யாக்கை 26

யாக்கை 26
ஊஞ்சல்


காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார். அவரது  அண்ணன் தம்பிகள் எல்லாரும் ராணுவத்தில் சேவை செய்தவர்கள். உடம்பைப்  பேணுவதைப் பற்றித்தான் எப்போதும் அந்த குடும்பத்தினர் பேசிக் கொண்டிருப்பார்கள். நெடுநாள் கழித்துப் பார்த்தால் உடம்பின் எந்தப் பகுதி சதைப் பற்று கூடிக் குறைந்திருக்கிறது எதை எப்படிப் பராமரிக்க வேண்டும் , ஒவ்வொருவரின் பலவீனம் என்ன?  என்றெல்லாம் பேசுவார்கள். பன்னிரெண்டு வயதாகும்போது மூர்த்தியின்  அக்கா  கல்யாணம் . மூன்று வருடங்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது பிறகு அவனும் மாமா ஞானசேகருடன் சேர்ந்து எழுந்ததும் தினமும் காலையில் ஓட்டம் அல்லது நடை பிறகு ஒரு மணி நேரமாவது ஜிம்மில் ஒர்க் அவுட் என்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டான் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ கூட்டத்துக்குள் சிக்கிய நாய் தன் சகாக்கள் குறைக்கும் போது அதுவும் குறைத்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் அதை கடித்தே கொன்று விடுவார்கள்.

கிரானைட் பதித்திருந்த அந்தப் பெரிய ஹாலில் சற்று நேரம் ஊஞ்சலுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆக நடந்து பார்த்தான். பத்து நிமிடம் கூட முடியவில்லை குளிர்காலம் அதிலும் முந்தைய தினம் இரவு நல்ல மழை பொழிந்து சீதோஷ்ணம் ரம்யமாக இருந்தது. வெறுங்காலில் கிரானைட் கற்களின் மீது நடந்தால் பற்கள் கட்டித்து விடாதா என்ன? அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவனைத் தவிர மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எந்த கவலையும் இல்லாமல் வரதனும் கதிரும் தூங்குவதைப் போய் பார்த்து விட்டு வந்தவனுக்கு கடுப்பாக இருந்தது . எவனோ எதையோ செய்தால் என்னை ஏன் இம்சிக்கிறார்கள் கொடுக்கிற சம்பளத்துக்கு நாய் போல குறைக்க சொன்னால் பரவாயில்லை, நான்கு காலில் நடக்கச் சொன்னால் எப்படி?  இருப்பதும் கஷ்டம் ஓடுவதும் கஷ்டம்.  அத்தனை அதிகாலையில் நொந்து போனான். மணி என்ன என்று தெரியவில்லை முந்தைய இரவு அடித்த சரக்கின் வீரியம் தலைக்கேறித் தலை விண் விண் என்று தெறித்தது. அந்த அதிகாலையில் ஜான்சன் எழுந்து வெற்று உடம்பின் மீது ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு எங்கோ கிளம்பப் பார்க்க

“எங்கேப்பா போற இம்புட்டு சீக்கிரத்ல?”

“நானா இதுவே லேட்டுங்க… நீங்க  யாரும் வந்திருக்கலைன்னா இதற்கு முன்னாலேயே எழுந்திருந்திருப்பேன். இங்க  எனக்கு வேலை ஒவ்வொரு நாளும் நாலு மணிக்குத் தொடங்கி 11 மணிக்கு முடிஞ்சிரும். “

என்றதை வியப்போடு பார்த்த மூர்த்தி

“என்னப்பா வித்தியாசமா சொல்ற?”

“ ஆமாங்க கணேசண்ணன் இந்தத் தோட்டத்தை ரொம்ப உசிரா நினைக்கிறாரு . தேவையில்லாம ஒரு புல்லோ பூண்டோ பார்த்தாக் கூட வருத்தப்படுவாரு. செடிகளை எல்லாம் பராமரிக்கிறது அவ்ளவு சாதாரண வேலை இல்லைங்க. தென்னை மரங்களை பிள்ளைகள பாக்குற மாதிரி பாக்கணும். கொஞ்சம் விட்டோம்னா கெட்டுப் போயிரும் மரத்தில பூச்சி பிடிக்காமல் இருக்க தென்ன மருந்து வைக்கணும் அளவு கொஞ்சம் கூடுனா விஷம் ,குறைஞ்சா பூச்சிகள் மட்டுப்படாது. அதைப் பாக்கணும் பின்னாடி ஏளெட்டு  ஆட்டுக்குட்டிங்க இருக்கு அதுங்களோட பொழுது நிறைய போகும்”.

