யாக்கை 21

யாக்கை 21

சன்னதம்


நீ பாட்டுக்கு உன் வேலைகளைப் பாரு கதிரு. நான் மூர்த்தியைக் கூட வச்சிக்கிடுறேன். காரோட்டுறதுக்கு யுவராஜூ இருக்கான். நாங்க சுத்திட்டு வர்றோம். தினமும் சாயந்திரம் ஆர்பி.எஸ் லாட்ஜூல சந்திப்பம் என்ன முன்னேத்தம்னு பேசிக்கிடலாம் ”

என்றான். முகவாய்க்கட்டையை சொறிந்து கொண்ட கதிர்

“சரி வரதா..பணம் காசு எதைப் பற்றியும் கவலைப்படாதே…எத்தனை நாளானாலும் சரி. ஒரு முடிவறியாம விட்றப் படாது”

என்றான். அவனுக்குத் தொழிலைப் போட்டு விட்டுத் தன்னால் எதற்காகவும் அலைந்து கொண்டிருக்க முடியாது என்பதும் தெரியும். மூர்த்தி லீவில் போயிருக்கிறான் என்று ஆபீஸில் சொன்னான். யுவராஜிடம் தன்னுடைய டாட்டா சுமோ கார் சாவியைத் தந்து

” ரக்தானியாபுரம் கே.எஸ்.பி பங்குல நமக்கு அக்கவுண்டு இருக்கு. எப்ப வேணாலும் போயி டாங்க் ஃபுல் பண்ணிக்க. வண்டி நம்பரைப் பார்த்தாலே காசு கேட்க மாட்டான்”

என்று கோளாறு சொல்லி அனுப்பினான். செலவுக்கு என மூர்த்தி கையில் கணிசமாகவே தொகை தந்து அனுப்பினான்.

அன்று மாலை வரைக்கும் அவ்வப்போது தன்னைத் தாக்கியது யாராக இருக்கும் என்று யோசித்துத் தலை வலித்தது தான் மிச்சம். எக்கச்சக்க பெண்டிங் வேலைகள் கழுத்தை நெறித்தன. முந்தைய தினங்களின் குடி உடம்பையும் மனசையும் பிசகச் செய்து லேசான கிறக்கத்தை மிச்சம் வைத்து விளையாட்டு காட்டியது. இன்னிக்கெல்லாம் குடிக்க வேணாம்பா என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அவனுக்கென்னவோ வில்லியம்ஸ் அல்லது துரை இருவரில் ஒருவன் தான் தன்னைத் தீண்டியிருக்க முடியும் என்று தோன்றியது. வினோத் ஒரு பொடியன். அவனுடைய வாழ்நாள் முழுவதும் திரட்டிப் பார்த்தாலும் கதிர் போன்ற ஒருவனைப் பகைப்பதற்குத் தேவைப்படுகிற தைரியம் அவனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. அவன் நிச்சயமாக கதிரை எதிர்ப்பதற்குத் துணியவே மாட்டான் என்று தான் தோன்றிற்று.

‘வரட்டும், தேடிச் சென்றிருக்கும் வரதன் தெளிவான கை.அத்தனை சீக்கிரத்தில் எதையும் விட்டுக் கொடுத்து விட மாட்டான். யாராக இருந்தாலும் கொன்றழித்தால் தான் நிம்மதி’

என்று மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். லேசாக உடம்பு நடுங்கியது. ஸ்டாஃப் ஜெயந்தி கதவைத் தட்டி விட்டு நுழைந்தாள்.

“ஸார், நாளைக்கு திரவியனூர் ஜோதிராம் மகால்ல உங்க ரிலேடிவ் கல்யாணம் இருக்கு. உங்க பேரை வாழ்த்துரைல போட்டிருக்காங்க. நினைவு படுத்தச் சொன்னீங்க”

” யார் வீட்டுக் கலியாணம்?”

என்று அவள் நீட்டிய பத்திரிக்கையை வாங்கிப் புரட்டியவன்

“வாழைத்தோப்பு செல்வராசு எனக்கு மாமம் மொறை. அவர் மகனுக்குக் கலியாணம். மொய் கவர் ரெடி பண்ணி வைய்யி என்ன?”

