யாக்கை 9 &10

யாக்கை 9
கொக்கி


ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே  வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல் பார்த்துக் கொண்டன. எல்லா ஊர்களிலும் கதிர்கள் இருந்தார்கள். வங்கிகள் அவர்களை ஒருங்கிணைத்தன. வாலிபர்கள் சாகச உணர்வுக்காக வண்டி தூக்கும் வேலையை துணிந்து செய்தார்கள்.Two-wheeler sales may double in 9 yrs

இதில் புரளும் பணம் என்னவென்றே அறியாத சில்வண்டுகள் தான் பெரும்பாலும் சீஸிங்கில் ஈடுபட்டன. வங்கிகள் அப்படியானவர்களை உள்ளும் புறமுமாய் ஊக்குவித்து வேலை வாங்கிற்று, சீஸிங் ஏஜன்ஸிகளுக்குக் கொக்கி என்று பெயர். மதுரை கொக்கிக்கு தூத்துக்குடி கொக்கி உதவி தேவைப்படுகிறதென்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ரெண்டு பேரையும் வங்கி ஒருங்கிணைத்தது. சர்வ பலம் கொண்ட வங்கியின் பிராண்ட் லோகோ மாபெரிய ஊக்கத்தை உந்து சக்தியைத் தந்தது.

‘நீங்க ரெண்டு பேருமே என் ஆட்கள். எனக்காக வேலை செய்பவர்கள். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு வேலை பாருங்கள். எதாவது பிரச்சினை என்றால் என் பொருட்டு விட்டுக் கொடுத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் எனக்கு தலைவலி தீரும். உங்கள் எல்லோருக்கும் கை நிறையக் காசு’ என்று அன்பும் அரட்டலும் அற்ற நடுவாந்திரக் குரலில் சொல்லிக் கொடுத்தது.

கதிர் அந்த மாவட்டத்தின் நம்பர் ஒன் ‘கொக்கி’ ஆனான். பொதுவாகவே கதிர் அத்தனை நல்லவனில்லை முழுசாக நூறு ரூபாய்த் தாளை விட சில்லறையாக எண்பது ரூபாய் தந்தால் அதைத் தான் வேண்டும் எனக் கேட்கும் அளவுக்கு மாட்டுக்கு இருக்கிற மூளை தான் அவனுக்கிருந்தது. திருக்கண்ணபுரம் மிடில் ஸ்கூலில் படிக்கும் போது வகுப்பில் எல்லோர் முன்னாடியும் வச்சுத் திட்டிய பரமேஸ்வரன் வாத்தியாரை யாருமறியாமல் கடந்து செல்லும் போது சைக்கிளால் மோதினான். மோதிய இடம் அவருக்கு துரதிர்ஷ்டமாகவே ஆறு மாசம் மெடிக்கல் லீவில் வீட்டில் அலுங்காமல் வாழ்ந்து தப்பினார். அதனைக் கதிரின் தகுதியாக எண்ணிய ஸ்கூல் ‘சரிப்பா நீ படிச்சு முடிச்சாச்சு போதும்’ என்று டீசி கிழித்தது. வாங்கிக் கொண்டு வந்து விட்டான். மில் வேலைக்குச் சென்றான். அங்கே கேண்டீனில்  தொட்டதற்கெல்லாம் சண்டையாகி கேண்டீன் நடத்திய இருளப்பனின் முன் பற்களை உடைத்ததில் கேஸ் ஆகி ஜெயில் பார்த்தான்.

கதிரின் ஒன்று விட்ட அண்ணன் ஸ்பீடு சங்கரன். ஜீபீ முத்துவிடம் தொழில் பயின்றவர். கோர்ட்டு கச்சேரிப் பழக்க வழக்கங்கள் சங்கரனுக்கு இருந்தது குடும்பத்தில் அவருக்கென்று பெருத்த மரியாதையைத் தந்தது. கதிரின் அம்மாவும் சங்கரனின் அம்மாவும் உடன் பிறந்தவர்கள். சித்தி கண் கலங்கியதைக் கண்டதும் மனம் கசிந்த சங்கரன் தன் அத்தனை தொடர்புகளையும் உபயோகித்து இருளப்பன் வழக்கில் இருந்து கதிரைக் கழற்றி வெளியுலகம் காணச் செய்தார்.