எனச் சிரித்தான்

“ஆடுக வேற இருக்குதா?”

என்ற மூர்த்தியிடம்

“ஆமாங்க சண்ட கெடா வேற இரண்டு இருக்குது. அதுக்கு ரெண்டுக்கும் என்ன பெயர் தெரியுமா “நாகேசு நம்பியாரு” இரண்டையும் ஒரே இடத்தில் வைக்கவே முடியாது எம்புட்டு தொலைவா கட்டி வச்சாலும் ஓன்ன ஒன்னு பார்க்கும்போது சீறிகிட்டே இருப்பானுங்க”.

“ஏன் தனித்தனியா கட்ட வேண்டியதுதானே?”

இதைக் கேட்டிருக்கக் கூடாது என உடனே தோன்றியது மூர்த்திக்கு

“ஏங்க இடமா இல்ல, சேர்த்து கட்டுறது எதுக்கு ஒன்னோட ஒன்னு பார்வையிலே இருந்தாத் தாங்க அதுங்களுக்கு எப்பவுமே ரோஷம் வரும்.
கெடா சீறிக்கிட்டே இருந்தாத் தான் மதிப்பு. அப்பத்தான் சண்டையில அவுக்கும் போது வேகமா வேலை பார்க்கும். தனியா வளர்த்தா கெடா மந்தமாயிடும் பார்த்தால் பயம் வர்றது முக்கியம் இல்லைங்க வேகத்துல இருக்கணும் வீரியம். பொழுது புலரட்டும் இன்னிக்கு சண்டைக்கு அவுத்து காட்டுறேன்”

எனச் சொல்லிவிட்டு பங்களாவின் பெரிய படிகளை விளக்குமாறு கொண்டு கூட்ட ஆரம்பித்தான் ஜான்சன்.  முடித்துவிட்டு நிமிர்த்தவன்

“என்ன உறக்கம் வரலையா புது இடம் அதனால இருக்கும் இன்னைக்கு ராத்திரி நல்லா தூங்கிடுவிங்க”

என அருள் வாக்குப் போல் சொன்னதைக் கேட்டதும் கவலை வழிய

“இன்னைக்கு தூங்கியே ஆகணும் தம்பி”

என அலுத்துக் கொண்ட மூர்த்தி

“இது தவிர மீனுங்கள வேற நீ பார்க்கணும் இல்ல?”

என்று கேட்க

“மீனுங்கள பண்ணையம் பண்ண என் பொண்டாட்டி ஜோதி இருக்கா. தண்ணீல அவ கை வச்சு அளைஞ்சா போதும் அத்தனை மீன்களும் வந்து மொச்சிக்கும்.”

என்றான் பெருமிதம் பொங்க.

“உனக்கு எவ்வளவுப்பா சம்பளம்?”   என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே

நா இங்கன வேலை பார்க்கல . இதெல்லாத்தையும் நாந்தான் பொறுப்பேத்துப்  பாத்துட்டு இருக்கேன் அதனால எனக்கு சம்பளம் கிடையாது மொத்த
 வருமானத்தில் பங்கு”

சாதாரணமாய்ச் சொன்ன ஜான்சன் அது ஒரு பெரிய விஷயமே அல்ல என்பதைப் போல் மீண்டும் சிரித்தான்.

“ எத்தனை வருஷமா இவர் கூட இருக்க?”

“ நானா நான்  வந்து  20 வருஷம் ஆச்சு கணேசண்ணனுக்கு பல தொழில் இருக்கு ஆள் ராசி மிக்கவர். இன்னும் பத்து தொழில் பண்ணாலும் நம்பி அவர்கிட்ட வேலைக்கு ஆள் வரும். அவரும் நல்லா பாத்துக்குவார்.”

என்ற ஜான்சன் எதிர்பாராத நேரத்தில்

“சரிண்ணே  உங்க ஆளு எப்படி?”

என கேட்டான்.

 

“கதிரா… அவன் என் கிளாஸ்மேட். சின்ன வயசுல இருந்து ஒண்ணா படிச்சு வந்தோம் அவனும் யோகக் காரன் தான் இந்த ஏஜென்சி எல்லாம் கூப்பிட்டு கொடுத்தாங்க ஈ மொக்கிறாப்ல பசங்க அவனை மொக்கிறாங்கிய. நல்லாவே ஓடுது வண்டி. நான் சம்பளத்துக்குத் தான் இருக்கேன். ஏதோ ஓடுற வரைக்கும் ஓடட்டும்ணு கூடவே இருக்கேன். கதிர் தன்மையானவன் தான் அந்த தாடிக்காரன் இருக்கானே வரதன், அவன் உடம்பெல்லாம் விஷம்யா. அவன் கூட சேர்ந்தா யாரும் உருப்படவே முடியாது. ரொம்ப நல்லா இருந்த கதிரையும் ஜெயிலடி பார்க்க வச்சிட்டு தான் விடுவான் போல இருக்கு?”

