Skip to content

யாக்கை 29

யாக்கை 29

எத்தனை வழிகள்


 

மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம் என்று சொல்ல முடியாத ஒரு விதமான ஆழ்ந்த அமைதிக்குச் சென்று சேர்ந்திருந்தபோது, திடீரென்று தனக்குப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டதை அசுவாரசியமாகத்தான் கவனித்தான் மூர்த்தி. கண்களைத் திறக்கவே இல்லை. எப்போதோ கோடிட்ட கண்ணீர், லேசாக உப்புப் பரிந்து எதிர் வெயில் முகத்தில் பட, மினுங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் வந்து நின்ற ஜான்ஸனுக்கு ஐயோ என்று ஆனது.

“அண்ணே… மூர்த்தி அண்ணே… ஏங்க… என்னாங்க… கண்ணு முழிச்சுப் பாருங்க…”

என்றான். குழந்தையின் கன்னத்தில் உற்றவர் தட்டுகிறாற் போல் மெதுவாக அதே சமயத்தில் நிறுத்தாமல் மூர்த்தியின் கன்னத்தில் தட்டி அவனை உசுப்ப முயற்சித்தான்.

ஜான்ஸன் பார்க்காததா? அவனுக்கு உண்மையிலேயே இந்த அனுபவம் புதியதல்ல. அவன் யாருக்கு வேலை பார்க்கிறானோ, அந்த கணேசன் அவனும் கதிர் வகையறாவைப்  போலவே கொடியவன்தான். லேவாதேவி, நிலப் பிரச்சினை என நானாவிதக் காரணங்களுக்காக, அவ்வப்போது யாரையாவது கட்டிக் கொண்டுவந்து, எதாவது ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, அடித்து நொறுக்குவதெல்லாம் உண்டு. பெரும்பாலும் அத்தகைய காட்சிகளை, புரியாமொழித் திரைப்படத்தில் மனம் லயிக்காமல் வேறு புறம் பார்ப்பதுபோல், கண்டும் காணாதது போல் போய்விடுவான் ஜான்ஸன். இரவெல்லாம் ஊளை அழுகை, வலி தாங்காத கதறல், விட்டுவிடச் சொல்லி மன்றாட்டு, எல்லாவற்றையும், எளிதாக எனச் சொல்லமுடியாவிட்டாலும், மென்று அழுத்தியபடி, கடந்துபோவான். ஆனால் இப்போது நடப்பது அப்படி அல்ல.

கணேசனின் விருந்தாளி என்று வந்தவர்களில் ஒருவருக்கொருவர் பேச்சு முற்றித் தகராறாகி, மூர்த்தியை மட்டும் மரத்தில் கட்டி வைத்ததை ஜான்ஸனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கணேசன் இருந்தாலாவது முறையிடலாம். அவனையும் ஆளைக் காணோம். அவர்கள் வந்ததிலிருந்து மற்ற யாரை விடவும், மூர்த்திதான் ஜான்ஸனிடத்தில் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

“வாயத் தொறந்து கேட்டா மட்டும் கட்டவுத்து விடு ”

என்று கதிர் கட்டளை இட்டதை மதிக்காமல் முன்பே வந்து அவிழ்த்து விட்டிருக்க வேண்டும். இப்போது என்னடாவென்றால் ஆள் பேச்சு மூச்சைக் காணோம்.

ஒருவேளை மூர்த்தி செத்துவிட்டானோ என்ற அச்சம் அவனை நடுக்குறச் செய்தது. நெஞ்சில் காதை வைத்துப் பார்க்க முயற்சித்தான். கையைப் பற்றி நாடி பார்த்தான். ஜான்ஸன் கடுமையான் உழைப்பாளி. நாலு பேரல்ல பத்துப் பேர் வந்தாலும் உபசரிக்கச் சளைக்க மாட்டான். அது வேறு விஷயம். இந்தச் சூழல் அவனை அச்சுறுத்தியது. கண்ணத் தெறந்து பாருங்கண்ணே மூர்த்தியண்ணே என்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டே உசுப்பியவன், செம்பிலிருந்து கையில் தண்ணீரைச் சாய்த்து, மூர்த்தியின் முகத்தில் அடித்தான்.

