யாக்கை 24
ஆரண்யம்
சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக வேலைக் கிட்டத் தட்ட தரையில் இழுத்தபடி கிடைத்த ஆட்டோவில் ஏறி முதல்ல ஆஸ்பத்திரிக்கு விடு என்று சொல்லும் போது கதிருக்குக் குரல் எழவில்லை. அவன் சண்முகவேல் செத்துவிட்டான் என்று தான் பயந்தான். ஆள் காலியாய்ட்டா எவ்வளவு செலவாகும் என்று தான் கணக்கிடத் துடித்தது அவன் அறிவு. செலவானால் பரவாயில்லை. ஜெயில்-தண்டனை என்று ஆகிவிடுமோ என்பது தான் கவலை. இதெதையும் வெளியே சொல்ல முடியாமல்
“சீக்கிரம் போப்பா…சண்முகம் கண்ணை முளிச்சி என்னப் பாருய்யா”
என்று தழுதழுத்தான்.
பத்திர ஆபீஸுக்கு அப்பால் கணபதி பாலி கிளினிக் என்றிருந்தது. அந்த ஊரின் சீனியர் டாக்டர் முத்துக்கண்ணனின் மருத்துவமனை. முதலில் உள்ளெயே விட மறுத்தார்கள்.
“போலீஸ் கேஸ் எடுக்கிறதில்லைங்க”
என்ற முதிர்ந்த நர்ஸிடம்
” நான் டாக்டருக்கு ரொம்ப வேண்டியவன்”
என்று மட்டும் சொன்னான். அன்றைக்கு மாலை மெட்ராசுக்கு கிளம்ப இருந்த முத்து கண்ணன் இந்த குரலைக் கேட்டதும் வெளியே வந்தார்.
” யாருங்க நீங்க?”
என கேட்க கௌரியின் கணவன் என்று மட்டும் சொன்னான். உடனே டாக்டரின் முகம் மலர்ந்தது.
” உட்காருங்க ஐயா”
என்றவர் ஒரு நொடி கூட வீணாக்காமல் வைத்தியத்தை தொடங்கி 20 நிமிடத்தில் வெளியே வந்தார்.
” பயப்பட ஒன்றும் இல்லை ஐயா. கொஞ்சம் ரத்தம் வீணாயிருக்கு. உயிருக்கு ஆபத்து இல்லை. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடுவார்”
என்று சொன்னார். இவன்
“பீஸ் எவ்வளவு?”
என சட்டைப்பைக்குள் கைவிடப் போக
” என் தங்கச்சி சிவகாமி ,கௌரி அம்மாவோட பெரிய டிவோட்டிங்க. நிறைய சொல்லும். உங்களுக்கு உதவுறது மகிழ்ச்சிங்க”
என்று அனுப்பி வைத்தார். வெளியாள் யார் வந்து கேட்டாலும் அப்படி ஒரு ஆள் அங்கே தங்கி வைத்தியம் பார்ப்பதை சொல்லக்கூடாது என்று கதிரை வைத்துக் கொண்டே நர்ஸிடம் உத்தரவிட்டார்.
இனி என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என தோன்றியது. முந்தைய சம்பவத்தின் படபடப்பு முக்கால்வாசி நீங்கி இருக்க அவனும் வரதனும் லாட்ஜுக்கு வந்தார்கள். யாரும் தேடி வரவில்லை மிக முக்கியமாக போலீஸ் வரவில்லை இப்போதைக்கு பிரச்சனை இல்லை. இதை சாதகம் என்று எண்ணிக் கொண்டு கையை காலை விரித்து படுத்தால் எந்த நேரமும் ஆட்கள் தேடி வரக்கூடும். போலீஸ் வந்தால் அவமானம். எதிரி கோஷ்டி வந்தால் அசிங்கம். இரண்டுமே ரத்தக்காவுதான். இவன் நினைத்தையே வரதனும் சொன்னான். நண்பா ஒரு நாலு நாளைக்கு எங்கேயாவது வெளியில் போய்விடலாம். வண்டி சொல்லு என்றான். மூர்த்தியைப் பணம் ஏற்பாடு செய்து வரச் சொன்னான். மூர்த்தி வரும்போது டவேரா வண்டி டிராவல்சில் கேட்டு எடுத்து வந்திருந்தான். வண்டியில் ஏறும் வரை கதிருக்கு முதுகு குளிர்ந்து கொண்டே இருந்தது. ‘ஏறுடா வண்டியில’ என்று யாராவது முதுகில் அறைந்து இழுத்துப் போகத்தான் போகிறார்கள் என்பது அந்தக் குளிரின் மூலம்.