 

“ஏங்க காசு சரியா தரமாட்டாரா?”

என்ற ஜான்சன் மேல் துண்டால் தன் உடம்பை துடைத்துக் கொண்டான்.

“ கதிர் நல்ல  செலவாளி அதெல்லாம் மனசா செலவழிப்பாப்ல ரெண்டு பிரச்சனை ஒன்னு அவன் என்ன சொன்னாலும் கேட்கணும் இன்னொன்னு பொண்டாட்டி புள்ள குட்டிய பாக்குறதுக்கு கூட அவன் அனுமதித்தால் தான் முடியும். பார்த்து பார்த்து தீபாவளி பொங்கலுக்கே அரை மனசாத்தான் லீவு கொடுப்பான்.”

என்று அலுத்துச் சிரித்தான்.

 

“இந்த வரதன் யாரு அவரும் வேலை பார்க்கிறாரா?”

“ இல்ல இல்ல அவன் முதலாளிக்கு சொந்தக்காரன். ஆளு பெரிய ரவுடிப்பா. பஞ்சாயத்து பேசுறதா இருந்தாலும் சரி அடிதடியா ஆனாலும் சரி கில்லாடி. எங்க ஆளுக்கு ஒரு பிரச்சனை. ஒருத்தன் தன் முகத்தை மறைச்சிகிட்டு அந்த ஆள அடிச்சுப்புட்டான். அடின்னா சாதாரண அடி கிடையாது. சாத்து சாத்துன்னு சாத்திட்டான். ஆள் யார்ன்னு தெரியல. எங்காளு ரொம்ப கலங்கி போய்ட்டாப்ல. கிறுக்கு பிடிச்சிருச்சு. ஆள கண்டுபிடிக்கிறதுக்காக இந்த வரதனை வரவழைச்சாப்புல. கல்யாண வீட்ல வேற ஒரு சண்டை. எதுக்கோ கிளம்பி போயி எதையோ வாங்கிட்டு வந்தானாம் ஒருத்தன். எதுக்கோ கெளம்பி இப்ப என்னத்துக்கோ ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கம். இது எத்தனை நாளுக்கோ?”

என்றவன் குரலை தாழ்த்திக் கொண்டு

“வரதன் ரெண்டு பேத்த குத்திட்டான்யா. அதுல ஒருத்தன் சீரியஸா இருக்கான். செத்தா கொலை கேசு. அவன் செஞ்சதுக்கு அவன் தானே உள்ளே போகணும்?”

இன்னும் குரலை தாழ்த்திக் கொண்டு

“என்னைய உள்ளடி பாக்கச் சொல்வானுங்க போல்ருக்கு”

என சொல்லி முடிக்கும் போது சோகமாகிவிட்டான்

                  “என்னண்ணே சொல்றீங்க அப்படின்னா நீங்க உள்ள போக போறீங்களா? அடப்பாவமே!”

உண்மையாகவே வருத்தப்பட்டான் ஜான்சன்.

“ அட நீ வேற கதிர் எனக்கு நிறைய நல்லது செஞ்சிருக்கான் அவனுக்காக என் உசுர கொடுத்தாக் கூடத் தகும். இந்த நாய்க்காக என் பொண்டாட்டி புள்ள குட்டிய விட்டுட்டு கம்பி எண்ணிட்டு இருக்கிறதா? கதிர் எழுந்திருக்கட்டும் மூஞ்சிக்கு நேரா இத பத்தி தான் பேச போறேன் அவன் என்ன சொன்னாலும் சரி வேலைக்கு வர சொன்னாலும் சரி வேலையை விட்டுட்டு போக சொன்னாலும் சரி மஞ்சப் பையில துணிமணியை சுருட்டிக்கிட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன். எதுனா புது கட்டட வேலை நடக்குற இடத்துல வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தாக் கூட நாலு காசு சம்பாதிச்சிட்டு போறேன் .போதும்யா இதுக்கு மேல நம்மளால ஆகாது சாமி, இவனுங்க விட்டா டயர் கம்பெனி விளம்பரத்துல வர்ற மாதிரி மேல் சட்டை போடாம நாளெல்லாம் டயரை தூக்கிக்கிட்டு நிக்க சொல்லுவானுங்க”

அவனுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது

“காலங்காத்தால உங்களை இப்படி கண்கலங்க வைக்கிறாங்களே?”

