எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள்

18 இரவு


சின்ன வயதில் இரவுகள் ஒளிரும் விளக்குகளை பொறுத்து எந்த பயமும் இல்லாமல் அமைந்தன. வடக்கு மாசி வீதி ,சிம்மக்கல் மற்றும் புதூர் என 13 வயது வரை நகரத்தின் சந்தடி மிகுந்த தெருக்களில் குடியிருக்க வாய்த்தது. அதன் வசதிகளில் முதன்மையானது வெளிச்சம். இருள் என்பது குறைந்த ஒளி என்பதை திருப்பிப் போட்டாற் போல் ஒளியற்ற இருள் என்பது அநேகமாக இல்லவே இல்லை. சொல்லப்பட்ட கதைகளும் ஏற்படுத்தித் தரப்பட்ட தனிமைகளும் மெல்ல மெல்ல இருளை ஒரு முக்கிய கதாபாத்திரமாக்கி சிறு வயது வாழ்க்கைக்குள் உலா வரச் செய்தன.

புதூர் வீட்டில் இரண்டு வீடுகள் அடுத்தடுத்தாற் போல் இருக்கும். இரண்டுக்கும் பொதுவாக பின்புறம் கிணற்றுக்கு அப்பால் குளியலறையும் கழிப்பறையும் இருக்கும். குளியல் அறை பெரும்பாலும் பகல் பொழுதுகளில் மட்டும் உபயோகிப்பது. கழிப்பறைக்குச் சென்று வர வேண்டுமானால் யாராவது துணைக்கு நிற்க வேண்டும். நாங்கள் கேட்டோமா அல்லது வழங்கப்பட்டதா என்பது சரியாக நினைவில்லை. நானும் சரி அக்காவும் சரி அடுத்த வீட்டு குழந்தைகளும் சரி, மாலைக்குப்பின் கழிவறை சென்றால் வாசலில் கதவுக்கு அப்பால் யாராவது துணைக்கு நிற்க வேண்டும். அனேகமாக பாட்டி தான் வருவாள். அவளுக்கு சரியாக காது கேட்காது. உள்ளே சென்று நேரம் ஆனால் வெளியே இருந்து கேள்வி கேட்பாள். நான் சொல்லும் பதில் நிச்சயமாக அவளுக்கு கேட்கப் போவதில்லை ஒரு விதமான நினைவுபடுத்தல் மாத்திரம் தான். 8 வயதுக்கு மேல் நீயாக போய்க்கொள் என்று அனுப்பும் போது பயங்கள் பெரிதாகின.

ஒரு தினம் கழிப்பறைக்கு சென்று விட்டு வரும் வழியில் கிணற்றடியில் நெட்டு குத்தலாய் அமர்ந்தபடி அப்படியே உறங்கி இருந்தேன். வெளியே போன பிள்ளையை காணோம் என்று தேடி வந்த பாட்டி அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் என்னை பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டாள். நடந்ததன் வினோதம் அவளை பயமுறுத்தி விட்டிருக்கும். நேரே சென்று அம்மாவையும் அப்பாவையும் எழுப்பி அழைத்து வந்து விட்டாள். நான் மலங்க மலங்க விழிப்பதை போலவே அக்காவும் கண்களை தேய்த்துக்கொண்டு வந்து பார்க்கிறாள். அது ஒரு முழு நிலவு நாள். அந்த மாதத்தின் மிக அதிகமான வெளிச்சம் வழிந்து கொண்டிருந்தது.

அம்மாவும் அப்பாவும் என்னிடம் ஏதேதோ கேள்விகளை கேட்க எனக்கு எதற்குமே பதில் தெரியவில்லை. என் காதில் எந்த கேள்வியும் சரியாக விழவில்லை என்பதும் நிஜம். அவர்களை அதட்டிய பாட்டி என்னை நேரே சாமி செல்ஃபுக்கு அழைத்துச் சென்றாள். தன் மூன்று விரல்களால் திருநீற்றை அள்ளி என் நெற்றி தெரியாமல் முழுக்க பூசினாள். ஏதேதோ சுலோகங்களை முணுமுணுத்தவள் நெடுநேரம் தன் மடியில் என் தலையை இருத்தி சிகையைக் கோதிக் கொண்டே இருந்தாள். அடுத்த தினம் நல்ல காய்ச்சல் அடித்து அது குறையும் வரை கண்கலங்கியபடி இருந்தாள்.

