Skip to content

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20

கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும்


தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும் தீபாவளி குறித்த செலவுக்கவலை இருந்தது. அதற்கு முன்பு வரை அம்மா அவள் பொறுப்பில் தான் துணி எடுத்துத் தருவார். அவர் சொல்லும் பதுவான டெய்லரிடம் தான் தைக்கத் தந்து வாங்குவார். இந்த இரண்டும் இப்படியே தொடர்ந்தால் அப்புறம் என் கையில் பணப்புழக்கம் எப்படி மிகுந்து வரும்.? “நானே துணி எடுத்து தைச்சிக்கிறேன்” என்று இரண்டையும் என் வசமாக்கிக் கொண்டேன். கம்மியான விலையில் எடுத்த துணியைக் கம்மியான தையற்கூலி தந்து பேண்ட் சட்டை தைத்துக் கொண்டேன். அம்மாவிடம் மிகையாய்ச் சொன்ன தொகையை வைத்துக் கொண்டு சிக்கனமாக எப்படி தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவது என்று பலவித திட்டங்களைத் தீட்டினேன். பாட்டி தன் பங்குக்குத் தந்த “தீவாளி காஸ்” வேறு வந்து சேரவே துண்டு விழாத பட்ஜெட்டாக மாறிப் போனது. வெடி வேண்டாம் என்று சொல்லி அதற்குப் பதிலான தொகையை வேறு வாங்கிக் கொண்டதில் கை நிறையக் காசு இருக்கவே பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே எப்ப வருவே என்று கண் பூத்துக் கிடந்தேன்.

தீபாவளி என்றாலே புதுப்படம் பார்ப்பது தான் கொண்டாட்டத்தின் முக்கியாம்சம். படம் பார்க்காம தீபாவளியா..? துணிமணி வெடி பலகாரம் என எதைப் பற்றிக் கேட்டாலும் “காவாலிக்கு ஏதுய்யா தீவாளி”  என்று ரைமிங்காகப் பேசுவான் நண்பன் கோபி.  அவன் கூடப் புதுப்படம் என்றால் பல்லைக் காட்டிக் கொண்டு “நானும் வரேன்யா” என்று ரெடியாவான். பண்டிகை என்றாலே புதுப்படம் தான் லட்சியம்.

இன்றைக்கு மாதிரியா அப்போது நிலைமை? ஒட்டுமொத்த மதுரை மாநகரத்தில் அதிகபட்சம் இரண்டு தியேட்டர்களில் தான் ஒரு படம் வெளியாகும். சுமாராக இருந்தால் 50 நாட்கள் நல்ல படம் 100 நாள் 25 வாரம் என்றெல்லாம் ஓடினால் தான் மரியாதை. ரஜினி படமான தளபதி தீபாவளிக்கு என்னுடைய லிஸ்டில் முதலாவதாக இருந்தது. ரசிகர் மன்றத்தில் சொல்லி டோக்கனை வாங்கிவிட்டு தீபாவளி அன்று விடிந்தும் விடியாமலும் சம்பிரதாயத்துக்கு எண்ணை வைத்துக் குளித்து முழுகி வெள்ளையப்பம் இட்லி வகையறாக்களை உள்ளே தள்ளிவிட்டு பேருக்கு ஒரே ஒரு கம்பி மத்தாப்பு அதையும் சுட்டு விட்டுக் கிளம்பி ஓடி ஒரு வழியாக பஸ்ஸை பிடித்து 10 கிலோமீட்டர் தள்ளி போய் அம்பிகை தியேட்டரில் தளபதி படத்தை பார்த்தேன் ரசித்தேன். என்னோடு கூட வந்திருந்த ஏரியாவாசியும் வகுப்புத் தோழனுமான மார்லன் பிராண்டோ ” எல்லாரும் கத்திகிட்டே இருந்தாங்க. ஒரு வசனமும் கேட்கல” என்று அங்கலாய்த்தான். படம் நடக்கும் போது கத்தி கத்தி தொண்டை கட்டிய குரலில் தான் இதைச் சொன்னான்.

ஜினி ரசிகர்களுக்கு கமல் படம் ஆகாது. இருந்தாலும் பரவாயில்லை வந்தது வந்துட்டோம் ஒரே காம்ப்ளக்ஸ்ஸில் அபிராமி தியேட்டரில் குணா படம் நடந்து கொண்டிருந்தது. மதியம் தியேட்டர் வாசலுக்கு எதிரே திறந்து இருந்த ஒரு ஓட்டலில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு அப்படியே மறுபடி நுழைந்து குணா பார்த்தோம். அடுத்து வந்த இரண்டு நாட்கள் சொஸ்தமாக தளபதி படத்தின் வில்லன் குணா பட நாயகியோடு டூயட் பாடுகிறாற் போல் பகல் கனவு வந்தது.

