எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள்

17 கிரிக்கெட்


 

அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும்  சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத ஒரு தட்பவெப்பத்தில் ஏன் எதற்கென்றே தெரியாமல் பலரும் அவற்றை அணிந்து கொண்டு வியர்வை ஏஜண்டுகளாகத் திரிவதெல்லாம் தீவினை. கிரிக்கெட்டை நமக்குக் கற்றுக் கொடுத்தவர்களையே பலமாகப் பலமுறை தாக்கி நாம் வென்றதெல்லாம் வரலாற்று நல்வினை.In Pics: Former Indian Cricket Skipper Kapil dev special photo album, pics,  images, 1983 world cup kapil dev stills | Kapil Dev Photos: 83 நாயகன்  கபில்தேவின் ரேர் புகைப்படங்களின் கலெக்ஷன்ஸ்...!

 

தகவல் தொடர்பு வளர வளர கிரிக்கெட் ஆட்டத்தின் முகமும் மாறிக் கொண்டே வருகிறது. இன்றைய டி20 மேட்சுகள் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு முன் பழைய காலத்தில் கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட் தான் . அப்போதெல்லாம் கிரிக்கெட் மேட்ச்சை நேரில் சென்று பார்ப்பதெல்லாம் மிகவும் சொற்பமானவர்களின் அபிலாஷையாகத் தான் இருந்தது. ஐந்து முழு நாட்களைக் கொண்டு போய் மைதானத்தில் தூவித் திரும்பப் பலராலும் முடியாது. செல்வந்தர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் தவிர வெகு சில வெறியர்களுக்கும் மட்டுமே கிரவுண்டில் மேட்ச் பார்க்க வாய்த்தது. மற்றவர்களுக்கெல்லாம் செவி வழிச் சேதிகள் தான் சிற்றின்பம் சேர்த்தன.

 

ஆங்கிலப் பேப்பர்களிலும் தமிழில் வாரப் பத்திரிகைகளிலும் தான் பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய கவரேஜ்கள் வரும். எழுபதுகளின் இறுதியில் கிரிக்கெட் எனும் ஆட்டத்துக்காகவே தனிக் கவனம் செலுத்தும் பத்திரிகைகள் தொடங்கப் பட்டன. ஸ்போர்ட்ஸ்வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ்டார் இரண்டும் அவற்றில் மிக முக்கியமானவை. வாராந்தரி தமிழ்ப் பத்திரிகைகளில் எப்போதாவது விளையாட்டு ஸ்பெஷல் எனப் பகிர்வார்கள். கிரிக்கெட் ஸ்பெஷல் என்றெல்லாம் தனியே வந்ததெல்லாம் எழுபதுகளின் எல்லையில் தொடங்கி எண்பத்து மூன்றில் கபிலதேவர் தலைமையில் கப்படித்து வந்த பிறகு தான். அது வரை கிரிக்கெட் என்பதும் டிகாஷன் காபி போல் காணாப் பண்டமாகவே உலா வந்தது.

 

கிரிக்கெட் என்றாலே ரேடியோ காமென்டிரி தான். இப்பொழுது போல் தமிழில் ஒரு டப்பா ரூமில் உட்கார்ந்து கொண்டு அறுவை ஜோக்குகள் என்ற பேரில் மொட்டைப்பேச்செல்லாம் பேச யாரும் இல்லாத நற்காலம் அது. அப்போது காமெண்டரி என்றாலே ஆங்கிலப் புலமைகொண்ட  அநாயாசர்கள் தான் அசத்தினார்கள்.  மாநில அளவில் சுருக்கமாக நடைபெறக் கூடிய ரஞ்சி ட்ராபி ஆட்டங்களுக்கு வர்ணனையாளர்கள் தமிழிலும் மொழிந்தார்கள் என்ன ஒன்று ரஞ்சி போட்டிகளுக்கு ரேடியோ ப்ராப்தி பெரும்பாலும் கிடைக்காது. நேரில் சென்று பார்ப்போருக்குத் தான் தமிழாரக் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.