ஆட்டம் போதும் என்பவனாக, அப்போதுதான் விழித்துக்கொள்வதைப் போல் கண்களைத் திறந்தான் மூர்த்தி. போன உயிர் திரும்பி வந்த ஜான்ஸன், பெருமூச்செறிந்து,

“யப்பா… சாமி… கர்த்தருக்கு நன்றி,”

என்று நிம்மதியானான்.

“வாங்கண்ணே, உங்களைக் கூட்டி வரச் சொன்னாங்க,”

என்று மட்டும் சொன்னான்.

“இத்தன நேரம் என்னயக் கழுவுல ஏத்திட்டு, இப்ப கர்த்தருக்கு நன்றி சொல்றீங்க?”

சிரித்த மூர்த்தி, தன்னைத் தோளோடு தாங்கிக்கொண்ட ஜான்ஸனை, நன்றி கசியப் பார்த்துவிட்டு, அவனைக் கேட்காமலேயே செம்பில் பாக்கி இருந்த தண்ணீரைப் பிடுங்கிக் குடித்தான். எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. ஒரே நேரத்தில் அந்தத் தோட்டத்தில் பட்டியில் இருந்த  ஏழெட்டு நாய்கள் விடாமல் குரைக்கத் தொடங்கின. தன்னைத் தனியாக விட்டால் நடக்க முடியுமா என்பது மூர்த்திக்கே சந்தேகமாகத்தான் இருந்தது. உடலும் மனமும் ஒரே நேரத்தில் தளர்ந்து போக நேர்கையில், உருவமில்லாத மனம் எனும் பண்டம் மிகவும் வலி மிகுந்ததாக மாறிவிடுகிறது.

மூர்த்தி சற்று முன்பு மரத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டுக் கிடந்தபோது, ‘என் கட்டை அவிழ்த்து விடுடா… உன் குரல்வளையைக் கடிக்கிறேன்,’ என்றெல்லாம் தனக்குள் சூளுரைத்துக்கொண்டு கிடந்தான். இப்போது நடக்கவே மனசு ஒத்துழைக்க மறுக்கிறது.

“என்னைய விடுங்கடா, நான் பெஞ்சாதி பிள்ளை குட்டியைப் பார்க்கப் போணும்”

என்பது தான் மறுபடியும் அவனது மன விருப்பமாக மாறியிருந்தது. பழியெடுப்பதெல்லாம் வீண் வேலை என்று புதிய மனக்குரல் அறிவுறுத்தியது. தப்பித்தலும் பிழைத்தலும் ஒன்றாகிப் போனதில் பழைய மனசு மழுமட்டையாகிவிடுகிறது. மூர்த்தி தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு சரணடையத் தயாரான நோயுற்ற போராளி போலத் தளர்ந்திருந்தான்.

மூர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுமே தவிர, எதைச் செய்யக்கூடாது என்பதில் ஒருபோதும் ஐயப்பட்டதில்லை. எதன் மீது ஊர்கிறதோ அந்த நிறத்தைத் தானும் வாங்கிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல, பழைய நிமிடத்திலிருந்து விடுபட்டு, புதியதில் புகுந்துகொள்ளத் தேர்ந்தவன் அவன். முந்தைய ரணமும் நிணமும் மரத்துப் போனவனாய், ஆன மட்டிலும் இயல்பாக எட்டு வைத்து நடக்க முயற்சித்தான். கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி துள்ளித் திரிவது விடுதலையின் ஆனந்த உத்வேகம். மூர்த்தியின் மனம் சட்டுச்சட்டென்று சினிமா தியேட்டரில் மாறும் ஸ்லைடுகளைப் போல மாறப் பழக்கப்பட்டிருந்தது

வேட்டை என்பது பந்தயமல்ல. மானின் கால்கள் புலிக்கு வாய்க்கும்போதெல்லாம், மான் புலிக்கு இரையாகிறது. தனக்குப் புலியின் பற்கள் வாய்க்கப்போவதாகவே ஒவ்வொரு மானும் யூகம் பண்ணிக்கொண்டு, சற்றைக்கெல்லாம் பலியாகிவிடுகிறது. மனிதனின் வீராவேசம் அத்தகைய கனவுப் பலிதான், பெரும்பாலான சமயங்களில். ஒன்றிரண்டு தப்பிப் பிழைத்துத் தாக்குப் பிடிக்கவும் கூடும். தோற்ற புலிக்குப் பரிசு பட்டினிச் சாவு.

