யாக்கை 20
பரகாயப் பிரவேசம்
வரதனிடம் உதவி கேட்பது என முடிவெடுப்பதற்கு முன்னால் அது தேவையான மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருந்தான் கதிர். வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. தனக்கு நடந்த அசிங்கத்தை வேறு யாரிடமும் சொல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. ஒரு தொழில் அமைந்து கையில் நாலு காசு சேர்ந்து வேகமாக வாழ்க்கையில் ஏறி வந்து கொண்டிருக்கையில் இப்படி ஒரு சம்பவம் அவன் மனசை உருக்குலைந்து போக செய்திருந்தாலும் வெளியில் அதன் சுவடு தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியமாகப் பட்டது. ஆட்டோ டிரைவரும் மூர்த்தியும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை சர்வ நிச்சயமாக தெரிந்து கொண்டு தான் இருப்பார்கள். ஏதோ என்பதில் இருக்கக்கூடிய சௌகரியம் என்ன நடந்தது என்று அம்பலப்படுத்துவதில் நிச்சயம் இராது. விசுவாசம் எல்லாம் வற்றிப்போன ஒரு தினத்தில் நிச்சயம் இதை மூர்த்தியே யாரிடமாவது வெளியே சொல்லி எக்களித்து சிரிப்பான். ஆட்டோ டிரைவரை கேட்கவே வேண்டாம் அடுத்த நாளே கதிரின் மானம் காற்றில் பறந்திருக்கும்.
வரதன் ஒரு வகையில் கதிருக்கு உறவு. கதிர் சேகரித்து வைத்திருந்த வாழ்க்கை அனுபவத்தில் பணத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்குரிய ஒன்று ஜாதி. வேற்று ஜாதி சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரனை விட 10 வீடு தள்ளி இருக்கும் தன்னுடைய ஜாதிக்காரன் நம்பகமானவன் என்பது அவனுடைய புரிதல். தன்னை சுற்றிலும் இருப்பிடத்திலும் தொழிலிலும் தன் ஜாதி க்காரர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிரமம். விசேஷங்களில் மட்டும் அணிந்து செல்லக்கூடிய விலை உயர்ந்த ஆபரணத்தை போல தன் ஜாதி உணர்வை தேக்கி வைத்திருந்தான் கதிர். எப்போது தேவையோ அப்போது அந்த ஆபரணம் வெளியே வரும். கண்களைக் கவர்ந்து மின்னி மினுக்கும்.
வரதனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லுவதாக எண்ணிக்கொண்டு நா தழுதழுக்க பேசி முடித்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டான் கதிர். முனிவர்களைப் போல் வருட கணக்கில் வளர்த்தி வந்திருக்கும் தன்னுடைய தாடியை வலது கரத்தால் வழித்து நீவிக் கொண்டே ” இங்க பாரு கதிர்.. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கறப்ப ஒரு விஷயத்தை விளக்கமா விலாவாரியா எழுதிக் கொடுப்போம் இல்ல? அந்த மாதிரி என்ன நடந்தது என்கிறத தெளிவா ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் எடுத்து சொல்லு பாப்போம்” என்று தன் கண்களை மூடிக்கொண்டான்.
