ரோந்த்
இரவு என்பது வேறொரு உலகம் என்பது அதனுள் விழித்திருப்பவர்களுக்குத் தான் புரியக் கூடும். எந்த ஒரு மனித வாழ்வினுள்ளெயும் நெடிய உறங்கா விழிகளுடனான ஒருசில இரவுகள் தான் மறக்க முடியாத இரவுகளாகத் தேங்கும். அப்படியானதொரு இரவு தான் ரோந்த் படத்தின் மையப்புலம். காவல் துறை சார்ந்த படங்களைத் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிற ஷாஹி கபூர் இயக்கத்தில் திலீஷ் போத்தன் ரோஷன் மேத்யூ முக்கியப் பாத்திரங்களை ஏற்க மணீஷ் மாதவனின் ஒளிப்பதிவும் அனில் ஜான்ஸனின் இசையும் படகின் துடுப்புக்களாகவே படத்தைச் செலுத்துபவை.
திலீஷ் போத்தன் சமீப நாட்களில் கேரளத் திரை கண்டுகொண்டிருக்கக் கூடிய இரண்டு வைடூர்யங்களில் ஒருவர். (இன்னொருவர் ஜோஜு ஜார்ஜ்).
மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் மூலம் இயக்குனராகத் தன் கணக்கைத் துவக்கியவர். தொண்டிமுதலும் திர்ஷாக்ஷியும் மற்றும் ஜோஜி ஆகிய படங்களை இயக்கிய திலீஷ் தற்காலத்தில் மலையாள சினிமாவின் மோஸ்ட் வாண்டட் குணச்சித்திர முகமாகத் திகழ்வதில் யாதொரு ஆச்சர்யமும் இல்லை. அவர் ஏறி வந்த ஏணியைக் கவனித்தால் திலீஷின் பாத்திர-பரிமள- வேற்றுமை குறித்த தெள்ளிய பார்வை புரியவரும்.
அதுவும் கடந்த ஆண்டு திலீஷ் நடிப்பில் வந்த ஆப்ரஹாம் ஓஸ்லர்-கோலம்-ரைஃபிள் க்ளப் மற்றும் குமாஸ்தன் ஆகிய நாலு படங்களிலுமே உன்னதமான நடிப்பைத் தந்திருந்தார். முத்தாய்ப்பு இந்த ரோந்த். ஷாஹி கபூர் திரைக்கதை அமைத்த ஜோஸப்-நாயாட்டு-ஆஃபீஸர் ஆன் ட்யூட்டி படங்களாகட்டும், முதன் முதலில் அவர் இயக்கிய எல வீழா பூஞ்சிறாவாகட்டும் மலையாளத் திரையின் பேர் சொல்லும் படங்கள் தாம்.
ஷாஹியின் கதாமுறை நுட்பமானது. திரைக்கதையினை வழமையான நகர்த்தல் ஏதுமின்றித் தொடங்குவதிலிருந்து முக்கியப் பாத்திரங்களிடையிலான பல்வேறு முரண்களை விளக்கிக் கொண்டே வரும் திரைக்கதை ஒரு புள்ளியில் வேகமெடுத்துப் பின் நிறைந்து விடுவது அவர் பாணி. கடைசி முப்பது நிமிடங்கள் மலையுச்சியில் நடனமாடுவதைப் போல் திரைக்கதை முற்றிலும் யூகிக்க முடியாத தன்மையோடு பயணப்படுவது உக்கிரம். அதுவும் பார்வையாளன் எந்த ஒரு இடத்திலும் மனவிலக்கம் அடைந்து விடாமல் அவனுடைய மன ஒப்புதலைத் தக்கவைத்தபடி நிறைவது வினோத அழகு.
ரோந்த் படமும் அத்தகைய ஷாஹி ஃபார்முலாவிலிருந்து சற்றும் வழுவாமல் சென்று பூர்த்தியாகிறது. படம் முடிகையில் சாதாரணர்கள் மனங்களில் காவல்துறையினர் குறித்த பொதுத் தீர்மானங்கள் பலவற்றை மாற்றியமைக்க முனையும் .சொல்லொணாப் பேரமைதி ஒன்றினுள் பார்வையாளனை ஆழ்த்துகிற வகையில் ஷாஹி கபூரின் அடுத்த படத்திற்கான காத்திருத்தலையும் ஒவ்வொரு படமும் நிறையும் புள்ளி தொடங்கித் தருகிறது.
அவசியம் பார்க்கத் தகுந்த படம்
ரோந்த்
(ஜியோ ஹாட்ஸ்டாரில் மலையாளம் மற்றும் நானாவித மொழிமாற்றங்களுடன் காணக் கிடைக்கிறது.)