பிரம்புக் கூடையில் உட்கார்ந்திருந்த வரதன் இன்னமும் விரோதமாய் முறைத்துப் பார்த்தான். அவனைக் கண்கொண்டு நோக்குவதைத் தவிர்த்த மூர்த்தி காலியாக இருந்த ப்ளாஸ்டிக் சேரில் சரிந்தமர்ந்தான். கதிர் தன்னுடைய நாற்காலியை மூர்த்திக்கு அருகே நறநறவென்று இழுத்துக் கொணர்ந்தான். கதிரின் முகத்தில் அப்பட்டமான சந்தோஷம் வழிந்துகொண்டிருந்தது. எதுவுமே நடக்காததைப் போல, மூர்த்தியின் சட்டைக் கசங்கலை எல்லாம் தன் கையால் சரி செய்தபடி

“எலேய் மூர்த்தி, ஒங்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும். முதல் விசயம், மண்டபத்துப் பஞ்சாயத்தை பேசி முடிச்சாச்சு. எல்லாத் தரப்புமே கலகமில்லாம சமரசமாப் போயிர்றதா செட்டில் பண்ணியாச்சு. வக்கீலு டீ.எஸ்பி தவிர முக்கியமான பேச்சைப் பேசுனது யாருன்ற? எம் பொஞ்சாதி கௌரி,”

என்று மூர்த்தியின் முகத்தில் என்ன தென்படுகிறது எனப் பார்த்தான்.

வாழ்வில் இனி ஒருமுறை கூடப் பார்க்கவே கூடாது என்று சற்று முன் வரை மூர்த்தி கறுவிக்கொண்டிருந்த கதிரின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கினான். ஒரு சொல்லைக்கூடப் பேசக்கூடாது என்று எண்ணியிருந்தான். ஆனாலும் அவன் மனத்துக்குள் வேறொரு பட்டாம்பூச்சி இடம் மாறி அமர்ந்தாற்போல், “ஆங்… ஆங்… சொல்லு,” என்றான்.

இன்னும் உற்சாகமான கதிர் வலுத்த குரலில் தனக்குத் தெரியவந்ததை இன்னும் பலமாக தனக்கேற்ப பூசித் தயாரித்தவாறு கொஞ்சம் அதிகபட்சமாகவே மகிழ்ச்சியைத் தெளித்தபடி சொல்லி முடித்தான். இந்த இடத்துக்கு வந்ததில் இருந்து கதிரின் முகமெல்லாம் வெளுத்து  அச்சத்தில் கண்கள் இருண்டு கிடந்ததெல்லாம் சொடுக்குப் போட்டாற் போல் மாறி இருந்தது. வேறு எதுவுமே நடக்காதது போல் மூர்த்தியின் கன்னத்தைப் பற்றிக் கொஞ்சினான்.

“சந்தோசமாயிட்டேன் நண்பா”

எனறு மலர்ந்து சிரித்தான். காம்பவுண்டு கதவுக்குப் பின்னால் நீண்ட ஹார்ன் ஒலி கேட்டது. ஜான்ஸன் கதவைத் திறக்க, தூரத்தில் கரிய நிற ஜீப் வந்து நிற்பதும், அதுவரை இருந்த இடம் தெரியாமல் இருந்த அத்தனை நாய்களும் – ஏழெட்டாவது இருக்கும் – ஒன்றையொன்று முண்டிக்கொண்டு, இடதுபுறக் கதவைத் திறந்து கணேசன் இறங்கும்போது அவன் காலை மொய்த்துக்கொண்டிருந்தன. கையை உயர்த்தி கணேசன் கைகாட்ட, தானும் பதிலுக்குக் கையசைத்துவிட்டு, மீண்டும் மூர்த்தியின் முகத்தை நோக்கிய கதிர், வரதன் எழுந்து தோட்டத்தின் பின்புறக் குதிரை லாயத்தை நோக்கி நடப்பதைப் பார்த்தவாறு

“டேய் நண்பா…கௌரி எங்கிட்ட ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டுப் பேசுனாப்லடா. கோயில் பெருசா டெவலப் ஆகுற சந்தர்ப்பம் இது. இனி இந்த சீஸிங் பொழப்பெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாடா. பார்க்கிங், லாட்ஜ், கடைகண்ணி, கேன்டீன், அப்படி இப்படின்னு ஏகப்பட்ட விஷயம் சொல்றாடா. கஸ்டப்பட்டு மலையேறுனப்பல்லாம் கூட இருந்திருக்க. இப்ப ஒரு மேட்டுல ஏறிட்டம்னு தோணுதுடா..நல்லது நடக்கும்போது நீயும் கூட இருடா. எதோ கோவத்ல செஞ்சிட்டன்..எதையும் மனசுல வச்சுக்காத,”

என்றவனது குரல் தாழ்ந்திருந்தது.