வேறு எதற்கும் இல்லாமல் போனாலும் இரவுகளை சமாளிப்பதற்காகவது ஒரு சொந்த வீடு வேண்டும் என்று பாட்டி,அம்மாவை வலியுறுத்த ஆரம்பித்தாள். குழந்தைகள் அவசரத்துக்கு போயிட்டு வர வீட்டோடு சேர்ந்தால் போல் கழிப்பறை இருந்தாக வேண்டும் என்பது பாட்டியை பொருத்தவரை மிக முக்கியமான சொகுசு. அந்தக் கனவு நிறைவேறிய போது சொந்த வீடு அவளுக்கு சொர்க்கம் போல் ஆயிற்று.

எனக்கும் அக்காவுக்கும் கிடைத்த புதிய வீடு அதில் அட்டாச்ட் பாத்ரூம் .சொந்தமாக ஒரு வீடு அடிக்கடி காலி செய்ய தேவையில்லை என்பதை எல்லாம் தாண்டி அதுவரையிலான நகரத்தின் சந்தடி மிகுந்த சாலைகளையும் வெளிச்சம் ஒளிரும் இரவுகளையும் இழந்துவிட்டது ஒருவகையில் பேரிழப்பாக தோன்றியது. திருநகரை தாண்டிய குறிஞ்சி நகர் செவ்வாய் கிரகத்தில் அம்மா வீடு கட்டியதாக அடிக்கடி கேலி செய்து கொண்டிருந்தோம். நாங்கள் வளர்ந்து குழந்தை என்கிற நிலைமை மாறி பதின் பருவத்துக்குள் நுழைந்திருந்தோம் அதன் பின்னரும் இரவு என்பது எங்களுக்கு மெல்ல பழக்கமாகி ரசிக்கத் தொடங்கும் வரை ஒரு நான்கு வருடங்களாவது இரவின் தனிமை அது தந்த பயங்கள் வெவ்வேறு ரூபங்களில் கலைந்து தொடர்ந்தபடி இருந்தன.

வயல்களை அழித்து வீட்டு மனைகளாக ஆக்கியதற்கான அவரவர் விலைகளை தந்து தான் ஆக வேண்டும். திருநகர் ஐந்தாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறிஞ்சி நகருக்கு வந்து சேரும்போது ஆசிரியர் குடியிருப்பு வரை நெருக்கமாக வீடுகள் இருந்தன. அங்கே தெரு விளக்குகள் ஒன்று விடாமல் எரிந்தன. ஆசிரியர் குடியிருப்பில் தாண்டியதும் ஒரு பரந்த வெட்டவெளி பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான இடம் இருந்தது ஜே சி பி உள்ளிட்ட ராட்சத இயந்திரங்கள் அவற்றின் உபரி டயர்கள் அங்கே இருபுறங்களிலும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 2 டயர்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கினால் எட்டடி உயரம் இருந்தது. சுற்றிலும் கருவேல செடி முள் பூத்துக் கிடந்தது.

மாலை 6:30 மணிக்கு அந்த இடத்தை கடக்கும் போது செவ்வாய் கிரகம் இதைவிட பரவாயில்லை போலும் எனத் தோன்றும். உண்மையைச் சொல்வதானால் அப்படி கடந்து செல்வதை ஒப்பிடும்போது புதூர் வீடும் பின்னால் தள்ளி இருந்த கழிவறையும் ஒரு பிரச்சனையே இல்லை என்பதே நிஜம்.   சொந்த வீட்டை காட்டிலும் வாடகை வீடு பிரமாதம் என்று ஒரு முறை வாய்விட்டுச் சொல்லி அம்மாவும் பாட்டியும் ஏகத்துக்கு என்னை ஏசினார்கள்.

அடுத்து வந்த வருடங்களில் குறிஞ்சி நகரும் அதன் பின்னால் சிவகாமி நகரும் வரும்படியில் இடது புறம் அரவிந்த் நகரும் வீடுகள் அதிகரித்து விளக்குகள் எண்ணிக்கையில் பெருத்தன. வயதுகள் கூடி மனநிலை மாறிப் பின் இருளும் தனிமையும் நாள்பட்ட பரிச்சயம் கனிந்து அத்தியந்தமானது போலாகிற்று.

பாட்டி முதுமை காரணமாக இயற்கை எய்தினாள். சில வருடங்களில் அப்பா நோய்மை வலுத்து இறந்து போனார். கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். வீடு தேடி வரும் நண்பர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாயிற்று. இரண்டு மணி நேரமாவது ஆனால் ஒழிய அம்மா கீழே வரும்படி நிர்பந்திக்க மாட்டாள். இப்போது வேறு வகையான முழு நிலவு தினங்கள் வந்து போயின இரவு என்பது எதையும் ஆட்சேபிக்காமல் எப்போதும் உடன் இருக்கும் ஒரு சஹ்ருதயன் போல் கூடவே வந்து கொண்டிருந்தது.

நண்பர்கள் எண்ணற்றவர்கள். இரவை பகிர்ந்து கொள்ளும் ஆட்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள்.

நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு மாடியிலேயே உறங்கி காலையில் எழுந்து வீடு திரும்புவது ராஜசேகர் பரணி போன்றவர்கள் அநேகமாக மாதம் ஒரு முறையாவது பெரும்பாலும் சனிக்கிழமை இரவு அப்படி கழிப்போம். வாய் வலிக்காமல் பேசிப் பேசி பொழுது கழிப்போம். பேசியது போதும் என தோன்றுகையில் மௌனமாக வான் பார்ப்போம். என் நண்பர்கள் தான் எனக்கு வானத்தை அறிமுகம் செய்து வைத்தவர்கள். சேகருக்கும் பரணிக்கும் மூவேந்தனுக்கும் வானம் என்பது சலிக்காத பேசு பொருள். ஆரம்பத்தில் நான் வெறுமனே வானத்தை வியப்பவனாக மாத்திரம் இருந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் வானம் என்பது போய் வர தேவையற்ற பயணங்களை சாத்தியப்படுத்த தொடங்கியது.

மொட்டை மாடியில் படுத்து கிடந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது என்பது ஒரு செயல்பாடு அல்ல அது ஒரு வகையில் மேதமை அடைதல். மொழிகளும் சொற்களும் தத்துவங்களும் சாத்தியப்படுத்தாத பண்படுதலை வான் பார்த்தல் செய்து தரும். பின் நாட்களில் என்னவாக மாறுவது என்பது போன்ற விடை தெரியாத கேள்விகள் பலவற்றுக்கு வானம் பெருத்த ஆறுதலை பதிலாக தந்து கொண்டிருந்தது. ஒருவகையில் மனம் முழுவதும் பரந்துபட்ட காதலை கனிதலை சாத்தியப்படுத்துவதற்கு தேவையான முகாந்திர அன்பை விதைத்துத் தந்தது வான் பார்த்த கணங்கள் தான் என்று தோன்றுகிறது.வானம் என்பது இழக்க முடியாத நட்பு. துரோகம் அறியாத துணை. சூல் திரும்புவதற்கான ஒரு வழிப்பாதை. வாலிபத்தில் ஒவ்வொருவரும் கட்டாயம் புகுந்து திரும்ப வேண்டிய குருகுலம். நிகழ்ந்ததும் திகழ்ந்ததுமான வான் பார்த்த கணங்களை எப்போது எண்ணினாலும் மனம் அடைகிற குளிர் மை இணை சொல்ல முடியாதது.

காலம் சென்ற சரவணப் பிரசன்னா சிவகாசியில் இருந்து மதுரைக்கு படிக்க வந்தவன். அவனைக் குறித்து ஏற்கனவே மனக்குகைச் சித்திரங்களில் நிறைய எழுதி இருக்கிறேன். எங்கள் வீட்டை தாண்டி குறிஞ்சி நகரின் எல்லையில் ஒரு தனி வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டிருந்தான். அவனும் நானும் அவனது அறையில் அல்லது எனது வீட்டு மொட்டை மாடியில் மாறி மாறி எங்கள் இரவுகளை செலவழிக்க ஆரம்பித்தோம். என்னைவிட சில மாதங்களே இளையவனான பிரசன்னா தனக்கென்று தனித்த பல ரசனைகளை கொண்டிருந்தவன். அவசர அவசரமாக கோட்டு சித்திரம் வரைந்தாற் போல் மெலிந்த தேகமும் பளிரிடும் கண்களும் அவனது அடையாளங்கள். எது பேசுபொருள் ஆனாலும் தன் தரப்பை தனது கருத்தாக்கி மிகத் தைரியமாக யாருடனும் விவாதிக்கும் குணம் கொண்டவன்.

திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தை ஒட்டி  நெடுஞ்சாலையில்  அமைந்திருப்பது கலைவாணி தியேட்டர். அதை ஒட்டினாற் போல் இருந்த தேநீரகம் தான் நாங்கள் இரவுகளை வழிபடுவதற்கான ஆலயம் போல் அமைந்தது. நள்ளிரவு இரண்டு மணிக்கு அங்கே சென்று சீரிய இடைவெளியில் தேநீர் குவளைகள் தீர தீர மொத்த இரவையும் பருகித் தீர்த்து விடிந்த பிறகு வீடு திரும்பியதெல்லாம் நடந்து இருக்கிறது. அவனுக்கு எல்லோரும் நண்பர்கள். தன் தேகத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆளுமை கொண்டவன். ரோந்து வரும் காவலர்களிடம் பயமே இல்லாமல்  தன்னுடைய கல்லூரி அடையாள அட்டை காட்டி பரீட்சைக்கு இரவெல்லாம் படிக்கிறேன். சோம்பலும் பசியும் தீர்ப்பதற்காக தேநீர் அருந்த வந்திருக்கிறேன் என்று சொல்வான். அடிக்கடி அவனைப் பார்க்கும் சில காவலர்கள் நண்பர்களாகவே மாறிப் போனார்கள்.