ஞாயிற்றுக்கிழமை, அந்தி சாய்கிற நேரம்,மேல்ப்பெருமாள் புரத்துல ஒரு இடப் பஞ்சாயத்து. மதியந்தொட்டு பேசி முடிச்சிட்டு பணப் பைஸல் எல்லாம் ஆகி ஆட்டோல திரும்பி வந்திட்டிருந்தம். கெளம்புறப்பவே நானும் மூர்த்தியும் சரக்கு சாப்ட்ருந்தோம்.பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வர்றப்ப சிகரட்டு வாங்கலாம்னு நாந்தான் வண்டியை ஓரங்கட்ட சொன்னேன். மூர்த்தி பய சிகரட் வாங்கப் போனான். ட்ரைவர் ஒரு டீ சாப்டு வரவான்னு கேட்டான். சரிடான்னு போகச்சொன்னேன். சுத்திலும் பார்த்தேன் பஸ்ஸ்டாண்டு சமீபத்ல சமுதாயக் கூடம் கட்டட வேலை நடந்திட்டிருக்குல்ல..? அங்கன ஒண்ணுக்கிருக்கலாம்னுட்டு போனேன்பா. சரியான மழை எடுத்த எடுப்புலயே வலுத்துப் பெய்யத் தொடங்கிச்சி. சட்டுன்னு கட்டட நுழைவுக்குள்ள ஒதுங்கினேன். அங்க நான் போறது முச்சூடும் தற்செயல் தான் வரதா. ஒண்ணுக்கடிக்க ஒக்காந்தது தான் நியாபகம் இருக்கு. அடுத்த நிமிசமே யாரோ முதுகுல எட்டி மெதிச்சதுல நா கீழ விழுந்திட்டேன். சகதி இருட்டு என்னடா நடக்குதுன்னு யோசிக்கவே டைமில்லை .அடுத்தடுத்து உடம்பெல்லாம் மெதி விழகுது. அறுப்புக்கு சிக்குன பன்னிமாதிரி ஈனஸ்வரத்துல கத்துறேன். எஞ்சத்தம் எனக்கே சரியா கேட்டிருக்க்காது.
எல்லாமே ரெண்டு நிமிசத்துக்குள்ள தான். என்னால அவன் யாருன்றதைப் பார்க்க முடியலை. கண்ணெடுத்துப் பார்த்த மட்டிலும் அவன் ஓடவோ அவசரமா நடக்கவோ கூட் இல்லை. மெல்ல விலகி நடந்து படியெறங்கிப் போயிட்டிருந்தான்.நான் மூர்த்தி மூர்த்தின்னு கத்திட்டே இருந்தேன். அதுக்கப்பால மூணு நிமிசமாவது இருக்கும் அப்பத் தான் மூர்த்தி வந்து என்னையப் பார்த்துப் பதறிட்டான். நாய் இருக்கத கவனிக்காம உக்காந்திட்டேன்.சட்டுன்னு சீறிட்டுதுன்னு சமாளிச்சேன்.” என்று ஓரளவுக்கு அசிங்கத்தை பொறுத்தபடி எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாக நிறைந்தான் கதிர்.
“வந்தவனுக்கும் உனக்கும் மோட்டிவ் இருக்கப் போயி தான் உன்னைய மெதிச்சிருக்கான். யாருக்கெல்லாம் உன் கூட மோட்டீவ் இருக்குது.?”
“அய்யோ வரதா என் தொழிலோட நேச்சர் உனக்குத் தெரியாததா..? விடிஞ்சா பத்துப் பேரையாச்சும் புதுசா விரோதிக்காம எப்பிடி சீஸிங் ஏஜன்சியை ரன் பண்ண முடியும்? யாருக்குமே இதுல இருக்கிற பணங்காசு தான் பளீர்னு தெரியுதே ஒழிய பகை கண்ணுக்குத் தெரியுறதில்ல.. எத்தனையோ யோசிச்சு பாத்துட்டேன். ஒரு முடிவுக்கு வர முடியல பார்க்கிற எல்லாமே பகைதான். எவன் செஞ்சி இருப்பான் அப்படின்னு யோசிக்கவே முடியல. சமீபத்தில் வந்தவனா பழைய ஆளா? உள்ளூரா வெளியூரா?? எதுவும் புரிஞ்சுக்க முடியல. இத நெனச்சாலே தல வலிக்க ஆரம்பிச்சது வருதா. இன்னும் நீ ஆயிரம் கேள்வி கூட கேளு எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்றேன் எனக்கு தேவை அவன் யாரு