ஒரு வழியாக அடுத்த நாள் பள்ளிக்கூடம் திறந்து எல்லோரும் வகுப்புகளுக்கு திரும்பிய பிறகு “ஹை ஜாலி இனிமே தினம் ஒரு படத்துக்கு ஈஸியா டிக்கெட் கிடைக்கும்” என்று முடிவு எடுத்து நானும் அதே மார்லனும் சத்யராஜின் பிரம்மா பிரபுவின் தாலாட்டு கேக்குதம்மா விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என சகட்டு மேனிக்கு படங்களை பார்த்து தள்ளினோம்.

எல்லா  நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் மதுரையில் இருந்தன. பூபதி என்று ஒரு நண்பன், மதுரையில் அவனுக்கு தெரியாத சந்து பொந்தே கிடையாது. கமல் ரசிகனான பூபதி எங்களோடு படத்துக்கு வரும்போது “நீ கமலை குறை சொல்லாதே, நான் ரஜினியைக் குறை சொல்ல மாட்டேன்” என்று ஒப்பந்தம் போட்டு விட்டு தான் வருவான் ஆனாலும் அவனுக்கும் மார்லனுக்கும் எப்படியாவது சண்டை மூண்டே தீரும். தளபதி படம் வெற்றி பெற்ற மகிழ்வில் “தீபாவளிக்கு வர்ற படத்தை பாரு” என்று சீரியசான கதை அம்சம் கொண்ட குணா படத்தை மார்லன் கிண்டல் செய்ய அடுத்த வருடத்தின் சுதந்திர தினம் வரை இரண்டு பேரும் பேசாமல் இருந்தார்கள். மறுபடி ஒரு வழியாக சமாதானமாகி அடுத்த வருடத்தின் தீபாவளிக்கு படம் பார்க்க ரெடியானோம்.

இன்றைக்கு ஊரில் உள்ள பெரும் பாதி தியேட்டர்களில் ஒரே படம் வருகிறது. வீட்டில் இருந்தபடியே செல்பேசியில் அல்லது இணையத்தில் நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்து விட முடிகிறது. நேராக தியேட்டருக்கு போனால் உள்ளே சென்று அமர்ந்து படத்தை எளிதாக பார்க்கிறார்கள். இத்தகைய சுதந்திரத்தை இப்போதைய ரசிகர்கள் அனுபவிப்பதற்கு முந்தையதல்லவா எங்களுடைய பதின் வயதுக் காலம்? ரசிகர் மன்ற ஷோ டோக்கன் கிடைத்தால் பெரிய வரப்பிரசாதம். அத்தகைய டோக்கன்கள் விலை அதிகம் இருக்கும் முதல் இரண்டு காட்சிகள் முடிவடைந்த பிறகு தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் வழங்க தொடங்குவார்கள் டிக்கெட் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்கிற உத்தரவாதம் எல்லாம் கிடையாது. மதுரையில் ஒரு சில தியேட்டர்களில் சைக்கிள் டோக்கன் எடுத்து விட்டால் ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகள் நிச்சயம் கிடைக்கும். எட்டு பேர் செல்வதாக இருந்தால் நான்கு சைக்கிள்கள் கொண்டு செல்ல வேண்டும் குறைந்தபட்சம் நான்கு சைக்கிள் டோக்கன் ஆவது எடுக்க வேண்டும் அப்போது தான் டிக்கெட் கிடைக்கும். பலமுறை கவுண்டரில் காத்துக் கிடந்து விட்டு நமக்கு முன்னால் இரண்டு மூன்று பேர் இருக்கும்போது டிக்கெட் தீர்ந்து போகும். கண்ணெல்லாம் கலங்கி என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வந்தால் கள்ளச் சந்தையில் மூன்று ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை பன்னிரண்டு ரூபாய் ஏன் 20 ரூபாய்க்கு எல்லாம் விற்பனை செய்வார்கள். அப்படியும் ஒரு சில படங்களை பார்த்திருக்கிறோம். தீபாவளி நேரத்தில் கள்ளச் சந்தையில் கூட டிக்கெட் கிடைக்காது அத்தனை அடிதடி நடக்கும் மதுரையின் பழைய அரங்கங்களில் ஒன்றான மீனாட்சியில் கமலஹாசனின் தேவர் மகன் அங்கேயிருந்து கூப்பிடு தூரத்தில் அமிர்தம் அரங்கில் ரஜினியின் பாண்டியன் இரண்டும் வெளியாகின. ஒரு வயது கூடியிருந்தது. அந்த தீபாவளிக்கும் முந்தியதைப் போலவே கிளம்பிச் சென்றோம் அதே மார்லன், பூபதி, மற்றும் நான்.