 

அப்பாவிடம் இருந்த ஒரு ரேடியோ எங்கள் வீட்டில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அப்போது எலெக்ட்ரிசிடியில் ரேடியோ கேட்பது அவ்வளவு புழக்கத்துக்கு வராத காலம். எவரடி அல்லது நிப்போ குண்டு பேட்டரி செல் தான் ரேடியோவுக்கு ஆகாரம். ஒரு ஸெட் பேட்டரிகளை வாங்கி அதையே இருள் நீக்கும் டார்ச் லைட்டிலும் இன்பம் சேர்க்கும் ரேடியோவிலும் மாறி மாறி உபயோகிப்பது வீட்டின் சட்டதிட்டம். தாராளமாகச் செலவு செய்து தாக சாந்தி செய்துகொண்ட அப்பாவுக்கு நாலு பேட்டரி வாங்குவதெல்லாம் ஜூஜுபி காரியம் இருந்தாலும் அவர் கருமமே கண்ணாயினார். குடிப்பதற்கு ஒரு மனமிருந்ததே ஒழிய பேட்டரி வாங்குவதற்கு அடுத்த மனம் இல்லாமற் போனார். ஆகவே அம்மாவின் சிக்கனாதி சட்ட திட்டங்களுக்கே அவரும் ஆட்படுவார்.

டெஸ்ட் மேட்ச் எதாவது நடக்கிறது என்று வாசனை வந்துவிட்டால் ஒழிந்தது. அப்பாவைக் கையில் பிடிக்க ,முடியாது அந்த ரேடியோவின் ஆக்ருதிக்கு ஆட்படாத ஸ்டேஷன்களைக் கூடத் தன் தவ வலிமையால் திருகித் திருகிக் கேட்கவைத்து விடுவார்.உண்மையாகவே எங்கோ தூரத்தில் நடக்கிற ஆட்டத்தின் ஓசை தான் கேட்கிறதா அல்லது பிரமையா என்று ஐயப்படும் அளவுக்கு அந்த ரேடியோ பெட்டியின் மேற்புறத்தில் தன் முகத்தின் ஒரு புறத்தை பசை போட்டாற் போல் ஒட்டிக் கொண்டு வர்ணனையைக் கேட்பார். உடலை அங்கே இருத்தி விட்டுத் தன் உயிரை ரேடியோ பெட்டியின் மூலமாகக் கடத்திச் சென்று மேட்ச் நடக்கும் மைதானத்தில் ஒரு உருவமற்ற பறவை போல உலாவித் திரும்புவார் அப்பா.

அவரது தணியாத ஆட்ட தாகத்தின் விளைவாக எனக்குச் சில பல கிரிக்கெட் பதங்கள் அறிமுகமாகின மிட் ஆன் மிட் ஆஃப் எக்ட்ஸ்ட்ரா கவர் கல்லி என ஒவ்வொன்றையும் பற்றி அப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அப்பாவுக்குப் பெரிய படிப்போ புலமைப் பின் புலமோ இல்லாத போதிலும் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய தெளிவான அறிதல் இருந்தது. அந்த விடயத்தில் ஒருவிதமான காலாதீத முழுமையோடு அவர் தெளிந்திருந்தார். அந்தத் தெளிவைக் கொஞ்சமேனும் எனக்குக் கடத்தவும் உதவினார்.