என்கிற ரகசியம். எனக்கு அவனை பாக்கணும் அதே மாதிரி கர்சீப் கட்டி அந்த கண்ண மறுபடியும் பாக்கணும். தொண்டைக்குழியை அறுத்து ரத்தம் குபீர்னு கொப்புளிக்கிறதை ரசிக்கணும். எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை. இது நடந்தாத்தான் என் மனசுல படிஞ்சி இருக்கிற மூத்திர வாடை போகும். இது நடந்தா கூட முழுசா அது போகுமான்னு தெரியல. எனக்கு உதவி பண்ணு தயவுசெய்து”
வரதன் பீர் பாட்டிலை மேஜையில் நடுவந்தரம் வைத்தான். வருத்த முந்திரியை நாலைந்து எடுத்து வாயில் போட்டு மென்றான்.” கதிர் நான் சொல்றத கேளு. வருஷக்கணக்கா இந்த தொழில்ல இருக்க. நீ டீல் பண்றது எல்லாமே டூவீலர் தான். அதுல பொளங்குற பணம் அதைவிட வண்டியை இழந்தவன் அடைகிற நட்டம் அதனால அவனுக்கு ஏற்படுகிற பாதிப்பு இது எல்லாத்தையும் கணக்கு பண்ணி பார்த்தா மொத்தத்துல ஒரு பத்து பேர் வேணா அதீதமா பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த லிஸ்ட்க்கு நாம அப்புறம் வருவோம்.இப்பத்திக்கு உன்னுடைய எதிரி தொழில்ல உன்னால பாதிக்கப்பட்டவன் இல்லை என்று வச்சுக்கலாம். தொழில தாண்டி உனக்கு யாரெல்லாம் எதிரி? யாருக்கெல்லாம் உன்னை பிடிக்காது? வேற வகையில யார் யாரு உன்னால பாதிக்கப்பட்டவன்?. இந்த லிஸ்ட் எல்லாம் நமக்கு வேணும்” தெளிவான மிக அமைதியான குரலில் வரதன் பேச பேச முந்தைய துக்கமெல்லாம் வற்றி போனவனாய் முகம் மலர்ந்தான் கதிர்.
” அப்படின்னா அவனை சீக்கிரத்தில கண்டுபிடிச்சிரலாம்ல வரதா?” அவனுக்கு ஏதோ ஒரு கூடுதல் நம்பிக்கை தேவைப்பட்டது
” இங்க பாரு கதிறு… குழந்தை மாதிரி அனத்தக் கூடாது. என்கிட்ட விட்டுட்டேல்ல..? நான் பாத்துக்குறேன். நம்பிக்கையா இரு. அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனா இருந்தாலும், இந்த உலகத்தில் எந்த மூளைக்கு போய் ஒளிஞ்சிக்கிட்டாலும் வெளியே வர வச்சு செய்ய நினைக்கிறது செய்வோம். கேட்கிற கேள்விக்கு எல்லாம் முழுசா பதில் சொல்லு. பொறுமையா காத்துட்டு இரு. மத்தத நான் பார்த்துக்கிறேன்” என்றான்
அடுத்த பீர் பாட்டிலை எடுத்து களக் முளக் களக் முளக் என்று குடித்தான் கதிர். நிதானம் இல்லாதபடியால் சட்டையில் எல்லாம் சிந்தியதைப் பொருட்படுத்தவில்லை. ” வரது,நீ கேட்குறது எனக்கு புரியுது. எல்லா டீடெயிலும் என்னை விட மூர்த்திக்கு தான் நல்லா தெரியும். அவனிடம் எப்படி கேட்கிறது என்று தான் யோசனையா இருக்கு”
” அத நான் பாத்துக்குறேன். நீ அவனை வரச் சொல்லு.” தீர்மானமாகச் சொன்ன வரதனின் வலது கையை பற்றி சம்பிரதாயமாய் குலுக்கி கொண்டான் கதிர். அறை மூலையில் இருந்த டெலிபோனில் தன் அலுவலகத்தை அழைத்து ” மூர்த்தி நீ என்ன பண்ற, உடனே ஆர் பி எஸ் லாட்ஜூக்கு வந்து சேரு” என்று வைத்தான். அனாவசிய சிரிப்பு ஒன்றை சிந்தி விட்டு ” இந்த வந்துருவான் வரது” என்றான்.