என்றவன் ஹச்சு ஹச்சு எனத் தும்மி விட்டு

” சேகர் அல்லது மணி ரெண்டு பேர்ல யாராவது இருந்தா வரச்சொல்லு”

என்று மூலையில் இருந்த டீவீயை அசுவாரசியமாக நோக்கினான். மனக்கண்களின் முன்னே வரதனும் மூர்த்தியும் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு தலையைப் பற்றி இழுத்து வருவது போலவும் தானொரு மாபெரும் கூர்வாளை ஏந்தியபடி கொக்கரிப்பது போலவும் காட்சி வந்து வந்து போயிற்று. இன்னும் எத்தனை நாளுக்கு இந்தப் பாடு என சட்டென்று மனம் கவிழ்ந்தான் கதிர்.

வரதனும்  மூர்த்தியும் ஆறு மணிக்கு எல்லாம் லாட்ஜ் ரூமுக்கு வந்து விட்டார்கள் என்று மல்லிகா வந்து சொன்னாள். சென்னையில் இருந்து ரகுநாதன் என்று ஒரு பேங்க் அதிகாரி கோயில் சுற்றுலா என வந்துவிட்டு அப்படியே கதிரைப் பார்த்துவிட்டு போக வந்திருந்தார். ரத்னா மெஸ்ஸில் அவரது குடும்பத்துக்கு பிரியாணி பத்து வித ஐட்டங்களுடன் தடபுடலாக கவனித்து  தன் காரிலேயே ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றான் கதிர். எந்த கோச் என்று தேடிப் பார்த்து ரயிலில் அமர வைத்துவிட்டு திரும்புவதற்கு ஏழரை மணி ஆகிவிட்டது. லாட்ஜ் ரூமை அடையும் போது மணி எட்டு.

எந்த சலனமும் இல்லாமல் வரதன் வார பத்திரிகையை புரட்டிக் கொண்டிருந்தான். யுவராஜ் தரையில் துண்டை விரித்து தன் வலது கரத்தை மடக்கி தலையணையாக்கி உறங்கிக் கொண்டிருந்தான். மூர்த்தி எதையோ ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டிலேயே கையை கழுவி வைத்திருந்ததை ரூம் சர்விஸ் காரன் அப்போதுதான் வந்து எடுத்தான்.

ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்ட கதிர் சற்று பெரிய சைஸ் கை துண்டை வைத்து முகமெல்லாம் துடைத்துக் கொண்டு திடீரென ஞாபகம் வந்தவனாக தன் காலால் யுவராஜின் இடுப்பில் லேசாக எத்தி

” டே யுவா…எந்திரிச்சு காருக்கு போ. அங்க போய் தூங்கு”

என்று அனுப்பினான். பதறி எழுந்த யுவராஜ் வாஷ் பேசின் கண்ணாடி முன் நின்று கொண்டு வேக வேகமாக முகத்தை கழுவித் துண்டால் துடைத்து அவசரமாக தலையை சீவிக்கொண்டான். வரேண்ணே என்றவாறே சடுதியில் காணாமற் போனான்.

மூர்த்தியிடம் 

போன காரியம் என்னாச்சு?

எனக் கதிர் கேட்க வரதன் சொல்வான் என்பது போல் அவனை கண்ணை காண்பித்தான் மூர்த்தி. வரதன் முகத்தில்  தனக்கு சாதகமாக ஒளி ஏதும் தென்படுகிறதா எனத் தேடிய கதிரால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனே பேசட்டும் என்று குஷன் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டான். கண்களை மூடி சீரியஸாக யோசித்து விட்டு

” கதிர்… வில்லியம்ஸ் செய்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ பிசினஸ் விஷயமா ஆந்திரா போயிட்டு வர்றப்ப கம்பி ஏத்திட்டு வந்த லாரில கார் மோதி வில்லியம்ஸ்க்கு சரியான அடி. 40 சதவீதம் தான் பார்வை திறன் இருக்குதாம். முந்தி மாதிரி தொழில்ல ஆக்டிவா இல்லை. அவன் தம்பி ஒருத்தன் சிங்கப்பூர்ல பெரிய கம்பெனில வேலை பாக்குறானாம். இங்கு இருக்கிறது எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவன் கூட போயிறலாம் அப்படிங்கிறது தான் வில்லியம்ஸ் திட்டமாம். அவனை தேடி போனதுல ஒரு லாபம்யா. மூஞ்சிக்கு நேரா சொல்றான் ” சண்டையானது வாஸ்தவம் தான். என்னோட காட்டை உங்களால் கதிர் விலைக்கு கேட்டாப்டி. நேர்ல வந்து பேச சொல்லுங்க. அவருக்கே அந்த இடத்தை தந்துடுறேன்” அவனை எப்படி சந்தேகப்படுவ?”