கிரிக்கெட் ஆட்டம் மூன்றாவது உலகக் கோப்பையின் போது இந்தியா எனும் நாட்டின் அணியை மற்ற முதல் தர அணிகளுக்குச் சமமாக நிறுத்தத் தொடங்கியதை நாடே வியப்போடு பார்க்கலாயிற்று. மிகச் சத்தியமாக அந்த ஆண்டு கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்கிற ஆருடங்களில் இந்திய அணியின் பெயரைக் கூடப் பெரிதாக யாரும் முன்மொழிந்திருக்கவில்லை. ப்ரூடென்ஷியல் உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தேர்வாகும் போதே கண்களில் தீப்பிடிக்கத் தொடங்கியிருந்தது. எதிரே உலகின் ஆகச்சிறந்த அணிகளான இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் ஆடப் போவதாக அறிந்த யாருமே இங்கிலாந்தா மேற்கிந்தியத் தீவுகளா என்று தான் பந்தயங்களைத் தொடங்கினரே ஒழிய இந்தியாவா என்றெல்லாம் பெரிதாக யாரும் கவலைப்படவே இல்லை.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா ஒருமுறை தீவுகளிடமும் இன்னொன்றில் ஆஸ்திரேலியாவிடமும் தோற்றிருந்தது. மற்ற நாலு ஆட்டங்களில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் எல்லாமே 60 ஓவர் ஆட்டங்கள் என்பதால் நின்று நிதானமாக ஆடுகிற டெஸ்ட் மேட்ச்சின் மிச்ச சொச்சங்களும் பல ஆட்டங்களில் தொடர்ந்து கொண்டே இருந்ததும் உண்மை. ஒரே நாளில் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவதில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. அடுத்ததில் தீவுகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் மோதல். ஜூன் 22 புதன் கிழமையன்று அந்த இரண்டு ஆட்டங்களும் நடந்தன.

அப்பா அதற்கு முன் தினம் உறங்கவே இல்லை. விழிகள் சிவக்க விஜயகாந்த் போல இல்லையில்லை வினுச்சக்கரவர்த்தி போல மேட்ச்சின் ஒவ்வொரு நகர்தலையும் உன்னித்தபடி தனக்குத் தானே என்னென்னவோ முணுமுணுத்தவண்ணம் இருந்தார். இரண்டு போட்டிகளின் முடிவும் வெளியான போதே நாம தான் கப் அடிக்கிறோம் என்று பலமுறைகள் சொல்லிக் கொண்டே இருந்தார். அந்தக் கபிலதேவருக்கோ கவாஸ்கரருக்கோ கூட அத்தனை கான்ஃபிடென்ஸ் இருந்திருக்காது. அப்பாவுக்கு அளப்பரிய நம்பிக்கை. இந்தியா இங்கிலாந்தை வென்றதும் பாகிஸ்தானைத் தீவுகள் சரித்ததும் அப்பாவுக்குப் பரம திருப்தி. நாம ஜெயிச்சா வரலாறு ஒருவேளை தீவுகள் கிட்டே நாம தோத்தாக் கூட அது பெரிய மரியாதை தான் என்று தீர்ப்பை அளித்தார். அவருடைய ஆப்தர்கள் அடிப்பொடிகள் எல்லோரும் அதை ஆமோதித்தார்கள்.

’83: The story behind India’s greatest win
அதே வாரம் சனிக்கிழமை இறுதிப் போட்டி. அப்பா அப்போது செங்கோட்டை வண்டியில் கண்டக்டராக போய் வந்து கொண்டிருந்தார். வியாழக்கிழமை டூட்டிக்குப் போனவர் வெள்ளி இரவு வீடு திரும்பினார். சரக்கு எதுவும் அடிக்காமல் வீட்டுக்குத் திரும்பி வருகிற அதிசயத்தை அவ்வப்போது நிகழ்த்தி எங்களை இன்பத்தில் ஆழ்த்துவார். அன்று அப்படி ஒரு தினம். அம்மாவிடம் இரவு பத்தரை மணிக்கு தோசை வார்க்கச் சொல்லி கேட்டவர் நா குளிச்சிட்டு வந்துர்றேன் என்று கிணற்றடிக்குப் போனார். அரவம் கேட்டு எழுந்து விட்ட பாட்டி தானே தோசைகளை வார்த்துத் தந்தார். நெடுநேரம் உறங்காமல் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்த அப்பா நாளைக்கு ஃபைனல் மாட்ச்சு. நிச்சயமா நம்ம தான் ஜெயிக்கிறம் என்றார்.