மறுபக்க மூலையில் சத்தம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது டிவி. ரிமோட்டை எடுத்து அதன் சப்தத்தை அதிகரித்தான் வரதன். திருவிளையாடல் படத்தில் சிவாஜி இடம் பாட்டை எழுதி வாங்கிக்கொண்டு பாண்டியன் அரசவையை நோக்கி வேக வேகமாக கிளம்பி போனார் நாகேஷ். வரதன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான். அறைக்கதவை முழுவதும் திறந்து வைத்தபடியே தன் சிகரட்டையும் பற்ற வைத்து ஆழமாய் புகையை உள்ளே இழுத்தான் கதிர்.
மூர்த்தி வரும் போதே பிஹூ பிஹூ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வந்தான். சிறு பிராயத்தில் மூர்த்தியை அவன் வேகத்தையெல்லாம் அளந்து உணர்ந்தவன் தான் வரதன். காலமாற்றத்தில் கதிரின் ஊழியனாக சம்பளத்துக்கு வேலை பார்ப்பவனாக மாறிய பிறகு மூர்த்தியின் குணங்கள் மாற்றமடைந்தன. எதையுமே கதிருக்கு பிடித்தாற் போல என்று மாற்றிக் கொண்டான். தன்னிடம் வேலை பார்க்கும் யாரையுமே நாயைப் போலவே நடத்தும் கதிர் மூர்த்தி விஷயத்தில் அப்படி இல்லை என்பது பெரிய ஆறுதல். நீயும் இந்தக் கோட்டைத் தாண்டாதே நானும் தாண்டலை என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தில் அவர்கள் இருந்தபடியால் வருடக்கணக்காக ஒத்துப் போகிறது.
மூர்த்திக்கும் வரதனை இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். கதிரின் அலுவலகத்துக்கோ வீட்டுக்கோ அத்திப் பூத்தாற் போலத் தான் வந்து போவான் வரதன். அந்த மாதிரி சமயங்களில் வரதனும் அவனும் லேசான புன்னகையோடு கடந்து விடுவார்கள். நெடு நாட்களுக்குப் பிறகு இன்றைக்குத் தான் மறுபடி பேசவேண்டிய தேவை உருவாகிறது.
என்னப்பா என்று கதிரிடம் கேட்ட மூர்த்தியை சேர்ல உட்காருய்யா என்றான் கதிர். அவன் குரலில் தொனித்த தேவையற்ற கட்டளைத் தனத்தை கவனித்த வரதன் “ கதிரு நீ நடந்தே போயி எதுத்தாப்ல சேகர் பவன்ல சூடா பஜ்ஜி போட்ருப்பான் ரெண்டு பஜ்ஜி சாப்ட்டுட்டு அப்பறமா வந்தாப் போதும். நாங்க பேசவேண்டி இருக்கு” என்றான்.
விரோதமாக ஏதோ நடக்கிறது என்பது மட்டும் மூர்த்திக்கு புரிந்தது. தன்னை வரச் சொன்னது கதிர். அவனை கிளம்பி போ நாங்கள் பேச வேண்டும் என்று வரதன் அனுப்பும்போது சொன்னதை கேட்டு பூனைக்குட்டி போல் கிளம்பி போகிறான். விஷயம் என்னவாயிருக்கும் என்பது சரிவர புரியவில்லை. தெரியாத ஆள் என்றால் கூட யோசிக்கலாம். மூர்த்திக்கு வாழ்க்கையின் அச்ச கணங்கள் அனைத்தும் முடிந்து விட்டதாக தோன்றும். இனி எது வந்தாலும் பார்க்க வேண்டியதுதான் என்று அழுத்தம் திருத்தமாக முடிவெடுத்த பிறகு தான் கதிரிடம் வந்து சேர்ந்தான். நான் பார்க்காததா என்று எப்போதுமே ஒரு சின்ன நினைப்பு அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வழக்கத்துக்கு வித்தியாசமாக இப்படி ஏதாவது நடக்கும் போது மட்டும்தான் வாழ்க்கை புதிரான ருசியாக மாற்றம் அடைகிறது.