வண்டி ஊர் தாண்ட கொஞ்சம் நிதானமானான் கதிர்.
“வண்டியைப் பெருமாள் கோயிலாண்ட விடு”
என்றான். வரதன் எதுவுமே பேசவில்லை.
அன்றைய சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல லேசாய் திறந்திருந்த சன்னலின் வழியாக முகத்தில் அறைந்த வேகத்தின் காற்றை அனுபவித்தபடியே கண்களை மூடி அமர்ந்திருந்தான். வண்டியை யுவராஜ் ஓட்ட முன் சீட்டில் கதிருக்கு ஏசி காற்றை மீறி இன்னும் லேசாய் வியர்த்து வந்தது. இந்நேரத்துக்கு ஆபீஸ் வாசலில் இரண்டு மஃப்டி போலீசார் அந்த பக்கம் கதிர் வந்தால் கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு காத்திருப்பார்கள். வாய் விட்டு சொல்லிக் கொண்டான்.
“நல்லவேளை கரண்ட் கட் ஆச்சு அந்த ஒரு நிமிஷம் மூளை வேலை பார்த்ததால் இப்ப தப்பிச்சோம்”
என்று பின்னால் ஜன்னலோரம் அமர்ந்திருந்த வரதனின் முகத்தை பார்க்க இன்னும் அவன் கண்களை மூடியபடியே இருந்தான். ஊரைத் தாண்டுவதற்குள் பெருமாள் கோயில் பக்கத்தில் காத்திருந்த வக்கீல் ஆரோக்கியசாமி தெளிவாக எடுத்துச் சொன்னார்.
“நல்ல வேளை அடிபட்டவனையும் கையோடு தூக்கிட்டிட்டு வந்துட்டீங்க. அவன் மட்டும் மாட்டி இருந்தா வச்சு செஞ்சி இருப்பாங்க. நாளைக்குள்ள சரகத்துக்கு தகவல் போய்டும். ரெண்டு நாள் வேணும் நமக்கு. சனி ஞாயிறு இரண்டு நாள் கோர்ட் லீவ். திங்கட்கிழமை காலைல செங்கல்பட்டு கோர்ட்டில் நீங்க போய் ஆஜராகிருங்க. அதுக்குள்ள என்ன கேஸ் போட்டு இருக்காங்கன்னு பார்ப்போம்.இந்த மூணு ராத்திரி நீங்க கழிக்கிறதுக்கு சேப்டியான ஒரு இடம் வேணும். எங்க போகப் போறீங்கன்னு எனக்கு கூட சொல்ல வேணாம். பத்திரமா இருந்தா சரி. எங்க இருந்தாலும் இது என் வீட்டு நம்பர். தினமும் ராத்திரி 11 மணிக்கு எனக்கு கூப்பிடுங்க. பேசிக்கலாம். ஹோட்டல்ல தங்க வேணாம் எந்த ஊரா இருந்தாலும் முதல்ல ஓட்டல் கெஸ்ட் ஹவுஸ் ரயில்வே ஸ்டேஷன் சினிமா தியேட்டர் ஒயின் ஷாப் அங்கல்லாம் தான் ராவி தூக்குவாங்க. இது ஒன்னும் பெரிய கேஸ் கிடையாது குத்து பட்ட அந்த முரளி உயிருக்கு எதுவும் ஆகலைன்னா சாதாரண உக்காந்து பேசி செட்டில் பண்ணிடலாம். நம்ம பக்கமும் ஆபத்து இருக்கு. சண்முகவேலு செத்துறக் கூடாது. வரதனை ரொம்ப சேஃப்டியா வச்சுக்கோங்க. போயிட்டு வாங்க”
என்று அனுப்பி வைத்தார்.
