கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்

கலைப்புலி ஜி.சேகரன்