என ஜான்சனின் இரக்கம் வேறு இன்னும் அழுத்த எப்போது எனத் தெரியாமல் கழுத்து பக்கம் சூடான மூச்சுக்காற்று படுவதை சட்டென்று உணர்ந்து திரும்பிப் பார்த்த மூர்த்தி சிவக்கும் விழிகளுடன் அத்தனை நெருக்கத்தில் கதிர் நிற்பதை பார்த்து ஒரு கணம் விடுக்கிட்டான்

 

“என்னய்யா சீக்கிரமே எந்திரிச்சிட்ட?”

என்ன பேசுவது என்று தெரியாமல் கேட்ட மூர்த்தியிடம்

“இல்லையே இன்னும் நான் எந்திரிக்கலையே “

என்றான் கதிர். மூர்த்தி என்ற ஒருவன் அங்கிருப்பதைக் கொஞ்சமும்  லட்சியம் செய்யாமல் ஜான்சனை பார்த்து

“கணேசன் எப்ப வருவாப்ல?”

தோரணையான குரலில் கேட்ட கதிரிடம்

“அண்ணே 10 மணிக்கு வருவார் அண்ணே”

பவ்யமாக பதில் சொன்ன ஜான்சனிடம்

“போன் எந்த ரூம்ல இருக்கு?”

“ முன்னாடி ரூம்லண்ணே.”

“ வக்கீலுக்கு பேசணும்”

என சொன்னவனை அழைத்துப் போனான் ஜான்சன். தான் பேசியதை கதிர் எத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்தான் என்பது தெரியாமல் மேலும் மண்டை வலி அதிகமாக அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்த மூர்த்திக்குத் திடீரென்று ஒரு துளி வீரம் பிறந்தது.

“ நான் எதுவும் தப்பா பேசலையே நான் என்ன அடிமையா கூலிக்கு வேலை பார்த்தேன் வேலைக்கு கூலி கொடுத்த. கூட இருக்கிற பாவத்துக்கு வெயிலுக்கு எல்லாம் போக முடியாது. என் பொண்டாட்டி புள்ள குட்டிக காறித்துப்பாதா?”

அவனுடைய பிள்ளைகளும் பருமனான மனைவியும் ஒரே நேரத்தில் தாறுமாறாக அவனை மிதிப்பது போல் ஒரு கணம் கண்முன் வந்து போயிற்று.

“பேசியவரைக்கும்  நல்லது தான்”

என்று நினைத்தவனுக்குச் சற்றே தலைவலி குறைந்தாற் போல் தோன்றியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ தட்டில் காப்பி தம்ளர்களை ஏந்தி வந்த ஜோதி

“இந்தாங்க, காப்பி எடுத்துக்குங்க”

 

என்று நீட்ட பல் விளக்கவில்லை என்பதை அலட்சியம் செய்தபடி காபியை வாங்கிக் கொண்டான் மூர்த்தி.

தன் வீட்டுத் தொலைபேசி விடாமல் ஒலிப்பதைக் கேட்டு உறக்கத்திலிருந்து எழுந்து கொண்ட ஆரோக்கியசாமி சுவரில் தேடி கையில் குழந்தை இயேசுவை ஏந்தி கொண்டு புன்னகைக்கும் மாதாவின் படத்தை பார்த்து இரு கரம் கூப்பி வணங்கிவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினார். போனை எடுத்து “யாரு” என கேட்டார்.

“சார் நான் கதிர் பேசுறேன்”

என்றதும்

“ஒரு நிமிஷம் லைன்ல இருங்க”

என்று ரிஸீவரைப் பக்கவாட்டில் கிடத்திவிட்டு மெல்ல நடந்து கழிப்பறைக்குள் சென்றார். மூன்று நிமிடங்களுக்கு பின் முகத்தையும் கழுவிக்கொண்டு துண்டால் துடைத்துவிட்டு தோளில் மாலை போல்  அணிந்தபடி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து ரிஸீவரை எடுத்து

“ம்ம் சொல்லுங்க”

என்றார்.

” ஸாரி சார். ரொம்ப சீக்கிரமே எழுப்பிட்டேனோ? எனக்கு சரியா உறக்கம் கொள்ளலை. நாலு மணிக்கு மேல பெறன்டு பெறண்டு படுத்துக்கிருந்தேன். ஒரு வழியா விடிஞ்சதை பார்த்ததும் உங்களுக்கு அடிச்சிட்டேன்”