” என்ன மூர்த்தி எத்தனை பசங்க? இந்திரா சௌக்கியமா?” என்று இயல்பான குரலில் வரதன் கேட்க ” மூத்தவன் திருச்சியில் வேலை பார்க்கிறான். அடுத்தவன் சகாய மாதா காலேஜ்ல பர்ஸ்ட் இயர் படிக்கிறான். இந்திராவுக்கு தான் முட்டி வலி. வெளியில பெருசா நடமாட்டம் இல்லை. வீட்டுக்குள்ள மட்டும் தான் நடக்குறது. மத்தபடி வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்குன்னு வைய்யேன்.. ஆமாம் என்ன பிரச்சனை எதுக்கு உன்னைய கூப்பிட்டு இருக்கான்?” என்று கேட்டான்.
தன் குரலில் இன்னும் தாழ்த்திக் கொண்ட வரதன், ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பஸ் ஸ்டாண்ட் பின்னாடி சமுதாயக்கூடம் கட்டட வேலை நடக்குற இடத்துல இவனை யாரோ அடிச்சிட்டாங்கய்யா… உன்னிடம் கீழே விழுந்ததாக சொன்னான்ல? என்ன நடந்துச்சுன்னா…” வரதன் தன்னிடம் கதிர் சொன்ன எல்லாவற்றையும் விவரமாக சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு ” அன்னைக்கே நினைச்சேன்யா… ஆளு சீர் இல்லாம கீழ விழுந்து கெடந்தானேன்னு. நாம எதுக்கு கேட்டுக்கிட்டுன்னு விட்டுட்டேன். சரி சொல்லு இதுல எனனைய என்ன கேட்கணும்?” என்றான்.
மூர்த்தி உங்க ஆளுக்கு யாரெல்லாம் எதிரி? என்று கேட்க உன்னையும் என்னையும் தவிர எல்லாருமே எதிரி தான். விளையாட்டுக்கு சொல்லலைய்யா. இங்கே ஒரு ரூம் போட்டு மூணு நாள் ஆகுது. இந்நேரத்துக்கு இந்த ரூமுக்கு சப்ளை பார்க்க வர்றானே அந்தப் பய்யன் கதிருக்கு விரோதி ஆயிட்டிருப்பான். உடம்பெல்லாம் திமிரு. பேசுறது எல்லாமே அகங்காரமாத்தான். யாருக்கு பிடிக்கும் சொல்லு? ஆண்டவன் தெரிஞ்சோ தெரியாமலோ அள்ளிக் கொட்ற ஒரு தொழிலை கொடுத்து இருக்கான். அடுத்தவனாக இருந்தால் இதை வணங்கி செய்வான். இவன் அப்படி இல்லை. கையில கத்தி இருக்கேன்னு எல்லா பக்கமும் சுத்திக்கிட்டு இருக்கான். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது இல்ல? கதிரைப் பிடிக்காதவங்கன்னு லிஸ்ட் போட்டா திரவியனூர் பாப்புலேசனை விட அதிகமான எண்ணிக்கை வரும். யாரை சொல்ல சொல்ற?” என்றவன் மேஜையில் இருந்த காலி பீர் பாட்டில்களை பார்த்தான்.” பீர் சாப்பிடுறியா? என்று வரதன் டிவியை காண்பிக்க அதற்கு பக்கபாட்டில் ஆறேழு முழு பாட்டில்கள் தெரிந்தன.
