Skip to content

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு

6 செந்தூரக்கவி கங்கை அமரன்

 


நாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆம் வருடம் டேனியல் ராமசாமி சின்னத்தாயி தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்த அமர் சிங் பிற்காலத்தில் கங்கை அமரன் ஆனார். இவருக்கு மூத்தவர்கள் இளையராஜா,ஆர்.டி.பாஸ்கர் மற்றும் பாவலர் வரதராசன் ஆகியோர்.சிறுவயதிலிருந்தே சகோதரர்களின் இசைமய அரவணைப்புடன் வளர்ந்தவர் அமரன். கிடார் கலைஞர் பாடகர் நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனர் எனப் பல அவதாரங்களில் வென்றவர் என்றாலும் ஒரு பாடலாசிரியர் என்பதிலிருந்தே அவரது கலைமுகவரியைத் தொடங்க முடியும். பஞ்சு அருணாச்சலத்தைப் போலவே கண்ணதாசனிடம் எழுத்து உதவியாளராகப் பணியாற்றியவர் கங்கை அமரன். இசையறிவும் எழுத்தார்வமும் ஒருங்கே இணைந்து காணப்பட்டவர். அதன் மூலமாகத் தமிழ்த் திரையிசையில் மறக்க முடியாத பல பாடல்களை எழுதிய பெருமை கொண்டவராக கங்கை அமரன் விளங்குகிறார். எல்லாச் சூழலுக்கும் பாடலெழுதுவது கடினம். அதனை எளிதாகச் செய்தவர் அமரன். கிராமத்துச் சொல்லாடல்களை வடிக்கிறாற் போலவே உலர்ந்த மேம்போக்கான நகரவாசத் தமிழையும் எடுத்தெழுதுகிற வல்லமை அவரிடமிருந்தது. பாடலாசிரியர்களில் கங்கை அமரன் ஒரு இன்ஸ்டண்ட் இண்டெலிஜெண்ட். சட்டென்று ஒரு முழுப்பாடலையும் புனைகிற ஆற்றல் அவரிடம் மிளிர்ந்தது.

“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” பாடல் பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்றது. சோகச் சாய்வுடன் கூடிய தனியாவர்த்தனப் பாடலான இதனை கண்ணதாசன்தான் எழுதினார் என்று கண்மூடி நம்பிய பலரும் கங்கை அமரன் என்று அறிந்து வியந்ததாகச் சொல்வதுண்டு. அகல் விளக்கு படத்தில் “ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே” என்ற பாடலின் பல்லவி ஒவ்வொரு சொல்லுமே முற்றுச் சொற்கள். இசையும் வரியும் இணைந்து செய்த மாயம் அந்தப் பாடல். “சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் சிறு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்” என்று எழுதி அசரடித்தார் அமரன். இன்று போய் நாளை வா படத்தில் “மதனமோகன ரூப சுந்தரி” என்ற பாடல் ஒலிக்காத நாள் இல்லை அப்போது. “என் இனிய பொன் நிலாவே” என்று மூடுபனியில் அமர் எழுதிய பாடல் தனிமையின் பரவசம். அந்தப் பாடலின் ஒளிர்நிறை அம்சம் அதில் தழுவிவருடித் தாலாட்டும் கிடார் இசைத் தோரணம். அதனை வாசித்தவரும் அமர்தான். பன்னீர்ப் புஷ்பங்கள் படத்தில் அமர் எழுதிய எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் வகையின. இடையில் சில வருடங்கள் ராஜா இசையில் பாடலெழுதுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு எண்பதுகளின் பிற்பகுதி வருடங்களில் மீண்டும் ராஜா பல பாடல்களை அமரனுக்கு அளித்தார். கரகாட்டக்காரன், சின்ன தம்பி போன்ற விண் தொட்ட பல படங்களில் அமரின் பேனா எழுதிய வரிகள் தோரணம் செய்ததும் மறுக்கவியலாது.