வரதன் இப்போதும் கடுகடுத்த முகத்தோடு திரும்ப வந்து மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தான். மூர்த்திக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. ஆனாலும், தன்னிச்சையாக, “நான் எங்க போகப்போறேன்?” என்று பதில் சொன்னான்.

 “நீ போய்க் குளிச்சிட்டு வா ஊரப் பார்த்துக் கெளம்பலாம்,”

என்று மட்டும் சொன்னான் கதிர். ஜான்ஸனின் மனைவி விதவிதமான பாத்திரங்களை டைனிங் டேபிளில் வைத்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசாத மூர்த்தி, உள்ளறைக்குச் சென்றான்.பீரோவுக்கருகே டீப்பாயில் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து அப்படியே தன் தொண்டையில் களக்குக் களக்கென்று கவிழ்த்துக் கொண்டான். உள்ளும் புறமும் எரியத் தொடங்கியது. தட்டில் இருந்த  வறுத்த மிளகாய்கள் நாலைந்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். சற்றைக்கெல்லாம் இன்னும் எரிந்தது வாஷ் பேசினை அணுகி தூ தூ தூ எனத் துப்பினான். எதிரே இருந்த கண்ணாடியில் இருந்த இன்னொரு மூர்த்தியைப் பார்த்ததும் கடுங்கோபமும் பச்சாதாபமும் ஒருங்கே எழுந்தது.

உடைகளைக் கழற்றி விட்டு குளியலறைக்குச் சென்று, ஹீட்டர் ஸ்விட்சைப் போட்டு ஷவருக்கு அடியில் நின்றான். மீண்டும் அவனுக்கு அழுகை வந்தது.

‘சுய இரக்கப் பிண்டமே! இதை விட ஈனப் பிழைப்பு இருந்தாலும் நீ ஏற்பாய். உன் ஜாதகம் அப்படி. நீ ஜனித்த நேரம். வேண்டாப் பிறவி. நாய் ஜென்மம். அட்சரம் பிசகாமல் அச்சில் வார்த்தெடுத்த அடிமை. தேநீருக்குப் பதிலாக மூத்திரத்தைக் கொடுத்தாலும் ‘இன்னும் கொஞ்சம் கொடு,’ என்று கேட்டுப் பருகுகிற இழிபிறவி. ஓடுகிற ரயில், கொட்டும் அருவி, மொட்டை மாடி, ஒருமுழக் கயிறு, யானையின் கோபம், துளி விஷம், எத்தனை வழிகள்? நாக்கைப் பிடுங்கிக்கொண்டு, தூக்கில் தொங்கேன்,’

என்றெல்லாம் அவன் மனம் உள்ளே அரற்றிக்கொண்டிருந்தது.

ஷவரை நிறுத்திவிட்டு, குழாயைத் திறந்துவிட்டு, அதன் சத்தத்தோடு சன்னமான குரலில் அழுதான். ஏன் அழுகிறான் என்று காரணம் புலப்படவில்லை. அழுவதற்கு ஆயிரம் காரணங்கள். அவனுக்கு கதிரை, வரதனை, ஜான்ஸனை, அவன் பெண்ஜாதியை, அங்கே பட்டியிலிருந்த ஆடு, மாடு, கோழி, ஏழெட்டு நாய்கள் என எல்லோரையும் கழுத்தறுத்துப் போடவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. இப்போது புதிதாக வந்திருக்கும் கணேசனையும் சேர்த்துக் கொன்றால் தகும் என்றுதான் தோன்றியது. முந்தைய அசிங்கத்தை விட, பின்வந்த சமரசம் அபத்தமாய் அவனை அழுத்திக்கொண்டிருந்தது. ஒரு சிறந்த தருணத்தைத் தவறவிட்டவன், பின்வரும் கணம் அத்தனையிலும் சாவை எண்ணி ஏங்குவதுபோல் வினோதமான வெம்மையும் கூச்சமும் அவனைத் தளர்த்திக்கொண்டிருந்தது. நெருப்பை ஏந்திக்கொண்டிருக்கும் திரிநுனி, காற்றைத் தாங்கமுடியாமல் போவதுபோல், கொட்டுகிற தண்ணீரில் தன் கண்ணீரை ஒளித்து வைத்துக்கொண்டிருந்தான். முதலில் வீடு திரும்பி ஒரு தூக்கத்தைப் போட்டு எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஒரு கணம் வாழ்வாசை அவனுக்குள் வந்து போனது. தன் உடல் மீது தானே துப்பிக்கொண்டான்.