” வரதா அந்த இடத்தை முடிச்சிருவம்யா…லட்டு மாதிரி ஆஃபர்யா…நீ நல்ல ராசிக்காரன் தான்யா..என்னடா மூர்த்தி”

என்று அவஸ்தையாக சிரித்த கதிரிடம்

“அந்த பொண்ணு கற்பகவள்ளியோட தம்பிகாரன் துரை அவனை தேட வேண்டிய அவசியமே ஏற்படல. சின்னப்பாண்டிபுரத்து சர்ச்ல பாதிரியாரா இருக்கான். உன்னை பற்றி சொல்லி தெரியுமாண்னு கேட்டப்ப ” ஆண்டவர் அவருக்கு அமைதியை தரட்டும்ணு காத்துல சிலுவை போட்டு ஆசீர்வதிக்கிறான். இதுக்கு என்ன சொல்ற?

என கேட்க

“அட ஆமாய்யா நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான். மிச்சம் இருக்கிறது அந்த வினோத் பையன் மட்டும்தான். ஓங்குதாங்கான ரெண்டு பேரே விலகிப் போனப்ப அவனா செய்திருக்க போறான்? இருந்தாலும் வரதா அவன் கதையையும் விசாரிச்சிருவேல்ல?”

கவலையானான்

“இரப்பா…ஏன் பதறுற? ஒரே நாள்ல ரெண்டு பேர் கதையை விசாரிச்சிட்டோம்ல…. நாளைக்கு மதியத்துக்குள்ள அந்தப் பையன் வினோத் அவன் ஜாதகமே தேடிட மாட்டோம்?”

அஸ்கு அஸ்கு என்று தும்மி விட்டு

“வரதா அவன் கதையை நாளைக்கு மதியத்துக்கு மேல் விசாரிச்சுக்குங்க. நாளைக்கி காலை ஒரு ஜோலி இருக்கு. திரவியநூர்ல வாழை தோப்பு செல்வராசு வீட்டு கல்யாணம். அது அட்டென்ட் பண்ணிட்டு அப்படியே ஒரு செட்டில்மென்ட் முடிக்கணும். போயிட்டு வந்துருவோம்”

என முகத்தைத் துடைத்தான்.

” அவசியம் நான் வரணுமா? 

என வரதன் கேட்க

“அட வாய்யா.. நீ கூட இருக்குறது தான் மலையளவு தெம்பு.”

விளையாட்டாக அவன் முதுகில் தட்டினான்.

இரவு நெடு நேரம் லாட்ஜ் அறையிலேயே இருந்து விட்டுத் 11 மணிக்குத் தான் வீட்டுக்குக் கிளம்பினான் கதிர். அதென்னவோ குடிக்காமல் இருந்தாலே அந்தத் தினம் நீண்டு விடுகிறது. பார்வை  தெளிவாகத் தெரிகிறது.

இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சனியனைத் தொடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்

என்று சப்தமாகவே சொல்லிக் கொண்டான். வில்லியம்ஸூம் துரையும் நியாயமான காரணங்களால் தன் சந்தேக வளையத்திலிருந்து வெளியேறிப் போனது அவனுக்கு வியப்பாகவும் அதே நேரத்தில் ஆசுவாசமாகவும் இருந்தது. வினோத்தும் இல்லை என்றாகி விட்டால் வேறு யார்..? தன் குல தெய்வத்தை மானசீகமாக வேண்டிக் கொண்டான் கதிர்

“…யப்பா சாமி எனக்கு நீ தான் அவனை யாருன்னு காமிச்சித் தரணும். அவனை என் கையால நாலு சாத்து சாத்தாட்டி எனக்கு நிம்மதி இல்லை கடவுளே”

எனக் கூவினான்.

கௌரி அவனுடன் பேசுவதை நிறுத்தி பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவள் மனம் முழுவதும் ஆன்மீகம் தான் நிறைந்திருந்தது. குடும்பம் கணவன் குழந்தை என்றெல்லாம் குறுகிய வட்டத்துக்குள் உழன்று தீர்வதற்கல்ல இந்தப் பிறவி என்று தீர்க்கமாக நம்பினாள்.  ஆரம்பத்தில் அவள் அவனிடமிருந்து விலகுவதற்காக வேஷம் போடுவதாகத் தான் கதிர் நம்பினான். நாள் செல்லச் செல்ல அவளது தீவிரம் தெரிந்த பிறகு முற்றிலுமாகத் தானும் அவளிடமிருந்து தள்ளியே நின்று கொண்டான். வீட்டின் மாடியில் பெரிய ஹால் . அதன் ஒரு புறச் சுவர் முழுவதும் சாமி படங்களை மாட்டி அந்த இடமே கோயில் போலாகியது. ஒவ்வொரு தினமும் பல பூஜைகள் கூட்டு வழிபாடு என்றெல்லாம் மெல்ல மெல்ல கௌரியின் முகமும் பேச்சும் எல்லாமும் மாறிப் போனது. கதிரும் அவளும் ஒரே வீட்டின் இருவேறு உலகங்களில் இருந்து கொண்டிருந்தார்கள்.