இரவு என்பது மறப்பதற்கு அல்ல. கனவு என்பது இரவுத் தின்னி. இரவில் விழித்திருக்கும் ஒரு உலகத்துடன் அப்போது தான் அறிமுகமானேன். இரவெல்லாம் விழித்திருந்து விட்டு பகலில் உறங்குபவர்கள் எப்போதும் உறங்காதவர்கள், இரவில் பயணம் முடித்து திரும்புபவர்கள், உறக்கம் வராத நோயாளிகள்,திருடர்கள், காவலர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், பால் வியாபாரிகள், வீடுகளுக்கு நாளிதழ் கொண்டு சேர்ப்பவர்கள், இரவு உணவகங்கள், லாரி ஓட்டுநர்கள், எப்போதும் காத்திருக்கும் பஞ்சர் கடைக்காரர்கள், 24 மணி நேர மருத்துவமனைகள், சொல்லிக் கொண்டே செல்லலாம். ஒரு இரவு  எத்தனை பேருக்கு தன்னைப் பகிர்ந்து கொடுத்து அவர்கள் கணங்களை திரும்ப பெற்றுக் கொள்கிறது என்பது மாபெரும் பட்டியல்.

சொல்லவேண்டிய இரவுகள் என ஒவ்வொருவர் வாழ்விலும் பற்பல இரவுகள் இருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு இரவுமே ஒரு மர்மக் கதையைப் போலத் தான் துவங்குகிறது. துப்பறிவாளனைப் போலவே ஒவ்வொரு இரவிலும் விழித்திருப்பவன் பயணிக்கிறான். அவரவர் அனுபவம் அவரவர் அதிர்ஷ்டம் என்பது இரவின் நியதி.

அவ்வப் போது எனக்கு நினைவிலாடும் இரவுகளில் இதுவும் ஒன்று. அப்பாவின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சேர்த்த போது மணி பதினொன்று. அந்த நேரத்தில் அந்த இடமே மாபெரும் வெளிச்ச வெள்ளத்தில் பிரகாசத்தை உமிழ்ந்தபடி இருந்தது. அம்மா என்னை அழைத்து சில  ரூபாய்களை  உபரி செலவுகளுக்காக என்னிடம் தந்தாள்.  நானும் ஷேகரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வெளியே வந்து மெயின் ரோட்டில் சற்று நடந்து சென்று சிகரட் பிடித்தோம்.

நாங்கள் இருவரும் வான்பார்க்காத இரவுகளில் அதுவொன்று.

எதுவுமே பேசிக்கொள்ளாத இரவுகளிலும் அது இடம்பெற்றது. அன்றிலிருந்து பாதி மாதம் கழிந்த இன்னொரு இரவில் அப்பா காலமானார். அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டு கூடவே ஷேகரின் டிவி.எஸ் 50 வண்டியில் நாங்களிருவரும் பின் தொடர்ந்து சென்றோம். இரவு பதினொன்றரைக்கும் பழங்காநத்தத்தில் ஜூனியர் செந்திலின் பெட்டிக்கடை திறந்திருந்தது. அவனது தந்தையிடம் என் அப்பா காலமான செய்தி பகிர்ந்து  கல்லூரி நண்பர்களுக்குத் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்தோம்.

அப்பாவை ஹாலில் கிடத்தி விட்டு நானும் சேகரும் வெளியே வந்தோம். அம்மா இறுக்கமான முகத்தோடு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி சித்தப்பாவும் அத்தையும் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மெல்ல மாடிப்படியேறி மொட்டை மாடிக்கு வந்தோம். யாருக்கும் சப்தமேதும் கேட்டுவிடக் கூடாதென வழக்கத்திற்கு மாறாய் வலப்புற மூலையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

பௌர்ணமி எனச் சொல்ல முடியா விட்டாலும் அதற்கு நெருக்கமான வளர்பிறை நிலவு பொழிந்து கொண்டிருந்தது. எதுவுமே பேசாமல் ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டோம். புகையைப் புகையால் வெட்ட முயன்று தோற்றபடி சேகர் சோகையாய்ப் புன்னகைத்தான்.

நான் அவனிடம் கேட்டேன். அப்பா இப்ப எங்க போயிருப்பார்..?

இன்னும் கோடாய்ப் புன்னகையை அதிகரித்தவன் என்னிடம்  சுட்டு விரலை உயர்த்தி நீட்டி வானைக் காட்டினான்.

*