” இல்லப்பா எனக்கு இன்னும் ஜோலி கிடக்கு” என மறுத்தவனை ” சும்மா குடிடா ரொம்பத்தான் மெட்டு பண்ற” என்று அதட்டினான் வரதன்.
” அவன் வந்து ஏதாச்சும் சொன்னா நீ தான் பொறுப்பு” என்றபடியே அதன் இடத்திலிருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்து பல்லால் கடித்து அதை திறந்தான்.
” உங்க ஓனர் கிட்ட நான் சொல்லிக்கிறேன் பா” என்று போலியான பயத்தோடு வரதன் சொல்ல…” மூர்த்திக்கு இல்லாமையா” என்று தாராளமான குரலில் சொல்லிக் கொண்டே மீண்டும் உள்ளே வந்தான் கதிர்.
அவன் மறுபடி வந்ததை பொருட்படுத்தாமல் ” சொல்லு மூர்த்தி கதிருக்கு யாரெல்லாம் எதிரி?” என்று அதே கேள்வியை மறுபடி கேட்டான்.” நம்ம ஆளு இன்னிக்கு இந்த ஊர்ல ஒரு விஐபி. எலக்சன் நின்னா கூட எதிர்த்து நிற்க யோசிப்பாங்க. எதிரிண்னு கேட்டா யாரைச் சொல்ல?” என்று பிளேட்டை மாற்றினான்.
அந்த பதிலை ரசித்துக் கொண்டே அப்படியா கதிரு என அவன் பக்கம் திரும்ப ” இல்ல மூர்த்தி நம்ம கிட்ட நேரா மோத மாட்டாங்க மறைஞ்சிருந்து தாக்கலாம் இல்லியா..? அப்படின்னா யாரை சொல்லுவ?” என்று எடுத்துக் கொடுத்தான் கதிர்.
அப்பிடி சொல்றதா இருந்தா நெறைய்ய பேரைச் சொல்லலாம்ல என்ற பதிலைக் கேட்டதும் வரதன் புன்னகையோடு எங்கோ பார்க்கிறாற் போல பாவனை செய்தான். கதிருக்கு இப்பொழுது இந்தப் பதிலையும் ஆமோதித்தாக வேண்டிய நிர்ப்பந்தம். “ உனக்கு நினைவிருக்கிறவங்கள எல்லாம் ஒவ்வொருத்தன் பேரா சொல்லு மூர்த்தி,வேற வழி?”என்றான்.
வரதன் இடைமறித்து” நீ இருப்பா , ஏன் வரதா…இப்பிடிக் கேட்கிறேன். இப்ப கதிருக்குத் தொழில் ரீதியா பல பேர்கூட தாவா இருக்கும். அதெல்லாம் அந்தந்த நேரத்துக் கோவதாவங்கள்னு வச்சிக்க. தொடர்ந்து மறக்க முடியாத சம்பவங்கள் எதாச்சும் தோணுதா..? யாரெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்க..அப்பிடி எத்தனை பேரை சொல்வே.?” என்றான்.
“வரதா எனக்குக் கதிர் தான் படியளக்குறான். அவனோட விரோதங்களைப் பத்தி சொல்லச் சொல்றே…எனக்குத் தோணுறதை எல்லாம் சொல்லிரட்டுமா…கதிர் கோச்சுக்க மாட்டேல்ல என்றான். அட யார்ரா இவன் நான் தானேடா கேட்குறேன். மறைக்காம எல்லாத்தையும் சொல்லு. எனக்கே ஆவலா இருக்கு என் பகை எத்தினி பெருசுன்னு தெரிஞ்சிக்கணும்ல என்றவாறே ஏவ் என்று இந்த உலகத்தின் மாபெரும் ஏப்பங்களின் வரிசையில் இடம்பெறத் தகுந்த மற்றொரு ஏப்பத்தை வெளிப்படுத்தினான்.