கௌரியின் ஆன்மீக முகம் கதிருக்குப் பல வகைகளில் கை தந்தது. சமீபமாக அவளது நித்ய பூஜைக்கு வருகை தரும் பக்த சகாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை அவனும் பார்க்கிறான்.  வழி எதுவானால் என்ன செல்வாக்கு ரொம்ப முக்கியம்.

மாடிக்கும் கீழ்ப்பகுதிக்கும் நேரடியாகவும் வழி இருந்தது. வெளி நபர்கள் தலைவாசலில் இருந்தே நேரடியாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியும். எல்லாம் திட்டமிட்டுக் கட்டினாற் போல் கைகொடுத்தது. கதிர் காரை போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டுத் தன்னிடம் சாவியைத் தர வந்த யுவராஜிடம்

“ காலைல வெள்ளன வந்திரு யுவா..கல்யாணத்துக்குப் போயி தலை காட்டிட்டு அப்பிடியே கெளம்பனும். நெறையவே ஜோலி கெடக்கு மறந்திராத”

என்றதும் அவன்

“சரிங்கண்ணே வந்திருவேன்”

என்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனது முதுகையே வெறித்துக் கொண்டிருந்தவனுக்குத் திடீரென்று மாடிக்குப் போய் கௌரியைப் பார்த்தால் என்ன எனத் தோன்றியது,

மெல்லப் படிகளில் ஏறி ஹாலுக்குள் நுழைந்தான். அந்த நேரத்திலும் நாலைந்து குடும்பங்கள் ஆலோசனை கேட்க வந்து பவ்யமாக அமர்ந்திருந்தனர். இவனும் சென்று அவர்களுக்கு மத்தியில் தரையில் அமர்ந்தான். திடீரெனத் தரையில் அமர்ந்தது வினோதமாக இருந்தது. பேசிக்கொண்டே இவன் வந்தமர்ந்ததை ஒரு கணம் பார்த்த கௌரி மீண்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள் பக்கம் திரும்பினாள். எல்லாரும் கிளம்பிச் செல்லும் வரை கண்களை மூடி அப்படியே அமர்ந்திருந்தான். வந்தாயிற்று. அமர்ந்தாயிற்று. இனி அவளாகத் தன்னை அழைக்கும் வரை உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இனி பாதியில் எழுந்து போனாலும் மனசு கேட்காது.

மீண்டும் ஒருமுறை கௌரியின் முகத்தை பார்த்தான். கதிருக்கு அந்த சூழலை வினோதமாக இருந்தது. நான் தொட்டு தாலி கட்டி என் மனைவி. உடலும் உயிரும் மனமும் எனக்கு சொந்தமானவள்.

“அடியே கௌரி, எழுந்துருடி. வந்திருக்கிறது யாருன்னு பாக்கலியாக்கும். என்ன நடிக்கிறியா..? ஓங்கி ஒன்னு விட்டேன்னா..”

என்று பல்லைக் கடிக்கலாம். ஆனால் கதிருக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இங்கே இருப்பது என் மனைவி கௌரி அல்ல அவள் வேறு இங்கு இருப்பவர்கள் வேறு. இவள் யாரோ ஒருத்தி இனிமேல் அந்த காட்சிக்குள் திரும்பிச் செல்லவே முடியாது. அதெல்லாம் பழைய கதை முடிந்து விட்டது. இங்கே இப்போது அவன் சந்திக்க வந்திருப்பது, ஒரு ஆன்மீகவாதியை. கௌரி தன் பிரச்சினைக்கு என்ன சொல்கிறாள் என்று கேட்பதற்கு ஆர்வமாக இருந்தான் கதிர். அவள் மூலமாக தன்னிடம் பேசுவது துடியான ஒரு தெய்வம் என்று அங்கிருந்து மற்றவர்களைப் போலவே அவனும் நம்பினான். ஆரம்ப காலத்தில் அவன் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவனாக தான் இருந்தான் பணம் கொஞ்சம் சேர சேர பகையும் பயமும் கூடவே சேர்ந்து கொண்டே வந்தது.  ஏதாவது ஒரு நம்பிக்கையை பற்றி கொள்ள வேண்டும் என்பதில் எந்த காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவன் கதிர்.