லேசாய் சிரித்த வக்கீல்

                                    ” கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கும். எனக்கு புரியுது. கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல அந்தக் கேசட் கடைக்காரன் முரளியும் இன்னொருத்தன் வெங்கடேசனும் சீராத் தான் இருக்கானுங்க. உயிருக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. வெங்கடேசனுக்கு விழுந்த குத்து இன்னும் கொஞ்சம் இறங்கி இருந்தா இந்நேரம் செத்துட்டு இருப்பான். கேஸ் ரொம்ப பெருசாகியிருக்கும். தப்பிச்சது நன்மைன்னு நெனச்சிக்கங்க. கல்யாண வீட்டுத் தரப்புல கம்ப்ளைன்ட் ஆயிருக்கு. குத்துப்பட்ட ரெண்டு பேரும் தனியா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அது போலீஸ் நடைமுறை. ஆளுங்க பொளச்சிட்டதுனால கேஸ் பெரிசா நிக்காது. ஆனால் போலீஸ சுளுவா எடுத்துக்க முடியாது. செல்வாங்குற ஆளோட நாலு பவுன் தங்கச்சங்கிலியை உங்க கூட வந்த வரதன் பறிச்சிட்டு தப்பிச்சிட்டதா கேஸ் எழுதிருக்காங்க. உங்க மேல பெருசா புகார் இல்லை. உங்க வீட்டம்மா முகத்துக்காக எல்லோருமே பார்க்கிறாங்க. கவலைப்படாதீங்க பேசித் தணிச்சிறலாம். “

என்றவர் வாசல்பக்கம் நாய் குறைக்கக் கண்டு

“ஜாக்கி சும்மா இரு”  என்று கத்தியபடி

“அலங்காரவல்லிபுரம் டி எஸ் பி ஜெகதீஸன்னு நமக்கு வேண்டப்பட்டவரு. அவர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். அவர் பேசிட்டு வரட்டும். என்ன சொல்கிறார் என்று பார்த்துட்டு அடுத்த கட்டம் மூவ் பண்ணிக்கலாம். நீங்க தைரியமா இருங்க.”

தணிந்த குரலில் தீர்க்கமாகப் பேசி முடித்த ஆரோக்கிய சாமியிடம்

” ரொம்ப நன்றி ஐயா. உங்க உதவிய என்னிக்கும் மறக்க மாட்டேன்”

என்றவன் அரை நிமிடம் மௌனித்துவிட்டு

” நீங்க சொல்றப்ப ஊருக்குள்ள வந்தா போதும். அப்படித்தானே?”

என்றான்

” கதிர்… உங்க மனைவியைத் தவிர யாருகிட்டயும் நீங்க இப்போ இருக்கிற எக்ஸாக்ட் லொகேஷனை சொல்லாதீங்க. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். யாரையும் முழுசா நம்புறது தப்பாயிடும். யார் யார்ட்ட எல்லாம் நீங்க பேசணும்னு நினைக்கிறீர்களோ எல்லா விஷயத்தையும் உங்க மனைவி கிட்ட சொல்லி அவங்க மூலமா மத்தவங்க கிட்ட பேச வைங்க. இன்னும் நாலஞ்சு நாளாவது நீங்க மறஞ்சி  தான் இருக்கணும். மறுபடியும் சொல்றேன். போலீஸ் கையில ரெட் ஹேண்டடா நீங்களோ அல்லது வரதனோ மாட்டிறக் கூடாது. தேவைப்பட்டா கேசோட தீவிரத்தைப் பொறுத்து ஆன்டிசிபேட்டரி பெயில் எடுத்ததுக்கு அப்புறம் ஊருக்குள் வரலாம். சமாதானமா பேசி முடிக்கிறதா இருந்தாலும் பேசுறதுக்கு நீங்க வரக்கூடாது. முடிச்சப்புறம் வரலாம். ஜாக்கிரதையா இருங்க”

என்றார்.

” வேறு ஏதும் பிரச்சனை ஆகாதுங்களே?” என திரும்ப கேட்டவனிடம்

 

” கதிர் பயப்படாதீங்க. விஷயம் உங்களுக்குத் தான் சாதகமாக இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் அது அதுக்கு உண்டான காலம் ஆகத்தான் செய்யும். பொறுமை காக்கலைன்னா அவமானப்பட வேண்டி வரும். குத்து வாங்கினவன்ல அந்த முரளி பயந்த சுபாவத்துக்காரன். அவனுக்காக கோட்டை வீட்டு சின்னுன்னு ஒரு ஆள் மட்டும்தான் எதுனா செய்தா உண்டு. அதைக் கூட பேசிக்கலாம்னு தோணுது. வெங்கடேசன்னு அந்த இன்னொருத்தன் அவனை பத்தி விசாரிச்சா பெரும்பாலானவங்க அப்ராணி ரொம்ப ரொம்ப நல்லவன் குடும்பஸ்தன்னு தான் சொல்லுறாங்க. ஆனா நம்சுன்னு பழைய ஆள் ஒருத்தர் அடிச்சு சொல்றார், அவனாகட்டும் அவன் கூட இருந்த சினேகிதக்காரன் செல்வம்னு ரெண்டு பேருமே பழைய பறவைங்களாம். அப்படிப்பட்ட ஆளுங்க எப்ப எத செய்வாங்கன்னு அனுமானிக்க முடியாது. ஒருவேளை அசால்டா எடுத்துக்கிட்டோம்னா ரொம்ப தப்பா ஆயிடும். இன்னும் டீப்பா விசாரிச்சு சொல்றேன். அந்தத் தரப்பையும் சரி பண்ணத்தான் உங்களுக்கு நல்லதுன்னு தோணுது