கதிருக்கு விராலிமலையில் கணேசன் என்று ஒரு சிநேகிதன். திருச்சி ஏரியாவின் கொக்கி. அவனுக்கு சொந்தமான ஒரு தோப்பு அங்கே உண்டு. ஏற்கனவே ஒரு முறை வங்கி அதிகாரிகளோடு இவனும் போய் தங்கி இருக்கிறான் நீச்சல் குளம் பெரிய காம்பவுண்ட் சுவர் வாசலில் செக்யூரிட்டி என அமர்க்களம் ஆன இடம் உள்ளே யார் சென்று தங்குகிறார்கள் என்பது வெளியில் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் தெரிந்து விடாது அவனிடம் போன் செய்து விஷயத்தை சுருக்கமாக சொன்ன போது “எத்தனை நாள் வேணாலும் இருப்பா” என்று சொல்லிவிட்டான். அங்கே தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழியில் நிறுத்தி அன்று இரவு வரைக்கும் ஆன சாப்பாடு குடித்து தீராத சரக்கு தின்பண்டம் சிகரெட்டு பாக்கு என எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி வாங்கிக் கொண்டார்கள். யுவராஜுக்கு இன்னும் நடுக்கம் தீரவில்லை.
“ஜாலியா இர்ரா நம்ம தான் ஜெயிப்போம்”
என்றான் கதிர். திரும்பி வரதனைப் பார்த்தான். அவன் ஆமாம் என்கிறாற்போல் கண்களை மூடி திறந்தான்.
துவரங்குறிச்சிக்கு 12 கிலோமீட்டர் க்கு முன்னால் லேசாக தூறல் விழுந்தது. மழை வலுக்கப் போகிறது என்றுதான் தோன்றிற்று . சொல்லி வைத்தாற் போல் கருமேகங்கள் கலைந்து சற்றைக்கெல்லாம் வானம் வெளுக்கத் தொடங்கியது. ஒளியும் இருளும் ஒருசேரக் குன்றி ஒருவித அசட்டுத்தனத்தோடு வானம் இப்போது காட்சியளித்துக் கொண்டிருந்தது.
“ஓரமா நிப்பாட்டு லேசா வண்டி உழட்றாப்ல இருக்கு பார்க்கலாம்”
என்றான் வரதன்.
“அப்படி எல்லாம் தெரியலையேப்பா”
என பதில் சொன்ன கதிருக்கு திடீரென்று வண்டியை நிப்பாட்டினால் நல்லது தான் என தோன்றியது .யுவராஜ் ஓரங்கட்டி நிறுத்தினான். ஒவ்வொரு டயராக காலால் எத்திப் பார்த்துக் கொண்டே வந்தவன் இடது முன்புற டயரில் காற்று இறங்கியிருப்பதைப் பார்த்து வரதனிடம் ஆமண்ணே என்றான்.
வரதனும் கதிரும் ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்த படி சாலையோரத்துப் பட்டியக்கல்லில் அமர்ந்து கொண்டார்கள். அரைமணி நேரத்தில் யுவராஜ் வந்து
“வண்டி ரெடிண்ணே”
என்றான்.
சரி யுவராஜி
என்றவாறே எழுந்து தன் ஆடையை சரிசெய்து கொண்ட கதிர் வரதனை ஏறிட்டுக்
“கெளம்பலாம்ல..?”
என்று கேட்க அவன் சம்மதமாய்த் தலையாட்டினான். இரண்டு பக்கங்களிலும் சர்ர் சர்ர் என்று மின்னலைக் கிழிக்கும் வேகத்தில் வாகனங்கள் கடந்து கொண்டிருந்தன. மீண்டும் வண்டியை கிளப்பியதும் டாஷ் போர்டில் இருந்த சாமி சிலையைத் தொட்டு உதடுகளில் ஒரு விரலால் முத்திக் கொண்டான் யுவராஜ்.