இருளப்பன்  சொந்த ஊரில் பங்காளித் தகறாறில் குத்திச் சரிந்து காலமானான். கதிர் அதன்பிறகு ஜெயில் இருக்கும் வீதிப்பக்கம் கூடத் தன் தலை தென்படாமல் பார்த்துக் கொண்டான்.

சங்கரன் புண்ணியத்தில் ஊருக்குள் திரும்ப வந்தவனுக்கு   கிடைத்த மெலிதான பயம் கலந்த மரியாதை வியப்பைத் தந்தது. ‘ஓஹோ அப்படியா சங்கதி? இந்த அச்சத்தை அப்படியே பராமரித்துக் கொண்டால் போதும் போலவே’ என்று திட்டம் வகுத்தான். என்னவாக இருக்கிறோம் என்பதை விட எப்படித் தெரிகிறோம் என்பது தான் திருப்பம். அதை நன்கு உணர்ந்து கொண்ட கதிர் இன்றைக்கு சுற்றுப்பட்டு ஏரியாவில் முக்கியஸ்தர்களில் ஒருவன். அவனிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு பயல்கள் வேலைபார்க்கிறார்கள். அத்தனை பேருக்கும் அவன் தருவது தான் அஸைன்மெண்ட். ‘இந்தா அட்ரஸ் வண்டியைத் தூக்கு. கொண்டு வந்துடு. நான் பார்த்துக்கிறேன்’ என்று. தூக்குவதற்கு இருக்கும் ஆட்கள் வேறு, யார்ட் கொண்டு போய் சேர்ப்பதற்கான பணியாட்கள் வேறு. வங்கியுடன் டீல் செய்வதற்கான் தகுதி தனக்கு மட்டும் தான் உண்டு என்பதால் ஆடுகளுக்கான வாலை அவன் அளந்து ஒட்டவைத்தான்.

இருசக்கர வாகனம் ஓட்டி பதற வைக்கும் சிறார்கள்: பெற்றோரே 'இது பெருமை அல்ல பேராபத்து'
பசங்களை எதற்கும் கோபப்படாமல் அன்பொழுகப் பேசுவான் கதிர். யாரையும் இன்னொருவர் மத்தியில் திட்டமாட்டான். யார் மீது என்ன புகார் சொன்னாலும் தீர்ப்பை அறிவிக்கவே மாட்டான். ஒரு தரப்பை அனுப்பி விட்டு இன்னொரு தரப்பிடம் முதலில் விசாரணை நடத்தி பிறகு அடுத்த தரப்பை வரச்செய்து அவர்களுடன் கலந்து பேசிய பிறகு மூர்த்தியைக் கொண்டு தீர்ப்பை அறிவிப்பான். பசங்கள் அவன் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறார்கள் என்றபோதும் பசங்களிடம் அவன் கோபமே கொள்வதில்லை. அவன் தலைவன். ஒரு தலைவனின் முக்கிய முதற்குணம் படையினரோடு உரையாடுவதை முற்றிலுமாய்க் குறைத்துக் கொண்டு பார்வையாலேயே பராமரிக்க வேண்டும். அவன் அதை நன்கு செய்தான். பசங்களுடைய கண்களுக்கு கதிர் சர்வ வல்லமை படைத்தவனாகத் தெரிந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் தான் கதிர் போலாக வேண்டும் என்கிற  ஒரே கனவின் பிரதிகளாக அலைந்தார்கள்.