என முடித்தார்.

“சரிங்க சார் ரொம்ப நன்றி. நான் நாளை மறுநாள் காலையில பேசுறேன் இதே நேரம்.”

என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்த கதிர் ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டான்.

 

செல்வாவைப் பற்றி வக்கீல் சொல்லச் சொல்ல வியர்த்து வந்தது கதிருக்கு. யார் எவளை எங்கே வைத்து தடவினால் எனக்கென்ன? தேவையில்லாமல் அவன் லவ்வரை பற்றி அவனிடமே நக்கலாய் பேசப் போக அதை அவன் சும்மாவா விடுவான்?. ஆளைப் பார்த்தால் சோனி போலத் தெரிந்ததும் அசால்டாக எண்ணியது எப்பேர்ப்பட்ட பிழை? பெரிய கை போல் இருக்கிறது. அன்று கதிர் அடிக்க பாய்ந்தது செல்வத்தைத் தான் நல்ல வேளை அவன் கை வைத்து இருந்தால் அந்த செல்வம் அவனைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டான் போலும். கதிரின் மண்டைக்குள் காசினோ சக்கரங்கள் பல வித எண்களை முன்னிறுத்திச் சுழலலாயின.

கதிருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது. வரதனைக் கைவிட முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் வரதனைக் காப்பாற்றவும் முடியாது என்பது இப்போது தெரிய வருகிறது. செல்வமும் வெங்கடேசனும் பெரிய கைகள் என்று வரதனிடம் சொன்னால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை மனசுக்குள் அலசியப்படி ஊஞ்சலின் சங்கிலி ஒழுங்கற்று ஆடியதால் எழுந்த கிர்றுக் கிர்றுக் எனும் சப்தத்தையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான்.

வரதனிடம் அப்படியே உண்மையைச் சொன்னால் அவனுடைய அகம்பாவம் சீண்டப்படும். கதிருக்கு ஏற்றுக் கொண்டுதான் அவன் கத்தியை எடுத்தான். எடுத்தவரை போதும் என்பதுதான் இப்போதைக்கு சரியாகப் படுகிறது. அப்படி ஒன்றும் அவர்கள் பெரிய ஆட்கள் இல்லை என்று சொன்னால் என்ன நடக்கும்?. தன்னைப் பார்த்துதான் அவர்கள் பயப்படுவார்கள் என்று எண்ணிக் கொள்ளும் வரதன் தானாக எந்த ஸ்டெப்பும் எடுக்க மாட்டான். முதலில் ஊருக்குள் திரும்பிச் செல்ல வேண்டும். வரதனை கேஸ் பார்க்கச் சொன்னால் தனக்கு ஆபத்து. பணம் காசு கேட்டால் கூட கொடுக்கலாம். கதிரிடம் பணம் நிறைய தான் இருக்கிறது. ஆனால் வரதன் எதிர்பார்ப்பது பணத்தை விடவும் பந்தாவைத் தான். அவன் உள்ளே போகாமல் இருந்தால் போதும். அவன் மூலமாக கதிருக்கு எந்த பிரச்சனையும் வராது. முரளியும் வெங்கடேசனும் குத்துப்பட்ட பிரச்சினையை முதலில் பேசி சரி செய்ய வேண்டும். வழக்கு செலவு ஸ்டேஷன் செலவு குத்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு அதுவரை ஒளிந்து இருப்பதற்கான செலவினங்கள் எல்லாம் சேர்த்து மனதுக்குள் ஒரு தொகையை நினைத்துக் கொண்டான்.

“போயிட்டு போகுது. நான் வளர்த்த ஆடு தானே? என் பசிக்கு ஆகாமல் வேறு எதற்கு?.”