மறு நாள் பயபக்தியாக காலையிலேயே எழுந்து குளித்து விட்டு தும்பைப்பூ முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேல் வரை சுருட்டி மடித்து விட்டு அதில் வலது கை மடிப்பில் ஒன்றோ இரண்டோ நூறு ரூபாய்த் தாட்கள் இடது கை மடிப்பில் ஐம்பதும் இருபதும் ஒன்றிரண்டு பத்து ரூபாய்த் தாட்களும் ஒளிந்திருக்கும். பையில் முப்பது ரூபாய்க்கு மேல் வைத்துக் கொள்ள மாட்டார். போதையில் எவனாவது லவுட்டிக் கொண்டாலும் ஐந்து பத்துக்கு மேல் இழக்கக் கூடாதெங்கிற முன் தீர்மானம்.

பாண்ட்ச் பவுடரைப் பின் கழுத்து முகம் தொடங்கி முதுகு வரை பூசிக் கொண்டவர் நெற்றியில் அளவாக திரு நீற்றைப் பூசிக் கொண்டு தயாரானார். நாலு வீடு தள்ளி அவரது காங்கிரஸ் தோழர் விஜயன் தன் ஸ்கூட்டரில் வந்து சேர்ந்ததும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு தானப்ப முதலித் தெருவில் ஆடிட்டர் வீட்டுக்குக் கிள்ம்பிப் போனார். அங்கே ஒரு குழுவாக கிரிக்கெட் அன்பர்கள் காமெண்டரி கேட்பதற்கு ஏற்பாடு.

அப்பாவுக்கு எல்லா மாட்ச்சிலும் டாஸ் ஜெயித்தாக வேண்டும். அப்படி ஜெயிப்பது அதிருஷ்டத்தின் அறிகுறி. டாஸ் தோற்றால் அபசகுனம். அந்த இறுதிப் போட்டியில் டாஸ் தோற்றதாகத் தெரிந்ததுமே அதிர்ச்சியான அப்பாவுக்கு நாம் தான் முதல் பேட்டிங் என்றதும் ஒரு ஆறுதல். நாம முதல்ல ஆடிரணும் அப்பத் தான் பதஷ்டமில்லாம பவுலிங் போடலாம். அத்தனை டென்ஷனும் அவங்களுக்குக் கடத்தலாம் என்று சொல்லிக் கொண்டார்.

அப்பாவின் ஆருடங்கள் வீண் போகவில்லை. இந்திய அணி 43 ரன் வித்யாசத்தில் இரண்டு முறை தொடர் சாம்பியனான தீவுகளைத் தரையில் சாய்த்தது. உலகக் கோப்பையை கபில் தேவ் ஏந்திய போது அப்பாவும் சகாக்களும் யானைக்கல்லில் இருந்த சாராயக் கடையில் ஏகபோகயோகத்தை உணர்ந்து உய்யும் பெருத்த நோக்கத்தோடு திரவம் நிரம்பிய கோப்பைகளை ஏந்திக் கொண்டிருந்தனர். கபில்தேவ் உள்ளிட்ட எந்த வீரருடைய திறன் தானத்தை விடவும் அப்பாவின் ஆருட தானம் ஒன்று தான் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முதல் மற்றும் முக்கியக் காரணம் என்று அத்தனை அன்னக்கரங்களும் தம்ளரில் அடித்து சத்தியம் செய்தன. அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை அப்பாவுக்கு சாயந்திரம் சூர்யன் கலைந்த பிற்பாடு தான் லேசாய்த் தெளிந்தது. முந்தைய நெடிய கனவில் ஸ்ரீகாந்தும் அமர்நாத்தும் கூட அப்பாவின் ஆருடத்துக்கு நன்றி சொல்லி அவரை மகிழ்வித்தார்கள்.