ரொம்ப முக்கியமாப் படுறது மூணு பிரச்சினை. ஒண்ணு கதிருக்கு சொந்தமா பட்டுராஜன் பட்டியில ஒரு வாழைத் தோப்பு இருக்கு. அதுக்கு அடுத்தாப்ல இடத்துக்கு சொந்தக்காரன் பேரு வில்லியம்ஸ். கதிர் வாங்குனது அண்ணங்காரன் நட்ராஜங்கிட்டியருந்து. வில்லியம்ஸூக்கு வித்தது நட்ராஜனோட கூடப் பெறந்த தம்பி மணிபாலன். இரண்டு சொத்துக்கும் பொதுவாந்திரமா ஒரு கெணறு இருக்கு. மூலப் பத்திரத்துல பொதுப் பிரயோகத்துக்குன்னு இருக்கிறதை மறைச்சி நட்ராஜன் தன் பேர்ல அதை பதிஞ்சுக்கிட்டான். அதையே நம்மாளுக்கிட்ட விலை பேசி வித்துட்டு செத்தும் போயிட்டான். இப்ப தம்பிகாரன் மட்டுந்தான் இருக்கான். அவன் மூலப் பத்திரத்தை எடுத்து தனக்கும் அந்தக் கெணத்துல உரிமை இருக்குதுன்னு கேஸ் போட்டான். வழக்கு நடக்குறப்பவே வில்லியம்ஸ் அந்தப் பக்கத்து தோப்பை விலைக்கு வாங்குறான். இப்ப வில்லியம்ஸூக்கும் அந்தக் கெணத்துல பங்கு இருக்குன்னு தீர்ப்பாய்டுது. நம்மாளு ஐகோர்ட்ல அப்பீலுக்குப் போயி ஜெயிச்சிர்றாப்ல. கிணறு கதிருக்குத் தான் சொந்தம்னு ஆயிருது. நடுவுல சமரசம் பேச மூணு நாலு முறை வில்லியம்ஸ் முயற்சி செய்தும் கதிர் முகங்குடுக்கலை. உன் சொத்தை விலைக்குக் குடுன்னு கேட்டு ஆளு அனுப்புனதுக்கு கதிர் என் சொத்து க்ளீனா இருக்கு நா எதுக்கு அதை விக்கணம்? தண்ணியில்லாத காட்டை நீ வேணா எனக்குக் குடு நா வாங்கிக்கிறேன்னு பதில் சொல்லிட்டாப்ல, அந்த வில்லியம்ஸ் கொஞ்சம் வில்லங்கமான ஆளுன்றதால நம்மாளை ஜாக்ரதையா இருக்க சொல்லி நாலஞ்சு நலம் விரும்பிகள் சொல்லக் கேள்வி. “ மூர்த்தி முடித்ததும் கதிர் அதை ஆமோதிப்பது போல “ஆமய்யா…அந்தாள் எம்மேல வெறியா இருப்பான் வாஸ்தவம்தான்” என்றான்.
சரி வேற.. என்றான் வரதன்.