இந்த முறை முதலில் தேவர் மகன் பார்த்துவிட்டு பிறகு பாண்டியன் பார்ப்பதாக திட்டம் அப்படித்தான் டிக்கெட் கிடைத்திருந்தது. தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டு மார்லனே வாய் விட்டுச் சொன்னான். படம் ரொம்ப நல்லா இருக்குல்ல? அடுத்து பாண்டியன் படத்துக்கு சென்றோம். அந்த படம் மசாலா அம்சங்களோடு பொழுதுபோக்காக எடுக்கப்பட்டிருந்தது. முதன்முறையாக படம் முடிந்து வெளியே வரும் போது பூபதியின் தோளைத் தட்டி மார்லன் சொன்னான்.” போன வருஷம் எங்களோட தீபாவளி, இந்த வருஷம் உங்களது” என்றதும் தன் பழைய காயங்களின் மீது புதிய காற்று வருடியதை போல் புன்னகை சிந்தினான் பூபதி.

93 ஆம் வருடத்தின் தீபாவளி ரஜினி கமல் இருவரின் படங்களும் வெளிவரவில்லை. பரணி மற்றும் நான் இருவரும் சைக்கிளிலேயே 15 கிலோ மீட்டர் பயணித்து சுந்தரம் தியேட்டரில் திருடா திருடா படத்துக்கு சென்றோம். ஏ ஆர் ரகுமான் இசையும் டெக்னிக்கல் அம்சங்களும் கவர்ந்தாலும் படம் ஒரு அளவுக்கு தான் கவர்ந்தது. அடுத்த நாள் அம்மா காபித்தூள் வாங்கி வரச் சொன்னார் என கிளம்பி சிம்மக்கல் வந்தவன் எதுக்கும் போய் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என சுகப்பிரியா தியேட்டருக்கு போய் திறந்திருந்த கவுண்டரில் நடந்தே சென்று டிக்கெட் இருக்கா என்று கேட்டேன் எத்தனை என்றவர் நான் ஒன்று என்றதும்
“ஒரே ஒரு டிக்கெட் இருக்கு இதுவரைக்கும் நான்கு பேர் வந்து ரெண்டு டிக்கட் மூணு டிக்கட்னு கேட்டுட்ட்டிருந்தாங்க. உனக்குத் தான்யா யோகம்”
என்று சிரித்தபடி தந்தனுப்பினார். ஹவுஸ்புல் அரங்கத்தில் எனக்கு வழங்கப்பட்ட டிக்கட் வரிசையைப் பார்த்தால் சி என்று இருந்தது. வரிசையின் முதல் சீட்டு. அதுவும் மேலேயிருந்து மூன்றாவது வரிசை. என்ன நடக்கிறதென நம்ப முடியாதவனாக உள்ளே சென்று சீட்டில் அமர்ந்ததும் படம் ஓடத் தொடங்குகிறது. அப்படிப் பார்த்த படம் தான் கிழக்குச் சீமையிலே. அந்தத் தியேட்டரில் அந்தப் படம் 250 நாட்களுக்கு மேலே ஓடியது. நூற்றுக்கும் மேற்பட்ட ஹவுஸ்புல் தினங்கள் என்பது தான் சரித்திரம். அடுத்த தீபாவளி வரைக்கும் அதிசய அதிர்ஷ்டத்தில் எனக்குக் கிடைத்த கிழக்குச்சீமையிலே டிக்கட்டைப் பற்றி யாரிடம் சொன்னாலும் அவர்கள் நம்பவே இல்லை.

அதற்கடுத்த வருடம் கல்லூரியில் சேர்ந்த பிற்பாடு முதல் தீபாவளி. வகுப்புத் தோழர்கள் பெரும்பாலானவர்கள் ஒட்டுமொத்தமாய்க் கிளம்பி கமல் நடித்த நம்மவர் படத்துக்குச் சென்றனர். அந்த தீபாவளி அன்று என்னவோ வீட்டோடு இருந்துவிட்டேன். எந்தப் படத்துக்கும் செல்லத் தோன்றவில்லை. அதற்கு மறுநாள் பரணி பெங்களூரிலிருந்து கிளம்பி வந்தவன் “வாடா படத்துக்குப் போகலாம்” என்று அழைத்துச் சென்றான். என்ன படம் என்று கூடக் கேளாமல் போய்ப் பார்த்த படம் தான் நாட்டாமை. அந்த தீபாவளியின் நம்பர் ஒன் படமாக மாறியது.