தனக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் யாரோ எழுந்து செல்வது போல் தோற்றமளிக்கவே சட்டென்று கண்களைத் திறந்தான் கதிர். எதுவும் பேசாமல் அவன் முகத்தையே ஒரு உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த கௌரியின் கண்களை அவனால் நேர்கொண்டு நோக்க முடியவில்லை. கதிருக்கு என்னவோ தொண்டையைக் கவ்வுகிறாற் போல இருந்தது. லேசாக செறுமிக் கொண்டான்.

அவளிடம் மிகச் சுருக்கமாக தனக்கு நேர்ந்த தாக்குதலை முடிந்தவரை பின்னி பின்னி சுமாரான வாக்கியங்களில் சொல்லி முடித்தான்.

“எனக்கு யார் மேலெல்லாம் சந்தேகம் இருக்கோ, அவங்க எல்லாமும் இதை பண்ணலைன்னு தெரிய வருது. ஒரு சின்ன பையன் என்னிடம் வேலைக்கு இருந்தான். அவனை முக்கியமான ஒரு கட்டத்தில் நான் கழட்டி விட்டேன். அவன் மேல மட்டும் சந்தேகம் இருக்கு”

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே

” இப்ப என்ன தெரியணும்?”

என்று கேட்டாள் கௌரி.

” சாமி எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. நான் தேடுவது என் கையில சிக்குமா? இந்த பிரச்சனையை நான் எப்படி முடிக்க? ஒரு பக்கம் மனசு ரொம்ப வலிக்குது. இன்னொரு பக்கம் இதைத் தொட்டு மறுபடி எதுவும் பிரச்சனை வந்துருமோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்யட்டும் சாமி?”

கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் இருந்த கௌரி

” உன் புத்தி குரங்கு வேலை தான் பார்க்கும். நீ நிதானத்துல இல்லைன்னா உன் பக்கத்துலயே அந்த ஆள் நடந்து போயிட்டிருந்தாக் கூட  உன்னால அவனைக் கண்டுபிடிக்க முடியாது. கர்வத்தை அழிச்சிரு. குடிக்காத. சுத்தமாய் இரு. பார்வை தெளிவா இருந்தா நீ அவனைப் பார்ப்ப.”

என்றாள்.

“கையில் கிடைத்தால் அவனை என்ன செய்யட்டும்?”

என்று கேட்கலாமா என ஒரு கணம் யோசித்த கதிர் வேண்டாம் சாமி ஏதாவது நெகட்டிவாக சொல்லிவிட்டால் அதை மீறுவது கடினம் என்று தனக்குள்ளேயே கணக்கு போட்டு அடுத்து எதுவும் கேட்காமல் அமைதி காத்தான். தன் முன்னால் இருந்த தட்டில் இருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை ஏந்தி அவன் கரங்களில் போட்ட கௌரி கண்களை மூடி தலையசைத்து நீ கிளம்பலாம் என்கிறாற் போல் சைகை செய்தாள். சடக்கென்று எழுந்து கொண்ட கதிர் பேண்ட் பாக்கெட்டுக்குள் எலுமிச்சம் பழத்தை பத்திரம் செய்து கொண்டு  படி இறங்கி வந்து வீட்டின் கீழ் பகுதிக்குள் சென்றான்.

 பௌர்ணமி தினத்தின் நிலவு ஒளியைச் சொரிந்து கொண்டிருந்தது. கதிரின் உடலாழத்தில் திடீரென ஒரு தாகம் அனத்தத் தொடங்கியது. நாளையிலிருந்து குடிக்க வேணாம். இன்னிக்கு மட்டும் இப்ப மட்டும் ஒரு கட்டிங்கை சாத்தினாத் தான் தூங்குவேனாக்கும் என அவனது உடம்பு மிரட்டும் தொனியில் கெஞ்சிற்று. நெடு நேரம் யோசனைக்குப் பிறகு கைலியும் பனியனுமாக கையில் கண்ணாடித் தம்ளரை ஏந்தியபடி திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உயரே தெரியும் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவன் மனசில் ‘குடித்திருக்க வேண்டாமோ’ என்று தோன்றியது. கதிருக்குத் தன் முகத்தில் தானே ஓங்கி உமிழ்ந்து கொள்ளலாம் போலத் தோன்றியது.

(வளரும்)