எதுனா பாட்டை தட்டிவிடு. என்றான் வரதன்.
“மீனம்மா,அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே”
என்று வழிந்து வருடத் தொடங்கியது பாடல்
லேசாய் இருட்டத் தொடங்கியிருந்தது. முற்றிலும் பகல் தொலைந்து இரவாடிய நேரத்தில் கணேசனின் தோப்புக்குள் நுழைந்தது வாகனம். கணேசனின் ஆள் டூவீலரில் முன்னால் சென்று கையை ஆட்டி சைகை காட்டிய இடத்தில் வண்டியை பார்க் செய்து விட்டு இறங்கினார்கள். கதிரைப் பார்த்து சினேகமாய் சிரித்த அந்த ஆள்
“எம்பேரு ஜான்ஸன். கணேசண்ணே காலைல தான் வருவாங்க. உள்ற வாங்க”
என்றான். வண்டி பின் கதவைத் திறந்த யுவராஜ் பெட்டிகளை எடுக்கப் பார்க்க ஜான்ஸன் சிரித்துக் கொண்டே தடுத்தான்.
“நீங்க மட்டும் உள்ள வாங்க. சாமானெல்லாம் வந்து சேர்ந்திடும். போலாம்.”
என்றான்,. கதிர் கண்ணைக் கட்ட யுவராஜூம் கைகளை வீசியபடி உள்ளே நடக்கலானான்.
ஃபோனைப் பார்த்த மாத்திரத்தில் ஆரோக்கியசாமி நம்பரை அழைத்தான் கதிர். பேசி முடித்து விட்டு நிமிர்ந்தவனிடம்
“ ரூமுக்குள்ள போய் பேசிக்கலாம்”
என்று சைகை காட்டினான் வரதன்.
எங்கோ தூரத்தில் பாதி கற்சுவரும் மீதி கம்பி வேலியுமாக நெடிதுயர்ந்து காம்பவுண்ட் சுவர் பாசிப்பச்சை ஏறிப் பார்க்கவே அழகாகத் தோன்றியது.
அந்தத் தோப்பைக் காத்துக் கிடக்கும் ஜான்ஸன் குடும்பத்துக்காக ஓரத்தில் அவுட் ஹவுஸ் ஒன்று குறைந்த பட்ச சவுகரியங்களுடன் தென்பட்டது. தென்னை மரங்கள் வரிசை கட்டி நின்றதால் எப்போதுமே ஒருவிதக் குளுமையும் மந்தமான இருளும் சூழக் கிடந்தது. ஆறேழு நாய்கள் வினோதமான சப்தக் கலவையுடன்
அவ்வப்போது தங்களது இருப்பைத் தெரிவித்தவண்ணம் இருந்தன. இடப்பக்க மூலையில் ஒரு பெரிய நீர்த்தொட்டி இருந்ததைக் கூர்ந்து பார்த்த வரதனிடம்
“மீன் வளர்க்குறம். கணேசண்ணனே பாதியத் தின்றுவாரு. அம்புட்டுப் பிடிக்கும் மீனுன்னா”
என்று சிரித்தான் ஜான்ஸன். படிகளில் ஏறிக் கட்டிடத்தினுள் நுழைந்தார்கள். உட்புறம் பெரிதாக முகத்தில் அறைந்தது. ஒரு மாதிரி செயற்கையான செல்வந்தச் செழிப்பை முன் நிறுத்தியபடி விஸ்தாரமான ஹாலும் ஒட்டினாற் போல் நாலு பெட்ரூம்களுமாக பழைய சினிமாக்களில் காட்டப்படுகிற பங்களாக்களில் ஒன்றைப் போல் இருந்தது அந்த இடம். கதிரும் வரதனும் வலப்பக்க பெட்ரூமை எடுத்துக் கொண்டனர். குறிப்பறிந்து அவரவர் பைகள் வந்து சேர்க்கப் பட்டன. மூர்த்தியும் யுவராஜூம் இடது பக்கம் கடைசி ரூமுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
“கொஞ்ச நேரம் கண் அசர்றேன்.”