இயக்குனராக கங்கை அமரனின் சாதனைகள் சாகசங்கள் அளப்பரியவை. எளிதில் கடந்து சென்றுவிட இயலாதவை. முதல் படமே சில்வர் ஜூப்ளி படமான கோழிகூவுது படம். ஒருவருடம் ஓடியது கரகாட்டக்காரன். ராமராஜனோடு பெரிய வெற்றிவலம் கங்கை அமரனுக்கு அமைந்தது. கரகாட்டக்காரன்,எங்க ஊரு பாட்டுக்காரன்,செண்பகமே செண்பகமே,தெம்மாங்கு பாட்டுக்காரன் ஊருவிட்டு ஊருவந்து வில்லுப்பாட்டுக்காரன்,பொண்ணுக்கேத்த புருஷன் என இருவரும் இணைந்து ஏழு படங்களை உருக்கொடுத்தனர். பிரபு நடித்த கோழிகூவுது,கும்பக்கரை தங்கய்யா, பொழுது விடிஞ்சாச்சு,சின்னவர், விஜயகாந்த் நடித்த கோயில்காளை சரண்ராஜ் நடித்த சர்க்கரைப் பந்தல் ஏவிஎம் ராஜன் தயாரித்த தேவி ஸ்ரீதேவி அர்ஜூன் நடித்த அண்ணனுக்கு ஜே,என கங்கை அமரன் இயக்கிய பெருவாரிப் படங்கள் வசூல் வெற்றியை ருசித்தவையே. மேலதிகத் தகவல் ஒன்று உண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சந்தனத் தேவன் என்ற தலைப்பில் ரஜினி நாயகனாக நடிக்க இருந்த ஒரு படம் மற்றும் அதிவீர பாண்டியன் என்ற பேரில் கமல் நாயகனாக நடிப்பதாக ஒரு படம் என இரண்டு உச்ச நட்சத்திரப் படங்களை இயக்குவதாக இருந்தார் கங்கை அமரன். இரு படங்களும் உருவாகவில்லை.

இசையமைப்பாளராகவும் வெற்றிவாகை சூடியவர் அமரன் இமைகள் நீதிபதி இரண்டும் சிவாஜி படங்கள் சட்டம், வாழ்வே மாயம் சங்கர்லால் மூன்றும் கமல் படங்கள் இவை உட்படப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வெற்றியடைந்தவர் கங்கை அமரன். ஜீவா என் தங்கச்சி படிச்சவ சின்னத் தம்பி பெரியதம்பி உட்படப் பெருவலம் வந்த பாடல்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பன்முகத் திறனை மெய்ப்பித்தவர் அமரன்.

கிராமியப் பாடல்களில் ராஜா என்று இளையராஜாவை சொல்லமுடியும் அதன் நீட்சியாக கிராமத்துபாடல் புனைவில் கங்கை அமரனை சொன்ன பிறகுதான் வேறு யார் பெயரையும் சொல்லத் தோன்றும் அந்த அளவுக்கு 76 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் அனாயாசமாக பல கிராமத்து பாடல்களை பல்வேறு சூழல்களுக்கு எழுதி தீராத வார்த்தை பலம் கொண்டு பாடல்களை புரிந்து வருகிறார் அமரன்.

போக்கிரிராஜா படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எழுதினார் கங்கை. சட்டம் ஒரு இருட்டறை படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பாடல் எழுதினார் கங்கை அமரன்.துடிக்கும் கரங்கள் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இசையில் பாட்டெழுதினார்.ஆனந்த ஆராதனை படத்தில் மனோஜ்கியான் இசையில் பாடலெழுதினார் கங்கை. உதயா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எழுதினார்.அந்தரங்கம் ஊமையானது படத்தில் கே.ஜே.ஜாய் இசையில் காதல் ரதியே கங்கை நதியே பாடலை எழுதினார்.உல்லாசம் படத்தில் கொஞ்சும் மஞ்சள் பூக்கள் பாடலை கார்த்திக்ராஜா இசையில் எழுதியவர் கங்கை அமரன் யுவன் சங்கர் ராஜா இசையில் கோவா படத்தில் இதுவரை இல்லாத உணர்விது பாட்டை இயற்றினார்.

இளையராஜாவின் இசையில் 30 வருடங்களுக்கும் மேலாக 253 படங்களில் 570 பாடல்கள் வரை கங்கை அமரன் எழுதியிருக்க முடியும். மொத்தம் 31 படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற வாய்ப்பை கங்கை அமரனுக்கு வழங்கினார் ராஜா. கங்கை அமரன் இயக்கிய மொத்தப் படங்கள் 19. அவற்றில் இரண்டு படங்களுக்கு மட்டும் அவரே இசையமைத்தார். மற்ற 17க்கும் இளையராஜாதான் இசை. ராஜாவுடன் சேர்ந்து சங்கர்லால், ஹலோ யார் பேசுறது, கண்ணைத் தொறக்கணும் சாமி போன்ற படங்களுக்கு இணைந்து இசையமைத்தார் கங்கை அமரன். பூஜைக்கேத்த பூவிது நேத்துத் தானே பூத்தது, சோலைப் புஷ்பங்களே, தெற்குத் தெரு மச்சானே போன்ற அழியாப் பாடல்கள் பலவற்றை இளையராஜா இசையில் பாடிய பெருமிதமும் அவருக்கு உண்டு.