‘எச்சக்கல நாயே… சேரும் சகதியும் சாணியும் மூத்திரமுமா கெடந்தியே… ஆஸிடை ஊத்துனாலும் அதெல்லாம் போகுமா?’

யாரோ மனசுக்குள் கெக்கலிப்பது கேட்டது. மூர்த்தியின் தலைவரை போதை ஏறிக்கொண்டிருந்தது.

ஷவரில் தண்ணீர் பூக்களாய்ச் சிதறியது. மூர்த்திக்கு உடனே யாருடனாவது  சம்போகம் செய்தால் மனம் தேர்ச்சியடையும் என்று பட்டது. நிசத்தில் யாரையும் அழைக்க முடியாதென்றாலும் நினைப்பில் யார் கையைப் பற்றியும் இழுக்கலாம் அல்லவா..?

ஜான்ஸனின் மனைவியைக் கட்டி அணைத்தான். அவன் உடலெல்லாம் அவள் முத்தினாள். அவன் அவள் முதுகில் தன் கூரிய நகங்களால் கீறினான். அவள் நிறுத்தாதே இன்னும் இன்னும் என்றாள். மூர்த்தி தற்போதிருக்கும் கோழை மூர்த்தியல்ல. வறியவனல்ல. அடுத்தவனிடம் கை கட்டி சேவகம் பண்ணுகிற மூர்த்திவேறு. இவன் வேறொரு மூர்த்தி. பலமான மூர்த்தி செல்வாக்கான மூர்த்தி ஊரே வணங்கும் மூர்த்தி. ராஜராஜ சக்கரவர்த்தி மூர்த்தி. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மூர்த்தி அல்லவா அவன்..? அவன் கடைக்கண் பார்வைக்கு யார் தான் ஏங்காமல் இருப்பார்கள்..? சட்டென்று ஜான்சனின் மனைவி போய் கௌரி அவன் அணைப்புக்குள் வந்தாள். பிறகு ஏலச்சீட்டு நடத்தும் புண்ணியகோடியின் மனைவி மஞ்சுளா. வேறு யாரையெல்லாம் புணரலாம் என்று நிழல் மூர்த்தி நிஜ மூர்த்தியிடம் ஆலோசனை கேட்டான். “எல்லாரையுமே” “நீங்கள் அனுபவிக்கத் தானே பேரரசே இந்த உலகம்..?வேறெதற்கு?” என்று கைகட்டி பதில் சொன்னான்.

மூர்த்திக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது. இந்த நிமிடம் வாழ்க்கையின் அத்தனை முட்களையும் யாரோ பிடுங்கிப் போட்டு ரணங்களின் மீதெல்லாம் ஐஸ்கட்டி கொண்டு வருடுகிறார்கள். வரதன் யார் ? என் சேவகன் கதிர் யார் என் அடிமை இந்த உலகமே என் காலடியில் தானே சுழல்கிறது.? யாருக்கு வேண்டும் உண்மை.? மூர்த்திக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி அருந்தினால் தேவலாம் என்று தோன்றியது. குளித்து முடித்துத் தலைதுவட்டி விட்டுக் குடிக்கலாமா…? அல்லது ஈரத்தோடு போய் இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு மீண்டும் குளியலைத் தொடரலாமா என்று பேரரசரிடம் கேட்டான்.

பாத்ரூம் கதவை மென்மையாகத் தட்டிய ஜான்ஸன், “அண்ணே… குளிச்சாச்சா? எல்லாரும் சாப்பிடாம, உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க,” என்றான். தன் நிர்வாணத்தை மறைத்துக்கொண்டு, கூனிக் குறுகும் ஒருவனது தலையில் யாரோ கிரீடம் சூட்டுவது போல் ஒரு காட்சி வந்து போனது.

“தோ வரேன்…”

என்றான் மூர்த்தி.

 

{வளரும்}