“கிருஷ்ணாபுரம் விலக்குல புதுக்குளம் மிடில் ஸ்கூல்ல ஒரு டீச்சர் பேரு கற்பகவல்லி. நம்ம சீஸிங் சிட்டுக ரெண்டு பேரு அந்தம்மா வண்டி ட்யூ கட்டலைன்னு சீஸ் பண்ணிட்டானுங்க . அதைத் திரும்பக் கேட்டு நம்ம ஆபீஸ்கு வந்த இடத்ல கதிருக்கும் அதுக்கும் பழக்கமாகி கொஞ்ச நாள் அதுங்கூட கனெக்ட்ல இருந்தாப்ல. அதோட தம்பி ஒருத்தன் எம்.எஸ் மில்லுல வேலை பார்த்தவன் கம்பெனி மூடுனப்புறம் டெம்பரரியா மூவரசனூர்ல ஒரு ஓட்டல்ல கேஷியரா இருக்கான். அவன் ஒரு தடவை கதிரையும் கற்பகத்தையும் ஸ்ரீரங்கத்ல வச்சிப் பார்த்துட்டான். பார்த்த இடத்துலயே கற்பகத்துக்கு ரெண்டு அறை. கதிரை சட்டையப் பிடிச்சி ஏத்திட்டான்.” இனி உன்னைய இந்தப் பிள்ளையோட சேர்த்துப் பார்த்தேன் அங்கனயே கண்டந்துண்டமா வெட்டிருவேன்னு மெரட்டல். அந்தப் பிள்ளை அதுக்கப்புறம் வேலைக்கே வர்லை. நம்மாளும் டர்ராகி அதுங்கூட தொடர்பை கட் பண்ணிட்டு வேற வேலைகள்ல பிஸி ஆயிட்டாப்ல. இதுல சோகம் என்னன்னா அந்தக் கற்பகம் அடுத்த சில மாதங்கள்ல மஞ்சக் காமாலை வந்து காப்பாத்த முடியாம இறந்துரிச்சி. கடைசி வரைக்கும் கதிர் அதைப் போயி பார்க்கக் கூட இல்லை. அக்கா செத்ததும் தம்பிகாரனுக்கு கதிர் மேல கோபமாயிடுச்சி…நீயெல்லாம் ஒரு மனுசனா..? எங்கக்கா சாகுந்தட்டியும் உன்னைய எதிர்பார்த்துட்டே இருந்திச்சி. நீ தான் வர்ல…வந்திருக்கணும்னு ஒரு நாள் தண்ணியப் போட்டு ஆபீஸ் முன்னாடி பெரிய ரகளை. அப்பறம் சரகத்துக்கு சொல்லி போலீஸ் வந்து தான் அவனை சாந்தப் படுத்தி எழுதி வாங்கிட்டு இனி எந்தப் பிரச்சினையும் பண்ணக் கூடாதுன்னு அனுப்பிச்சி. அவன் அன்னைக்கே வார்த்தையை விட்டான்.”உன்னைய என்னபண்ணனும்னு எனக்குத் தெரியும்டா”ந்னு”
வேறு யாருடையை கதையோ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த கதிர் “ பாவம் வரதா அளு அம்சமா இருப்பா..நல்ல பொண்ணு விதி இப்பிடி வெளாண்டுருச்சி…” என்றான்
மூர்த்தி மறுபடி ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு “ நம்ப சிட்டு ஒருத்தன் வினோத்துன்னு அவனை நம்ப வச்சி கவுத்திட்டாப்ல கதிருன்னு எல்லார்ட்டயும் பொலம்பிட்டே இருந்திருக்கான். அவனாக் கூட இருக்கலாம் என்றான்.
வினோத்துக்குத் தான் செய்த துரோகத்தை கதிர் தன் வாயாலேயே சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த வரதன் “ கதிரு..இந்த மூணு விரோதமுமே சொல்லிக்கிறாப்ல தான் இருக்குது. இதுல எதையும் அசால்டா எடுத்துக்கிட முடியாது. கொஞ்சம் டைம் குடு. எனக்கு ஒரு வண்டி சொல் பேச்சு கேட்குறதுக்கு ரெண்டு ஆளுங்க வேணும். இந்த மூணு சம்பவத்தையும் தீவிரமா புகுந்து வெளிவந்தாத் தான் யார் உண்மையிலயே உன்னை பாடா படுத்துனதுன்னு கண்டுபிடிக்க முடியும். சரியா..?”
ஆவேசமாக எழுந்து கொண்டான் கதிர். “ வரதா…நீ கேட்டதெல்லாம் ரெடின்னு வச்சிக்க. தயவு செய்து அந்தக் கூ…யான் யாருன்னு கையைக் காமி. நான் அவன் கை காலு எல்லாத்தையும் தனித் தனியாப் பிச்சித் தின்கப்போறேன்
என்றான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.
சரி நாளைக்கு காலையில வறேன். என்று புறப்பட்டான் வரதன்.
{வளரும்}