பணம் மட்டும் போதாது என்பது வக்கீலின் பேச்சிலிருந்து நன்கு புரிந்தது. பணத்தை விடவும் கூடுதலாக இதில் வேறொன்று தேவைப்படுகிறது. அவனுக்கு நல்ல வக்கீல் அமைந்திருக்கிறார். அல்லது நல்லவர் போல் தோற்றம் அளிக்கிறார். நம்புவதை அய்யப்படுவதும் ஐயப்படுவதை நம்புவதும் கதிரின் கல்யாண குணங்கள். அவரே சொன்ன பிரகாரம் இப்போதைக்கு அவன் நம்பிக்கைக்கு உரிய ஒரே நபர் கௌரி.

மெல்ல எழுந்து சென்று பல் துலக்கியவன் தூரத்தில் ஜான்சனோடு மூர்த்தி பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ‘இவன் ஒருத்தன்’ என்று எண்ணியபடியே மீண்டும் தொலைபேசியை நெருங்கினான்.

முதல் ரிங்கிலேயே எடுத்த கௌரி இவன் சொன்னது முழுக்க கேட்டுக் கொண்டு விட்டு

“இதுக்கு மேல எதுவும் செய்யாமல் இரு போதும். உன்னை யாரும் ஒன்னும் செய்ய மாட்டாங்க. பாதுகாப்புன்னு நெனச்சுக்கிட்டு நீயா எதையும் புதுசா இழுத்து விடாமல் இரு போதும், நான் பார்த்துக்கிறேன். ஏற்கனவே இது விஷயமா என்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டாங்க”

என்று அவள் சொன்னதும் எல்லா பிரச்சனையும் அதோடு முடிந்து போனாற் போல் உடம்பெல்லாம் குளிர்ந்தது கதிருக்கு.

“நீ இருக்கிற இடம் சேஃப் தானே?”

என்று கேட்டவள்

“செலவுக்கு பணம் இருக்கு இல்ல?”

என்றும் கேட்டாள். சில பல வருடங்களில் அவள் குரலில் மீண்டும் ஒரு நெருக்கத்தை அன்றைக்கு தான் உணர்ந்தான் கதிர் பொதுவில் ஒருவனாக எல்லோரிலும் நீயும் ஒருவன் தான் என்று எப்போதும் அவனை ஒரே போல் பேசி நடத்தி வந்திருந்தவள் லேசாய் கலங்கி இருப்பது தெரிந்தது.

” அதெல்லாம் ஏகத்துக்கு இருக்கு”

என்றவன் அவள் போனை வைத்தது தெரியாமல்

” ரொம்ப நன்றி சாமி”

என இன்னும் அதை கையில் பிடித்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டவன் சட்டை பையில் இருந்து எடுத்து ஒரு சிகரட்டை பற்ற வைக்க தூரத்திலிருந்து வேக நடையால் அவனை நெருங்கிய மூர்த்தி அவனது முகத்தை பார்த்து என்ன மனநிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள முயற்சித்து தோற்றான். அவனது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. உடனே அந்த இடத்தில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு கால்நடையாக ஆவது நடந்து சென்று தன் வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று பரபரத்து வந்தது. இந்த பிரச்சனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை நாளுக்கு நான் இப்படி மறைஞ்சி திரிகிறது?

“என்னப்பா என்ன நிலவரம்?”

என்று ஆரம்பித்தான். அவனிடம் எதையும் சொல்லும் விருப்பம் இல்லாத கதிர்

“இன்னும் ஒன்னும் தெரியலப்பா”

என்று மட்டும் சொல்ல அந்த பதிலால் யாதொரு முன்னேற்றத்தையும் உணராத தன் பழைய குழப்பத்துக்கே திரும்பிச் சென்ற மூர்த்தி

” இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்கிறது?”

எனக் கேட்டான்

ஒரு நிமிடம் எதுவுமே பதில் பேசாமல் நடுங்கும் விரல்களால் சிகரட்டை இழுத்து விட்டு “ஆங்” என்றான் கதிர்

“உன்ன தான் பா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது?”

என கொஞ்சம் சப்தத்தை அதிகரித்து மூர்த்தி கேட்க

 ” சாவுற வரைக்கும் இனிமே இங்கதான். இப்ப என்னான்ற?”

சூடானான் கதிர்.

“யாரு சாவுற வரைக்கும்? நீ செஞ்சதுக்கு நீ சாவுடா. என்னை எதுக்கு சொல்ற? நீ கோவப்படுவ. உன் கூட்டாளி கத்தி எடுப்பான். நான் சாகனுமா?. இன்னிக்கு ஒரு நாள் உனக்கு டைம். என் கூட வந்தா வா. இல்ல உனக்கு ஊருக்கு திரும்ப நாளாகும்னா என்னை விட்டுடு. நான் கிளம்புறேன். என்ன நம்பி குடும்பம்-பிள்ள குட்டிங்க இருக்கு.”