 

எல்லோருமே சின்னச் சின்னப் பய்யன்கள். பொதுப் பிரயோகத்தில் “சிட்டு” என்று அழைக்கப்பட்டார்கள். பதினைந்து வயது தொடங்கி இருபது வயதுக்குள் இருப்பவர்களை மட்டும் வண்டி தூக்குவதற்குப் பயன்படுத்துவது கதிரின் பழக்கம். வேலை கேட்டு வரும் பசங்களை, சிலரை வா என்கிறான், சிலரைப் போ என்கிறான். எதைக் கொண்டு தேர்வும் மறுப்பும் நடக்கிறது என்று புரியாமல் மூர்த்தி ஒருமுறை “ஏய் ஆள் நல்லாத்தானய்யா இருக்கான், வேணாம் வேணாம்ன்னு வெரட்டி விடறே?” என வாய்விட்டே கேட்டான். அப்போது எந்தப் பதிலும் சொல்லாத கதிர், இன்னொரு சந்தர்ப்பத்தில் பொறுமையாக விளக்கினான், “த பாரு மூர்த்தி, என்ன ஏதுன்னு வெவரம் புரியாத வரைக்கும்தான் நமக்கு லாபம். கொஞ்சம் முத்துன பசங்க நமக்கு இவ்ளோ தரானே, அவனுக்கு எவ்ளோ கெடைக்கும்ன்னு உக்காந்து யோசிப்பான். “புதுசா கல்யாணம் ஆன மாமா, படிச்சிட்டு வேலையில்லாம இருக்கற அண்ணன்”னு அவனை நம்பி நாலு பேரு இருப்பாங்க, இந்தத் தொழிலுக்குப் பெரிய முதலோ, நெறைய அறிவோ தேவையில்ல, நாம வளக்கற செடியே வாசலை மூடுறாப்ல நம்ம கூட இருக்கறவனே பின்னாடி இம்சையாயிடுவான். மொளைக்க மொளைக்க செரைக்கறதில்ல? அப்படித்தான். எதையும் யோசிக்காத வயசுல வரணும், அவனால நமக்கு லாபம், நம்மளால அவனுக்கு கமிஷன்னு கொஞ்ச நாள்ல உதுத்துடணும். ரொம்பத் தெளிவாயிட்டான்னு வெச்சிக்க, நமக்குத்தான் சிக்கல்.”

“நல்லா வேல பாக்கறவன அதுக்காக வெரட்டும்போது கஷ்டமா இருக்குய்யா” என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் “சொல்றத மட்டும் செய்யி மூர்த்தி, போதும். என் அறிவு தீர்ற வரைக்கும் உன் அறிவை நான் யூஸ் பண்றதா இல்லை” என்றான்.
மூர்த்தி அதற்கு மேல் பேசுவதேயில்லை.


யாக்கை 10

மான்குட்டியும் மலைப்பாம்பும்


பசங்களுக்கு சம்பளம் கூட ரெண்டாம் பட்சம் தான். வண்டியை தூக்கிக் கொண்டு வருவதில் இருக்கக் கூடிய சாகசம் தான் பெரிய விஷயமாக இருந்தது. அந்த வயதுக்குப் பறக்க வானம் தந்து பறந்து திரிய வாடகையும் தந்தால் ருசிக்காமல் இருக்குமா..? கதிரிடம் இருந்த ஐம்பது சிட்டுக்களும் நாலு டீமாக  இயங்கினார்கள். திரவியபுரம் பசங்கள் மோகனின் சிட்டுக்கள். கண்ணன் நகர் பசங்கள் ராகவனின் சிட்டுக்கள்  பவளத்திட்டு மற்றும் திருக்கொடை நல்லூர் பசங்கள் சபாஸ்டினின் சிட்டுக்கள். இவர்களைத் தவிர சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த பசங்களை நல்லமாயன் என்பவன் கவனித்துக் கொண்டான்.

‘இந்தா அட்ரஸ்’ என்றதும் உடனே கிளம்பி விடக் கூடாது. முதலில் வண்டி இருக்கும் தெரு எப்படிப்பட்டது முட்டுச்சந்தா. எந்தப் பக்கம் நுழைந்து எவ்வழியாக வெளியேற வேண்டும் என்பதை டிஸ்கஸ் செய்து கொள்வார்கள். எத்தனை பேர் செல்லவேண்டும்? நாலு பேர் போனால் ரெண்டு பேர் தூரத்தில் இருந்து கொள்வார்கள். அதாவது நடக்கப் போகும் சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போலவே எங்கோ மறைந்திருப்பார்கள். அது ஒருவிதமான மன தைரியத்தை களவு செய்பவனுக்குத் தரும் என்பதற்காகத் தான் நாலு பேரை அனுப்புவது.