அப்பாவுக்குத் தன் கணிதமகா சக்தியும் யூகமகா திறமையும் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்திய அணி வெல்வதற்கும் தோற்பதற்கும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன என்கிற சம்சயம் நெடுங்காலம் இருந்தது. எந்த அளவுக்கென்றால் நன்றாக அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மட்டையாளன் நன்றாகவே தொடர்ந்து அடிப்பதற்கும் சிக்கனமாக அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருக்கும் ஒரு பந்து வீச்சாளன் தொடர்ந்து அப்படியே பந்து வீசுவதற்கும் தான் ஒரு கையை உயர்த்தி விதானத்தைப் பற்றிக் கொண்டிருப்பதோ அல்லது வலது காலை மடக்கி திண்ணையில் அமர்ந்திருப்பதோ தன காரணம் என்று முழுதாக நம்புவார். அப்படியே தொடர்ந்து ஆட்டம் ஒரே திசையில் செல்லும் வரை அப்படியே தானும் நிற்பார் அல்லது கரம் உயர்த்தியபடி இருப்பார். கையை மடக்கி விட்டாலோ அல்லது காலை எடுத்து விட்டாலோ இந்திய அணியில் வெற்றிகரத்துக்கு அது ஊறாக விளையும் என்று நம்புவார்.

எந்த அளவுக்கு அப்பா தன் செண்டிமெண்ட் முட்டாள் தனங்களுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தார் என்றால் ஒரு முறை டெண்டுல்கர் விளாசத் தொடங்கிய நேரம் அவர் வலது காலில் சில சிற்றெறும்புகள் கடிக்க ஆரம்பிக்க அறுபத்து மூன்று ரன்களில் சச்சின் அவுட் ஆகும் வரை தன்னைக் கடித்த எறும்புகளை அப்பா அப்புறப்படுத்தவே இல்லை.

“இவன் வந்தான் அதான் அவன் அவுட்டு. நீ கத்தின அதான் அவன் அவுட்டு. அப்பவே நீ தும்மின. அதான் அவன் அவுட்டு” என்றெல்லாம் சுற்றத்தாரைக் கொடூரமாய்க் கொடுமைப்படுத்துவார். கிரிக்கெட் என்னும் ஆட்டத்தின் மீது தன் உயிரையே வைத்திருந்தார் அப்பா. இன்னமும் சூப்பர் ஓவர்-எண்ணற்ற சமீபத்திய விதிகள்-டி20 உள்ளிட்ட சமீப ஆட்டங்களின் பெருத்த ஆரவாரம் காதில் விழும்போதெல்லாம் அப்பாவின் கிரிக்கெட் ஆர்வமும் ஆட்டங்களின் மீது அவர் கொட்டிய பற்றுதலும் பலாயிரம் எண்ணக் கீற்றுகளாக வந்து போகத் தான் செய்கின்றன.

புக் கிரிக்கெட் விளையாடினால் அப்பாவுக்கு பெரும் கோபம் வரும். ஓடியாடி எஞ்சாய் பண்ண வேண்டிய ஆட்டத்தை சும்மா புஸ்தகத்தைப் புரட்டிகிட்டு ஆடிற முடியுமா..? ஆடுறதானா நெசம்மா ஆடு. ஒரு கை பார்க்குறது தான் அந்த ஆட்டத்துக்கு மரியாதை. என்ன நான் சொல்றது…? என்பார்.

அப்பாவைப் பொறுத்த வரை நிஜ பால் நிஜ பேட் என கிரிக்கெட் என்றாலே வெறும் நிஜம் மட்டும் தான் ஒஸ்தி.

மற்றதெல்லாம் பம்மாத்து தான்.