“என்னுள்ளில் எங்கோ ஏங்கும் உள்ளம்” எனத் தொடங்கும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் பாடல் பெண்குரல் தனிப்பாடல்களின் பேரேட்டில் தனித்தவோர் உன்னதமாக நிலைத்திருக்கிற பொன்நிகர் பாடல். வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் இரவுகளைத் திறந்தும் பூட்டியும் மாறி மாறித் தத்தளிக்கச் செய்கிற மனோபாவமொன்றைத் தயாரித்துத் தருகிற இலாகிரிப் பண்டமாகவே நிரந்தரித்திருக்கிறது.

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்


எனத் தொடங்கும் போதே உயரங்களைத் தாண்டித் தகர்த்தெறியும் ஆகாய வலமாய்த் தொடங்குகிறது.

இதன் சரணங்கள் இரண்டுமே பேரழகு மொழிப் புதையல்கள்.

என் மன கங்கையில் சங்கமிக்க-சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்-பொங்கிடும்
அன்பென்னும் பூம்புனலின் போதையிலே
மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ


இத்தனை அணுக்கத்தை நுட்பமாக எழுத்தில் வார்த்தவர் அமரன். இன்றும் இந்தப் பாடலைப் பற்பல காரணங்களுக்கெனக் குறிப்பிடுவோர் அனைவரும் வியக்கும் பொது நிஜமாகவே அதன் வரிகள் விளங்குகின்றன.இதே பாட்டின் அடுத்த சரணத்தில்

மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ

“ஆசையைக் காத்துல தூதுவிட்டு” ஆரவாரமாகட்டும், “ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது” என்ற பாடலாகட்டும் “வாடாத ரோசாப்பூ” என்ற கானமாகட்டும் ராஜாவும் அமரனும் இணைந்து உருக்கொடுத்த பல பாடல்கள் மக்களை மகிழ்வித்தவை. பெருமயக்க காலத்தை அலங்கரித்த இலாகிரி கானங்கள். இளையராஜா இசையில் வாலிக்கு அடுத்து நிறைய பாடல்களை எழுதிய கவிஞர் என்பதைத் தாண்டி வணிகத் தேவைக்கென உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு மத்தியில் தூரத்தில் ஒளிரும் நட்சத்திரம் போல “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை இங்கு முடியலாம் முடிவிலும் ஒன்று தொடங்கலாம், இனியெல்லாம் சுகமே” என்று எழுதுகிற மொழிவல்லமை கொண்டவராகவும் நினைவுகூரப்படுகிற ஒருவர்தான் கங்கை அமரன். ராஜா வீட்டுப் பாடல் கன்றுக்குட்டி அமரன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால்  என்ன துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே என் கண்ணே பசும்பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு

பரதன் இயக்கத்தில் ஆவாரம்பூ படத்துக்காக டைட்டில் பாடல் அமரன் எழுதியது இது இளையராஜா பாடினார் இளையராஜாவின் சொந்தக்குரல் பாடல்கள் பலவற்றை எழுதியவர் கங்கை அமரன் என்பது தற்செயல் ஒற்றுமை அல்ல ஒரு விதத்தில் இளையராஜாவின் மன நீட்சியாகவே கங்கைஅமரன் தன் சொற்களை ஒலித்தார்.

சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த படம் சூரசம்காரம். பல்லவி தன் தோழர்களோடு போதையில் கிறங்கி பாடுவது போல ஒரு பாடலின் சூழல் அமைந்திருந்தது போதை நியாயப் படுத்தாமல் அதேநேரம் வரம்பெதுவும் மீறிவிடாமலும் இந்த பாடலின் பல்லவியை மிக அழகாக முடித்திருப்பார் கங்கை.

