சமீபத்துப் ப்ரியக்காரி 20
பண்டிகை தினத்துப் புன்னகை
கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும்
ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா?
வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும்
அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?
பண்டிகை தினத்தில் புத்தாடை அணிந்து தற்படம் ஒன்றை எடுத்தனுப்பி
“இந்த ஆடையில் நான் எப்படி இருக்கிறேன்?” என்று கேட்டு இருக்கலாம்
அல்லது
“எனக்கு இந்த ஆடை எப்படி உள்ளது?” என்றும் கேட்கலாம்.
இந்த இரண்டையும் விடுத்து
“இந்தப் பண்டிகை தினம்,
இந்தப் புத்தாடை அணிந்த என் புன்னகையை
அணிந்து கொண்டிருக்கிறது பார்த்தாயா?
அது எப்படி இருக்கிறது?”
என்று கேட்கிறாய்.
புகைப்படத்தைக் காணத்தந்து கால் விரல்களால்
குருதி சொட்டக் கண் விழிகளை
பறித்தெடுத்துப் பல்லாங்குழி ஆடுகிறாய்.
அப்பியாசத் தொடக்கத்தில் ததும்புகிற
மழலையினிடத்தில்
பட்டையக் கணக்காளர் தேர்வின்
இறுதிச்சுற்றுக் கேள்வி ஒன்றைக் கேட்பது போல்
இது இரக்கமற்ற அரக்கச் செயல் இல்லையா?
நேற்றுப் பதியனிட்ட புத்தம் புதுச் செடியின்
தளிர் மேனி மீது வெந்நீர் மழையா?
இது அநீதி இல்லையா
இதற்கு மேலும்
ஒரு முழு தினத்தை
அதனுள் பொதிந்திருக்கும்
உலகளாவிய பண்டிகை மொத்தத்தை
ஒரே கேள்வி மூலம் உறிஞ்சத் துடிக்கும்
கருணையற்ற பேரழகைத் தோன்றத் தந்து
நிர்பந்திப்பாயேயானால்
நான் வேறு என் செய்வேன் தேவி?
தெண்டனிட்டுச் சொல்ல
ஓர் பதில்தான் உண்டு
இந்தப் பண்டிகை தினம் அணிந்திருக்கும்
உன் புத்தாடைப் புன்னகை
என்பது
இந்த உலகம்
இதுவரை
சந்தித்ததிலே
ஆகச்சிறந்ததொரு
கொலைவழி.
எதை விடச்
சிறந்ததென்று சொல்வதானால் ,
ஈரேழுலோகம் கண்டதிலேயே
மிகச் சிறப்பான
வித்வமிக்க விரல்கள்
வாழ்காலமெல்லாம்
வாசித்து வந்த
வீணையின் நடுநரம்பில்
விஷம் தடவிக்
கழுத்தை அறுப்பதை விடவும்
சிறந்ததொரு
கொலைவழி
உன்
இன்றைய
பண்டிகை தினத்துப்
புன்னகை தான்.