என்று சம்பிரமமாய்ப் படுத்த அடுத்த நாலாவது நிமிஷம் தன்னைத் தூக்கக் கடலின் ஆழத்தில் எங்கோ செருகிக் கொண்டான் கதிர். வரதன் தூக்கம் வராமல் டிவியை ஆன் செய்து ஓடத் தொடங்கிய நகைச்சுவைக் காட்சியை அசுவாரசியமாகப் பார்க்கலானான். யுவராஜூம் உறங்கிவிட்டபடியால் கிளம்பி வரதனை வந்தடைந்த மூர்த்தி அவன் முகத்தையே பார்த்தான். சைகையால் “பாட்டிலை எடு” என்று வரதன் உத்தரவிட முகமெலாம் மலர்ந்த மூர்த்தி டீப்பாய் மீதிருந்தவற்றில் ஒரு ஹாஃப் பாட்டிலைப் பூப்போலத் தன் கைகளில் எடுத்துக் கன்னத்தோடு உரசிக் கிறங்கினான். அவனது செய்கையால் தன்னை மீறிப் புன்னகைத்த வரதன்
“இங்க வேணாம் கதிரு தூங்கட்டும்”
என்றதைத் தொடர்ந்து ஹாலுக்கு வந்தார்கள். பெரிய ஊஞ்சலில் அமர்ந்து கொண்ட வரதன் அதை லேசாகத் தன் கால்களால் நெம்பி ஆட்டிவிட்டான். ஹெய்ங் ஹெய்ங் என்ற தன்மொழியுடன் மெல்ல ஆடிய ஊஞ்சலைத் தன் கால்களை மீண்டும் தரையில் ஊன்றி நிறுத்தினான்.
“ எப்பமோ சின்ன வயசுல ஆடுனது. இப்பல்லாம் ஊஞ்சலை எங்கன பார்க்க முடியுது?”
என்றபடியே ஆளுக்கொரு தம்ளரைத் திரவமூற்றித் தன்னுடையதை ஏந்திக் கொள்ளுமுன் வரதனிடம் ஒரு தம்ளரைக் கையளித்தான் மூர்த்தி. வெளியே மீண்டும் நாய்களுக்கிடையிலான தொண்டைக்குழி யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. சற்றைக்கெல்லாம் ஒரே ஒரு நாய் வய்ங் என்றவாறு ஈனமாய்க் குரல் குன்றி மொத்தச் சப்தமும் மீண்டும் அடங்கிற்று. சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த ஜான்ஸன் மீன் துண்டங்களையும் அவித்த முட்டைக் கீறல்களையும் இரண்டு தட்டுக்களில் கொணர்ந்து வைத்தான்.
“இருங்க ஃப்ரூட்ஸ் வருது”
என்று சொல்லிப் போனான்.
“எதும் பிரச்சினை ஆய்டாதில்ல வரதா?”
என்று சன்னமான குரலில் கேட்டான் மூர்த்தி. அப்படிக் கேட்டிருக்கக் கூடாதோ என்று உடனே மனம் கவிழ்ந்தான். வரதன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது நிம்மதியாய்த் தோன்றவே பேச்சை மாற்றும் வண்ணம்
“ரஜினிகாந்து மட்டும் கச்சி ஆரம்பிச்சிட்டா எல்லாமே மாறிரும்ல வரதா?”
என்றான். வரதன் மெல்லத் தன் தாடியை நீவிக் கொண்டான். தட்டிலிருந்த மீன் துண்டம் ஒன்றை எடுத்துச் சதைப்பற்றை முழுவதுமாகத் தொண்டைக்குள் அனுப்பி விட்டு முள்ளை மட்டும் வெளியேற்றிக் குப்பைத் தட்டில் இட்டவன் க்ஹ்ரம் என்றவாறே மீண்டுமொரு சிப்பை உட்கொண்டான்.