பூவல்ல தேனல்ல
நான் இன்று நானல்ல
என்று முடியும் அந்த பாடல்ரஜினிகாந்த் படம் தர்மதுரை இந்த படத்தில் எல்லா பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத ஒன்றே ஒன்று அமரனுக்கு வழங்கப்பட்டது ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான் என்று தொடங்கும் அந்தப் பாடல் ரசிகர்களின் மாறாது பாடலாக மாறியது அதில் ஒரு சரணத்தை இப்படி முடித்திருப்பார் கங்கை அமரன்
பொன்னும் பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை

மகேந்திரன் இயக்கத்தில் ஜானி படத்தில் அமரன் எழுதிய ஆசைய காத்துல தூது விட்டு பாடல் ஒலிக்காத திசை இல்லை இசைக்கு  வணங்கியும்  தன் தனித்துவத்தை  இழக்காமலும் ஒலிக்கும் பல பாடல்களை எழுதினார் அமரன் இது ஒரு உதாரணப் பாட்டு

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு   பொன் மானு  தேயிலைத் தோட்டத்து மானு
ஓடிவர உன்னத் தேடிவர தாழம் பூவுல தாவுற காத்துல
மோகம் ஏறுது ஆசையில பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

படிப்படியாக காற்றை கயிறாக திரித்து அதில் ஏறி வேற்றுலகம் போனால் போல் பாடல் புனைந்தார் கங்கை அமரன்.

அறுவடை நாளில் ஒரு காவியம் எனத் தொடங்கும் கிறக்கப் பாடலில் ஒருவரி ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று என எழுதியிருப்பார். காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல பாடல் சின்னமாப்ளே காத்திருந்த மல்லி மல்லி மல்லுவேட்டி மைனர் காதல் கிளியே காதல் கிளியே ஜல்லிக்கட்டு கல்யாணச்சேலை உனதாகும் வேளை அம்பிகை நேரில் வந்தாள் கல்யாணம் என்னை முடிக்க மெட்டி கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ஆனந்தராகம், கள்ளத்தனமாக கன்னம்வைத்த காதலனே உள்ளே வெளியே , கண்ணைத் தொறக்கணும் சாமி முந்தானை முடிச்சி, கொத்தமல்லிப்பூவே புத்தம் புதுக் காத்தே-கல்லுக்குள் ஈரம் ,குயிலுக்குப்பம் என் உயிர்த் தோழன்,அழகிய கண்ணே படத்தில் நானிருக்கும் அந்த எனும் பாடல் காவிரியே காவிரியே எனும் அர்ச்சனைப் பூக்கள் படப்பாடல், நந்தவனக்குயிலே மெல்லிசை நீ பாடு பொண்ணு வீட்டுக்காரன் கோபுரங்கள் சாய்வதில்லை ஊரெங்கும் மழையாச்சு எத்தனை கோணம் எத்தனை பார்வை விதைத்த விதை பாடல் ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ ஆனந்த ராகம் படிப்புல ஜீரோ நடிப்பில ஹீரோ ரோட்டிலே ரோமியோ இளமைக்காலங்கள் உறவெனும் புதிய வானில் நெஞ்சத்தைக் கிள்ளாதே புத்தம் புதுக் காலை மற்றும் வாடி என் கப்பக்கிழங்கே இரண்டும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பனிமழை விழும் மற்றும் ஊட்டி மலை ரோட்டிலே இரண்டும் எனக்காகக் காத்திரு படத்தில் மேரீ ப்யாரி இன்று போய் நாளை வா  நண்டு படத்தில் மஞ்சள் வெய்யில் பாடல் பன்னீர் புஷ்பங்கள் முழுப் பாடல்களையும் அமரனே எழுதினார் ராஜபார்வையில் விழி ஓரத்து சங்கர்லால் படத்தில் தேடினேன் என்ற பாடல் என்று கங்கை அமரனின் பேனா பெற்றெடுத்த சொற்சித்திரங்கள் பல காலத்தால் அழியாதவை. காற்றை வலம் வருபவை.

அதிகாலை நேரமே புதிதான ராகமே என்று ஒரு பாடல் மீண்டும் ஒரு காதல் கதை தேசிய விருதை வென்றெடுத்த திரைப்படம் பிரதாப் போத்தன் இதற்கு இயக்குனர். இந்தப் பாடலின் சூழல் வினோதம் பொங்கும் மனக்கடல் சீற்றம். காதல் என்றால் என்னவென்றே உணர முடியாத இரண்டு ஜீவன்கள் தம்முள் அன்பை நேசத்தை பரிவை அத்யந்தத்தை இன்னபிறவற்றை எல்லாம் உணர்கிற அதிசயச்சூழல். அதற்கான வார்த்தைத் தேர்வு மிகக் கடினமான சவாலாகவே விளங்கிற்று. அதில் அனாயாசமாக வென்று காட்டினார் அமரன்.

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

என்று விரியும் பல்லவி சரணமாகையில்காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம் சுகம் எங்கிலும் என்றென்றும் நீயும் நானும்
சேர்வதே ஆனந்தம்.