ரெண்டு பேர் மட்டும் மேற்படி ஸ்தலத்துக்குச் சென்று யாரும் பார்க்காத ஒரு நிமிடத்தின் சரிபாதிக்குள் வண்டியை முதலில் சைட்லாக்கை எடுத்து ஸ்டாண்டைத் தள்ளி நாலைந்து வீடுகள் தாண்டும் வரை உருட்டிக் கொண்டே ஓடிச் சென்று விட்டு சட்டென்று ஏறி படக்கென்று ஸ்டார்ட் செய்து மின்னற் பொழுதில் காணாமற் போவதற்கான பெயர் “ஜெண்ட் ஆவது”. எதிலும் பிசிறில்லாமல் கடந்து விட்டால் அடுத்த பத்தாவது நிமிடம் கதிர் அலுவலகத்துக்கு ஃபோன் செல்லும். சம்மந்தப்பட்ட வண்டிக்காரனின் விலாசம் இருக்கும் சரகத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டி நம்பர் போட்டு ‘சீஸ்ட்’ என்று மட்டும் எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி வைப்பது மூர்த்தியின் வேலை. வண்டியைக் கொண்டுவந்து கதிர் ஆபீஸ் பின்புறம் இருக்கும் தற்காலிக ஸ்டாண்டில்  மறைத்து வைப்பதோடு சிட்டுக்களின் வேலை முடிந்து விடும்.

உடனே கையிலிருந்து டோக்காக பணத்தை எண்ணி தூக்கியவர்க்கான வெகுமதியும் உடனிருந்த இருவருக்கான சன்மானத்தையும் தந்த பிறகே அனுப்புவான் கதிர். “யாரும் நோட் பண்ணலைல்லடா. சூதா இருங்க அந்தப் பக்கம் நாலைஞ்சு நாளைக்கி போவாதிங்கடா என்பான். அட நீங்க என்னண்ணே டப்பா பயலுக. அவனுங்கள்லாம் ஒரு ஆளா” என்று சொல்லியபடியே கிளம்பிச் செல்லும் சிட்டுக்கள் அடுத்த அஸைன்மெண்டுக்குத் தான் அழைக்கப்படும். சிட்டுக்களில் சிலர் அவரவர் ஏரியாவில் டீக்கடை, பார் எங்காவது  அமர்ந்து குடியின் உற்சாகத்திலோ அல்லது நெகிழ்ந்த சந்தோசத்திலோ “அந்த வண்டியை எப்டி தூக்குனம் இந்த வண்டியை எப்டி எடுத்தம்” என்று பேசிக் கொண்டு தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டபடி அடுத்த சாகசத்திற்கான காத்திருத்தலின் இருளுக்குள் சென்று மறைவார்கள்.

“வண்டியைக் காணம்” என்று கதறியபடியே வண்டி சொந்தக்காரன் முதலில் தன்னளவில் தேடுவான். அப்புறம் மெல்ல மெல்ல ஏரியா ஸ்டேஷனுக்கு செல்வான். அங்கேயிருந்து விரட்டப்படுகையில் வங்கிக்கு செல்வான். அவர்கள் விபரம் தந்தால் தான் இப்படியான சீசிங் ஏஜென்ஸிக்குப் போகவே முடியும். ரொம்ப பேசுகிற தெனாவெட்டு கஸ்டமரை எங்களுக்கு இன்னம் ஒரு இன்ஃபர்மேசனும் கிடைக்கலை என்று வெறுப்பேற்றுவார்கள். ஒரு வழியாக சொல்கிற பணத்தைக் கட்டி வண்டியை மீட்டுச் செல்பவன் முகம் தோல்வியில் துவளும். அந்தக் கணம் அத்தனை முகமும் பார்க்கையில் கதிருக்கு வினோத சந்தோஷத்தைத் தரும். அவன் தான் அங்கே நீதிமான். பலதரப்பட்டவர்கள் அவனிடம் வந்து எதாவது சகாயம் செய்து தருமாறு கெஞ்சுவார்கள். இன்னும் ரெண்டு நாள்ல பணத்தைக் கட்டாட்டி யார்டுக்கு போயிரும் வண்டி. அப்பறம் அதைக் காணம் இதைக் காணம்னு சொல்லக் கூடாது என்று வராத அழைப்பில் யாருக்கோ சொல்வது போல் செல்ஃபோனைக் காதில் வைத்து உரக்க சொல்வான் மூர்த்தி. கேட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் வயிற்றைக் கலக்கும். உடனே என்றால் உடனே வண்டியை மீட்டுவிட வேண்டும் என்று உள்ளே இருக்கும் உருவமில்லா உருண்டைகள் இம்சிக்க ஆரம்பிக்கும்.