“ இங்கபாரு. நான் குத்துனவன் பெரும்பாலும் பொளச்சிக்கிடத் தான் வாய்ப்பதிகம். பொளச்சிட்டா சுளுவாப் பேசி முடிச்சிரலாம். மீறி செத்தா கேஸ் பெருசாய்டும். ரெண்டே வாய்ப்புத் தான். ஒண்ணு நானே ஒப்புக்கிட்டு உள்ள போவணும். இல்லாட்டி எனக்கு பதிலா யாராச்சும் போகணும்.”
“அதெப்படிப்பா உனக்கு பதிலா யாராச்சும் போக முடியுமா?”
என நிசமான அக்கறையுடன் கேட்டவனிடம் தன் தாடியை இரண்டு கைகளாலும் நீவி சரிசெய்து கொண்டே
“அதெப்படிப்பா யாராச்சும் போகமுடியும்? கதிரு போப்போறதில்லை. சண்முகவேல் அடிபட்டிருக்கான். மிச்சமிருக்கது மூணே பேரு. ஒண்ணு நீ போவணும். இல்லாட்டி யுவராஜி. ரெண்டே ஆப்சன் தான். உனக்கு காரோட்டத் தெரியுமா..?”
என்றான். மொத்த வாழ்வும் இருளத் தொடங்கிய மூர்த்தி
“இல்லப்பா டச் இல்லை. சரியாத் தெரியாது”
என்று சொல்லும் முன்பே குரல் கம்மிக்கொண்டு ஒருமாதிரி அழுகைக்கு முந்தைய முகபாவத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டவன்
“ வேற வழியே இல்லையா?”
என்று மட்டும் கேட்டான்.
“கதிரு உனக்கு எத்தினி செய்திருப்பான். நீ அவனுக்காக இந்தச் சின்ன விசயத்தைக் கூட செய்ய மாட்டியா?”
என்ற வரதன் முகத்தில் சிரிப்போ வேறெந்தப் பகடியுமோ தென்படவில்லை.
“இதுவாய்யா சின்ன விஷயம்?”
என்று கேட்க நினைத்த மூர்த்திக்கு வார்த்தைகள் வரவே இல்லை. யாரிடம் கேட்பது?. வரதன் சொல்வதை தான் கதிர் பயல் அப்படியே கேட்பான். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒருவன் அடுத்தவன் பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போவதெல்லாம் நடக்கிற காரியமா? ஏற்கனவே அவன் குடும்பம் பலவீனங்களின் நூலாம்படையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. ரொம்ப காலமாகவே அப்படித்தான். அடிக்கடி பிணக்கும் பூசலும் ஏற்பட்டு சொந்த பந்தங்கள் அதை சரி செய்வது, பிறகு கொஞ்ச காலம் அமைதி, பின் மீண்டும் பூகம்பம் என ஒரு மாதிரி சங்கிலி தொடர்ச்சி. இந்த லட்சணத்தில் கதிருக்காக வரதன் குத்தினான். எதிராளி செத்தான். அந்த பழியை மூர்த்தி ஏற்றுக் கொண்டு ஜெயிலில் இருக்கிறான் என்கிற வாக்கியமே கோமாளித்தனமாக இல்லையா? மூர்த்தி இப்போது கொந்தளிப்புக்கு வந்து சேர்ந்திருந்தான். ஏன் இந்த நாய் செய்ததற்கு இதுவே பழி ஏற்காதா? என்னை பார்த்தால் இளிச்சவாயன் என்று தெரிகிறதா? நீயாச்சு, உன் வேலையும் ஆச்சு என்று கிளம்ப வேண்டியதுதான். அதிலும் அவனுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. இத்தனை வயது அப்புறம் யாரிடமும் போய் வேலை கொடு என்று கேட்கவே முடியாது வீட்டில் சில கல்யாணங்கள் வேறு வர இருக்கின்றன. இத்தனை காலம் கதிரைக் காத்து விட்டு இப்போது விலகிப் போனால் அம்மஞ்ஜல்லிக்கு பிரயோஜனமில்லை.
‘நானாவது விடுவதாவது‘.
வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினான் மூர்த்தி.வரதன் என்ன நினைக்கிறான் என்பதை எப்போதுமே யூகிக்க முடியாது. கதிர் ஒருவனிடம் தான் அவன் நாலைந்து வார்த்தைகள் அதிகமாகப் பேசுவான். மற்ற படி யாராக இருந்தாலும் ம்ம் ஆங் சரி வேணாம் என ஒற்றைச் சொற்களின் கூடையாகத் தான் தெரிவான்.
அவன் கழுத்தைப் பற்றி “ஏண்டா நாயே நீ செய்த தப்புக்கு நான் பழி ஏற்கணுமா” என்று கேட்டுத் தீரவேண்டும் என உள்ளே ஒரு குரல் ஒலிக்கத் தான் செய்தது. அமைதியாவே இருப்பம் என்று தன்னை அமர்த்திக் கொண்டான். அவனுக்குத் தேவைகள் இருக்கின்றன. கதிர் வந்து என்ன சொல்கிறான் எனப் பார்க்கலாம். இவன் யார் நடுவில் என தன்னைச் சமாதானம் செய்துகொண்டான்.
“சரி தூங்கப் போலாம்”
என்று கையில் இருந்த சிகரட் துண்டத்தை ஆஷ்ட்றேயில் அழுத்திவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்து காணாமற் போனான் வரதன். தங்கள் அறைக்குள் பூனை போல் நுழைந்த மூர்த்தி யுவராஜின் ஆழ்ந்த உறக்கத்தை ஏக்கமாகப் பார்த்து விட்டுத் தன் படுக்கையில் விழுந்தான். வெளியே தொடங்கிய விக்கல் முழுவதுமாக நிற்பதற்கு நேரம்பிடித்தது. பின்பே தூங்கலானான்.
நடுக்கூடத்தில் ஃபோன் ஒலிக்கிறது. வக்கீல் ஆரோக்கியசாமி கடுங்குரலில் அந்த முரளி செத்துட்டான்யா….நீங்கள்லாம் தொலைஞ்சீங்க” என்று முழங்குகிறார். கதிரும் வரதனும் சிரித்துக் கொண்டே ரத்தம் ஒழுகும் கத்தியை மூர்த்தியின் கைகளில் திணிக்கின்றனர். இல்ல நானில்ல நான் சும்மா வேடிக்கை தான் பார்த்தேன் என்று அந்தக் கத்தியை வாங்க மறுத்து மூர்த்தி தெருவில் இறங்கி ஓடுகிறான். அவனைப் பாய்ந்து சென்று பிடித்து வரும் நூற்றுக்கணக்கான போலீஸ் கூட்டம் மீண்டும் அவனைக் கதிர் இருக்கும் இடத்துக்கே இழுத்து வருகிறது. இப்போது வாயில் ரத்தம் வழிய முரளி கண்கள் மேல் நோக்கி வெறிக்க “ ஆமாங்கய்யா…என்னையக் கொன்னது இவன் தான்” என்று மூர்த்தியைக் கை காட்டுகிறான். அதே கணேசன் தோப்பில் ஒரு தென்னை மரக் கிளையில் தொங்குகிற தூக்குக் கயிற்றை நோக்கி மூர்த்தியை நெட்டித் தள்ளுகிறது போலீஸ்
சடாரென்று உறக்கத்திலிருந்து எழுந்து கொண்டான்.
“யாத்தே…இதென்ன துர்க்கனவால்ல இருக்கிது?”
குலதெய்வத்தின் பெயரைச் சற்றே உரக்க முழங்கினான்.
“நீ தான்யா உம்பிள்ளையக் காத்து ரட்சிக்கணம்”
என்று கம்மிய குரலில் முணுமுணுத்தவன் ஹேங்கரில் தொங்கிய பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தான். வலப்புற கம்பார்ட்மெண்டில் பல நாட்கள் முன்பு வைத்த காலண்டர் தாளைப் பிரித்தான். குலதெய்வக் கோயில் திருநீற்றைக் கொஞ்சமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். விளக்கை அணைக்காமல் ஒளிரவிட்டபடியே மீண்டும் உறங்க முயற்சித்தான். எப்போதெனத் தெரியாத பொழுதொன்றில் தூங்கலானான்.
{வளரும்}