என்று வரும். நேரடிச் சொற்கள் பூடகமற்ற வெளிப்பாடு அர்த்த ஆழங்கள் என ஜாலம் காட்டினார் அமரன்.

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது ஆடும் காத்துல கீழே தாளம் போட்டு ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது தூரத்தில் இருந்து பார்த்தால் மிக எளிதாக தோற்றமளிக்கும் இது எத்தனை கடின சொற்களைக் கொண்டு தாண்டிக் குதித்து ஓடுகிறது என்பது பாடிப் பார்த்தால் தெரியும் மீட்டருக்குள் அடங்கும் சொற்கள் என்பது சினிமாவில் வேதபாடம் அடங்கினால் தான் சொல்லுக்கு மரியாதை இன்னும் எளிதாய் சொல்வதானால் மெட்டை மாற்றுவது எப்போதாவது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகும் சொற்களை மாற்றுவதென்பது அங்கே அனுதினமும் நடக்கும் ஆகமம் உச்சரித்து பார்க்கும்போது ஒத்து வரும் சொற்கள் ராகம் போட்டு பாடும்போது முரண்டு பிடிக்கும் இது மொழியின் அழகு இசையின் நியதி தமிழின் தனித்துவம் எல்லாம் கலக்கும் சங்கம் சங்கமம் இந்த இடத்தில்தான் கங்கை அமரனை போல ஒரு கவிஞரின் சிறப்பு நன்கு வெளிப்படுகிறது சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம் இந்த பாடல் ஆகட்டும் ஆத்துமேட்டுல என கூடிய பாடல் ஆகட்டும் பார்க்க எளிதான சந்தம் ஆனால் கடக்க முடியாத கடுவளி வழி

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்
அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

இந்தப் பாடல் ஏழை ஜாதி படத்தில் ஜெயப்பிரதா விஜயகாந்தை எண்ணி பாடுவதாக அமைந்தது எஸ் ஜானகி இதனை பாடினார். சோகமும் வேகமும் ஒருங்கே அமைந்த  ஏக்க தனிமை பாடல் இது. இதன் இரண்டாவது சரணத்தில் தன்னைத்தானே வென்றிருப்பார் கங்கை அமரன்.

கூடல் என்பது கூடி வந்தது தேடி வந்தது
திரைமறைவில் தெரிகின்றது
தேகம் என்பது கோயில் போன்றது யாகம் செய்ய வா
பலன் உடனே கிடைக்கின்றது

என்று எழுதினார். தேகம் கோயிலாகையில் யாகம் செய்ய அழைப்பது காதலின் உச்சம் அல்லவா?

உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப்போல நானிருக்க நான்
சாமியை வேண்டுரேன்  கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

எளிய கிராமத்துக் காதல் மனங்களைக் காட்சிப்படுத்த எத்தனையோ சினிமாக்கள் வந்தன. 70 மற்றும் 80களின் ட்ரெண்ட் செட்டிங் படங்கள் பலவற்றை கிராமத்துக் கதைகளே ஆக்கிரமித்தன. கண்ணதாசன் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் மருதகாசி போன்றவர்கள் வடித்தெடுத்த வார்த்தைச்சாலையில் அடுத்த புரவி கங்கை அமரனுடையதாக இருந்தது.அவர் அளவுக்குச் சவாலான சூழல்களுக்குப் பாடலெழுதியவர் இல்லை என்றே சொல்ல முடியும். “உசுரே உனக்காக தான் படைச்சானே சாமிதான்” என்கிற ஒரு வரி போதும் கிராமத்து பாடல்களின் சிகரத்தில் வீற்றிருப்பது கங்கை அமரனின் பேனா வடித்தெடுத்த சொற்கள்தான் என்பதை நிறுவுவதற்கு.  மாபெரும் புராண பலம் கொண்ட கதை செறிவை எளிய சொற்களைக் கொண்ட மீச்சிறு வாக்கியங்களின் வழியாக சொல்லி போவது எல்லோராலும் ஆகக் கூடிய சாதாரண காரியமல்ல. கங்கை அமரன் அதில் மாபெரும் புலமை பெற்றவர் “வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு விடலை என்ன பாக்குது எடுத்துப் போட்ட இலவம்பஞ்சு மெதுவா வந்து தாக்குது என்று எழுதும் கவிஞர்
வில்லேந்தித் தான் போவதிங்கே வள்ளிக்கில்லே மானே மானே என்று எழுதுகிறார் இந்த சரணத்தை நிறைக்கும் வரி “புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன் தள்ளி நில்லு தேனே தேனே “என்று வருகிறது . எட்டு ஊரு பஞ்சாயத்தில் நானும் நியாயம் கேட்கவா என்ற வரியில் ஏரோப்ளேன் பறக்கிறது. உசுரே உனக்காகத் தான் படைச்சானே சாமிதான் என்ற வரி காதலாய்க் கசிந்துருக்குகிறது. புள்ளிக்குள் புள்ளி வைப்பதெல்லாம் எளிய காரியமில்லை. கவிதைத் தூறலும் காப்பியத் தூவலும் ஒன்றிணையும் புள்ளிகள் அல்லவா?

எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு என்று ஒரு பாட்டைத் துவக்குவார் கங்கை. எனது விழி வழிமேலே கனவு பல விழி மேலே என்ற பாடல் சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்றது.இந்த ராசாவை நம்பி வந்த யாரும் அட மோசமே போகப்போறதில்லே இல்லே என்று பொங்கி வரும் காவேரி படத்துக்காக எழுதினார்.தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே என்று அறுவடை நாளில் இடம்பெற்ற பாடலின் ஆரம்பமே ஆன்மாவைத் தொட்டது. சொற்களைச் சுழற்றி வீசும் சொக்கட்டான்களைப் போல் பயனுறுத்துவது அவர் பாங்கு.

ரஜினிக்கு முள்ளும்மலரும் படத்தில் ராமன் ஆண்டாலும் பாடல் வான் தொட்டது. அதிலேயே நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாட்டையும் எழுதினார். ஜானி,எல்லாம் உன் கைராசி, போக்கிரிராஜா,துடிக்கும் கரங்கள், நான் சிகப்பு மனிதன், உன் கண்ணில் நீர் வழிந்தால்,நல்லவனுக்கு நல்லவன், கைகொடுக்கும் கை, படிக்காதவன், மிஸ்டர்பாரத், மாவீரன்,தர்மத்தின் தலைவன்,ராஜாதிராஜா,மாப்பிள்ளை, தர்மதுரை,அதிசயப்பிறவி, போன்ற படங்களில் பாடல் எழுதினார் கங்கை அமரன்.

என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தொடருதே தினம் தினம்
(என் இனிய)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதன்உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே அன்பே

(என் இனிய )

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள் அன்பே

(என் இனிய )

இந்தப் படம் மனப்பிறழ்வான சந்துரு எனும் பாத்திரத்தைச் சுற்றி அமையப் பெற்ற கதை. சந்துருவை மற்றும் ஒருவன் என சாதாரணமாகவே கருதும் பலருக்கும் அவன் மனத்தின் கீறல்கள் தெரிந்திருக்காது. தாயை இழந்த சந்துரு அவள் பிரேதத்தை தன்னோடே வைத்துக் கொண்டு அவள் உயிரொடு இருப்பதாகவே காட்சிப்பிறழ்ந்து வாழ்பவன். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது. அவளைக் கவர்ந்து வந்து சிறை செய்து எப்படியாவது தன் காதலை அவளுக்குப் புரியவைத்துவிட முடியாதா என்று ஏங்கிப் பாடுவது இந்தப் பாடல். அவனை எப்படியாவது ஏமாற்றி அந்தச் சிறையினின்றும் தப்பிவிடத் துடிப்பவள் நம்புவது போல் நடிக்கிறாள். உனக்குப் பாடத் தெரியுமா எனக் கேட்கிறாள். இந்தச் சூழலை இசையினூடே கொணர்வது இளையராஜாவின் லாவகம் என்றால் இத்தனை உணர்வுகளையும் எழுத்தின் மூலம் வார்த்து எடுப்பது கங்கை அமரனின் சாகசம். இந்தப் பாடலின் இடைவரி ஒன்று எப்போது எண்ணினாலும் வியப்புத் தீராமல் விரிந்துகொண்டே செல்கின்றது.

தென் காற்றின் இன்பங்களே

இதன் கவித்துவம் ஒருபுறம், இளையராஜாவும் கங்கை அமரனுமே கூட நமக்கெல்லாம் தென் காற்றின் இன்பங்கள் தான் இல்லையா..?

மங்காப் புகழ் கொண்ட கவிஞர் கங்கை அமரன்.

அவர் பாடல் மலர்கள் ஆயிரம் காலம் தாண்டும்.


(பேசும் புதிய சக்தி இதழில் வெளியானது)