வண்டியைத் தங்கள் அடையாளமாகவே எண்ணுகிற பலரும் பெரும்பாலும் ஓரிரண்டு மணி நேரத்தில் மீட்டு விடுவார்கள். தப்பினால் வண்டியெனும் மான்குட்டி யார்ட் எனும் மலைப்பாம்பின் வாய்க்குள் ஆகாரமாகிச் செரிமானம் செய்யப்படும். தூக்கியதிலிருந்து எல்லா படி நிலைகளிலும் கதிருக்கு கூலியாக நல்லதொரு சன்மானத்தை வங்கி வழங்கிவிடும். கதிர் இதை மிகவும் விளையாட்டாகத்தான் ஆரம்பித்தான். ‘எதுக்குடா ரிஸ்கு’ என அவன் ஆரம்பித்த போது எச்சரித்தவர்கள் அப்புறம் அசந்து போனார்கள். அப்போது அவனுக்கே நிசமாகத் தெரியாது தான் ஒரு ஆக்டோபஸின் கரமாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்று. முக்குல போற உசுரு தொழில் செய்து போகட்டும்டா என்று தான் இறங்கினான். அவனை எச்சரித்து கேட்கவில்லை என்று முறைத்துக் கொண்டு போனவன் தான் மூர்த்தி  அதே மூர்த்தி ஒரு வருடம் கழித்து கதிரிடம் வந்து “என்னை மேனேஜர் மாதிரியாவது வச்சுக்கோ நண்பா… அதான் நீ நல்லா செட்டில் ஆகிட்டேல்ல”  என்று கெஞ்சி சேர்ந்து கொண்டான்.

கதிரின் கொள்கைகள் மெல்ல மாறிக் கொண்டே இருந்தன. அது மற்ற தொழில்களுக்கு பலவீனம். ஆனால் சர்வாதிகாரத்தினை செயல்படுத்துவதற்கான சிறந்த வழி அவ்வப்போது விதிகளை அறிவிப்பது தான். மூர்த்தி ஒரு அடிமை. சொல்வதை அப்படியே செய்யும் அடிமை. நம்பத் தகுந்தவன். ஆனால் வாய் நீளம். அவனது பிரச்சினை அவனது பயம். பள்ளிகாலத்திலிருந்து ஒன்றாகவே வளர்ந்து வந்தாலும் கனத்துப் பெருத்த உடலைக் கொண்டிருந்த மூர்த்தி ஏனோ கதிரைக் கண்டாலே பதறுவான். சிங்கத்தைக் கண்டதும் ஓடி ஒளியும் மண்டு யானை அவன். அவனை விட்டு விரட்டவும் இயலாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிற எச்சிற்பாத்திரமாகவே மூர்த்தியைப் பழக்கினான். மூர்த்திக்கும்  கதிருக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருப்பதான அதிகாரம் போதுமானதாக இருந்தது. அவன் புண்ணியத்தில் தன் வண்டி நன்றாகவே ஓடுகிறதாக அவ்வப்போது எண்ணிக் கொள்வான். அவனுடைய பெரிய குடும்பத்துக்கு கதிர் அள்ளித் தருகிற பணம் தான் ஆதாரம். கொஞ்சம் நில புலன்கள் இருந்தன. நாலு வீட்டு வாடகை வந்தது.மூர்த்தியும் அவன் மனையாளும் எட்டு வருட தாம்பத்யத்தில் ரகத்திற்கு ரெண்டு என மொத்தம் நாலு பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறார்கள். தினம் தினம் தீபாவளி அசந்தால் நடுராத்திரி என்றான தொழிலில் தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல பதினோரு மணியாவது ஆகும். அவனைத் தேடுவதற்கு அங்கே யாரும் இல்லை.