புதுத் துணி மின்னி மினுங்க தீபாவளியன்றைக்குப் படத்துக்குச் சென்று திரும்பாவிட்டால் பண்டிகை என்ற உணர்வே நிறைந்து வராது. குடி போதையில் சிலபலர் தகறாறு செய்வது நடக்கும். ஆர்வமிகுதியில் சிலர் டிக்கட் கவுண்ட்டரில் க்யூவில் நிற்கும் போது தொடங்கி படத்தின் முக்கியப் பாடல் காட்சி அல்லது பரபரப்பு சண்டைக்காட்சி இடைவேளை சீன் என முக்கிய கட்டங்களில் மறைத்துக் கொண்டு வந்த வெடியைக் கொளுத்தி மேலே எறிவார்கள். இருட்டில் யாரென்று கண்டுபிடிக்காத வரை தான் அது தீபாவளியாக இருக்கும். ஒரு முறை பிடிபட்ட நாலு பேரை தீபாவளி அன்றைக்கே பொங்கல் வைத்து நையப் புடைத்து அனுப்பி வைத்தார்கள்.

இப்போது போலல்ல அன்றைய அன்பான காலம். தீபாவளி பட்சணங்களை ஒரு பெரிய கேரிபையில் போட்டு எடுத்து வந்திருந்தான் பரணி. சோலமலை தியேட்டரில் முத்து படம் பார்க்கும் பொழுது எப்போதெல்லாம் பாடல் அல்லது சண்டை வருகிறதோ அப்போதெல்லாம் கருக்கு மொறுக்கு என பலகாரங்களை எடுத்துத் தின்றவண்ணமே படத்தில் லயித்தோம். எங்களுக்கு அருகே அமர்ந்திருந்தவர்களுக்கும் இந்தாங்க சும்மா சாப்பிடுங்க என்று அள்ளிக் கொடுத்த வள்ளலானான் பரணிப்பயல். அப்புறம் யார் ஆட்சேபிப்பார்கள்..?

அதற்கடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு அலெக்சாண்டர் போகலாம் என்று அனத்தினான் கோபி. அவ்வை சண்முகி தான் என்றான் பரணி. கோகுலத்தில் சீதை பார்க்கலாம் என்றான் மனோ. மூன்று படப் பேரையும் சீட்டெழுதிக் குலுக்கிப் போட்டு எடுத்ததில் அவ்வை சண்முகியே வென்றது. இண்டர்வல்லில் கோபி என்னிடம் கிசுகிசுத்தான். “எல்லா சீட்லயும் அவ்வை சண்முகின்னு தான்யா எழுதிட்டிருப்பான். கிளியும் அவனுது. சீட்டும் அவனுது. பரணிப்பய சரியான கமல்வெறியன்” என்றான். எனக்கும் அப்படித் தான் தோன்றியது. ஆனாலும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.

பதின்மத்தின் வழியாக வாழ்க்கைக்குள் செல்வது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான காலகட்டம் தான். அப்படித் தான் எனக்கும் நிகழ்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மெல்ல மெல்ல தீபாவளித் திருநாள் என்பது வீட்டு உறவுகளோடு கொண்டாடி மகிழக் கூடிய ஒன்றாக மாறிப்போனது.

இன்றைக்கும் 90களின் முற்பகுதி ஐந்து தீபாவளி தினங்களில் வெளியான படங்களும் அவற்றின் பாடல்கள் அல்லது நகைச்சுவைக் காட்சிகளைக் காண நேர்ந்கையில் எல்லாமும் அதே  அந்த வசந்தகால ஞாபகங்களாகவே மனசெல்லாம் ததும்புகிறது.

அயர்லாந்தில் இருந்து வாட்சப்பில் மெசேஜ் செய்திருக்கிறான் பரணி. மச்சான் இந்த வருசம் தீபாவளிக்கு மதுரை வர்றேன். என்ன படம் பார்க்கலாம்னு சொல்லு சீட்டெழுதிப் போட்றலாம்.

கோபியின் குரலில் நான் முனகிக் கொண்டேன். “வேணாம்யா…கிளியும் உன்னுது. சீட்டும் உன்னுது.”