என்றான்.

வரதன் அவனிடம் என்ன பேசினான் என்று கதிருக்கு தெரியாது. கதிர் பிரச்சனையில் தற்போது என்ன முன்னேற்றம் என்று மூர்த்திக்கு தெரியாது. இவர்கள் இருவரும் இப்போது பேசிக் கொண்டிருப்பது உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பரதனுக்கு தெரியாது. தூரத்தில் இருக்கும் ஜான்சனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு கணத்தில் மூர்த்தியின் கன்னத்தை சேர்த்து ஓங்கி அறைந்தான் கதிர்.

“பாதியில் கழட்டிவிட்டு போகப் பார்க்கிறாயா?  துரோகி உன்னை இங்கேயே கொன்னு பொதச்சிடுவேன். ஒழுங்கா பொத்திகிட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துரு. எல்லா பிரச்சனையும் முடியிற மட்டும் இங்கதான் இருக்கணும். ஏதாச்சும் எம்ஆர்மெண்டு வேலை பார்க்கலாம்னு பார்த்தேன்னு வய்யி…டேய் மூர்த்தி உனக்கு என்னைய பத்தி நல்லா தெரியும் உன்னை கொன்னு புதச்சி ஒரு தென்னங்கண்டை  நட்டுட்டு போயிட்டே இருப்பேன். ஜாக்கிரதை”

என்றான்.

அடி என்பது ஒரு உடலை இன்னொரு பாகம் தீண்டுவது மட்டுமல்ல. அதை விட பெரியது ஒரு அடி ஏற்படுத்தக்கூடிய அவமானம். மூடிய அறைக்குள் மூன்றாம் நபர் பார்க்காமல் 100 முறை அடித்தாலும் வாங்கிக் கொள்ள சம்மதிக்கும் அதே மனம் மூன்றாவது ஆள் பார்த்ததற்காக அவமானம் தாங்காமல் துடிக்கவும் செய்யும். மூர்த்திக்கு ஜான்சன் அதை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்வரை அவ்வப்போது கதிர் என்பவன் போதையில் ஒன்றும் பாதியுமாக அடிப்பான் பிறகு மறுநாள் போதை தெளிந்ததும் மன்னிப்பு கேட்பான் அதெல்லாம் அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் சந்தர்ப்பங்கள் அதைப்போலத்தான் இதையும் கடந்து போக எண்ணினான். ஆனால் ஜான்சன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்ததும் மூர்த்திக்குள் இன்னொரு மூர்த்தி விழித்துக் கொண்டான்.

“ஒம்… நான் என்ன உனக்கு அடிமையா நீ கொடுக்கிற காசுக்கு மேல உனக்காக உழைச்சதுக்கு எனக்கு துரோகி பட்டம் கட்டுறியா?. நீயும் அந்த  வரதனும் என்னெல்லாம் திட்டம் போடுறீங்கன்னு எனக்கு தெரியும்டா. அதெல்லாம் நடக்காது ராசா. நீ கட்டிப்போட்டு உன்னை காவல் காக்குறதுக்கு நான் என்ன நாயா?”

என்றவன் ரோஷம் தாங்காமல் கதிரை பதிலுக்கு தானும் ஓங்கி அறைந்தான்.

இரண்டு பேருமே முந்தைய தினத்தில் அருந்திய மதுபானத்தின் ஆதிக்கம் முற்றிலும் விலகாமல் உறக்கம் வேறு சரியாக இல்லாமல் ஒரு விதமான சீரற்ற மனநிலையில் இருந்ததுதான் அத்தனை பிசகிற்கும் காரணமாகிவிட்டது. நின்றவண்ணம்  பேசிக் கொண்டிருந்த இரண்டு பேரை காணவில்லை என்றுதான் முதலில் ஜான்சன் நினைத்தான். இருவரும் கீழே ஒருவரை ஒருவர் தள்ளி மிதித்துக் கட்டி உருண்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும் “ஐயையோ”
என்று ஓடி வந்து சண்டையை விலக்க முயற்சித்தான்.கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வரதன் இவர்களைப் பார்த்ததும் ஓட்டமாய் ஓடி நெருங்கி வந்து மூர்த்தியின் கழுத்தை வலுவாகப் பற்றி நெறிக்கத் தொடங்க அவன் பிடியிலிருந்து விலகிக் கொண்ட கதிர்

“விடுப்பா கொன்னுராத. இந்த நாயி ரொம்பத் துள்ளுது. இதைக் கட்டி வச்சிரலாம். கத்தி வெறச்சே சாவட்டும்”

என்று நடுங்கும் விரல்களால் சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

{வளரும்}