அதே மூர்த்தி இவனெல்லாம் மனுஷனா என்று கதிரைப் பற்றி முனகுவதும் பலமுறை நடந்திருக்கிறது. எவனாவது சிட்டு “அண்ணா நான் ஒரு பொண்ண லவ் பண்றேண்ணா” என்று வந்து நிற்பான். தனக்கு எல்லாமுமாகக் கதிரண்ணன் இருக்கிறார் என்று அதுவரை அவன் நினைத்து வைத்திருந்த அத்தனையும் அவனறியாமல் நொறுக்கப்படும். “அண்ணன் இருக்கேண்டா, நீ எதுக்குக் கவலப்படறே?” என்று அன்பொழுகப் பேசி அனுப்புவான். சந்தோஷமாக அவன் கிளம்பி, தெரு கடந்திருக்க மாட்டான், உடனே மூர்த்தியை பெல்லடித்து அழைத்து, “இப்ப வந்துட்டுப் போறானே வினோத்து, இவன் கூடவே திரிவானுங்களே மணி, வசந்து, மூணு பேரையும் எதுக்காகவும் இனிமே கூப்புடாதே. ஒரு மாசத்துக்கு எந்த வேலையும் இல்லன்னு சொல்லிடு. நாசுக்கா கழட்டிரு. என்னயப் பாக்கணும்னு சொன்னா எப்பவுமே விடாத.”

அதையும் மீறி வீட்டு வாசலில் காரில் ஏறப்போனவன் காலில் வந்து விழுந்தான் வினோத். இவன் யார் என்றுதான் யோசித்தான் கதிர். “அண்ணே புதுசா கல்யாணம் பண்ணிருக்கேண்ணே. வேற வேல தேடிக்கிற வரைக்குமாச்சும் சான்ஸ் குடுக்கச் சொல்லுங்கண்ணே. எத்தன வண்டி தூக்கியிருப்பேன், எவ்ளோ ரிஸ்கு எடுத்திருப்பேன், கொஞ்சம் நெனச்சுப் பாருங்கண்ணே. பாதியில அத்துவிட்டா மாதிரி, கூப்புடவே மாட்றாங்கண்ணே”, “அடடா எனக்கு எதுவுமே தெரியாதே” என்று அங்கேயும் அன்பொழுகப் பேசிவிட்டு “இந்தா இத செலவுக்கு வச்சுக்க” என்று பணம் கொடுத்து, “இன்னிக்கு ஊருக்குக் கெளம்பறேன், நாள கழிச்சு ஆஃபீஸுக்கு வந்து பாரு” என்று காரில் ஏறிப் பறந்தான். மீண்டும் மூர்த்தியிடம், “என்னமோ ரிஸ்கு எடுத்தேங்கறான், அவன இந்தத் தெருப்பக்கமே விடாதே” என்றவன், “வாசல்ல பசங்க இருந்தா ரகுபதியையும் சுரேஷையும் வரச்சொல்லு” என்றான். வந்தவர்களை அமரவைத்து அன்பொழுக ஆரம்பித்தான், ” வினோத் ஆளு சுத்தமில்லடா. ரெண்டு மூணு எடத்துல சொதப்பிட்டான், திருட்டுப் பய வேற, நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. அந்தப் பொண்ணு வீட்டுல வேற அவன் மேல கோவமா தேடிட்டிருக்காங்களாம்” என்று ஆனமட்டும் பற்றவைத்து அனுப்பினான். எல்லாம் தெரிந்தாலும் மூர்த்தி வாயே திறப்பதில்லை.

(வளரும்)