Skip to content

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி

எனக்குள் எண்ணங்கள்

21 ஆதார நாயகி


அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத் தருணமாக, “உங்கப்பா என்னைப் படுத்துனதுக்கு எதையாச்சும் அரைச்சு உங்களுக்கும் கொடுத்துட்டு நானும்…” என்று பாதியிலேயே நிறுத்துவாள். ஒரு புல்லை மிதிப்பது, பூச்சியை நசுக்குவது, இதெல்லாம் பெரிய பாவம் என்று தானும் நம்பி, எங்களுக்கும் போதித்தாள். கொசு கடித்தால் என்ன செய்வாள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அடிக்க மாட்டாள், கடிதான் வாங்குவாள்.

பதவி உயர்ந்தால் பணியிட மாற்றம் வரும் என்று ஒரே பள்ளியில் இருபத்தெட்டு வருடங்களைக் கழித்தாள். அந்த வட்டாரத்தின் நன்கறிந்த முகம் அவள். அன்றலர்ந்த புன்னகையை தினந்தோறும் ஒளிர்ந்தபடி, திருநகருக்கும் அனுப்பானடிக்கும் இடையிலான பதினைந்து கிலோமீட்டர் தூரத்தை, வெறுப்பின் ஒரு துளி கசடுகூட இல்லாமல் வருடக்கணக்கில் வேலைக்குப் போய் வந்தவள். சிக்கனம், சேமிப்பு, தன்னை வருத்திக்கொண்டு எங்களை உயர்த்தினாள். மிகக் கண்டிப்பான ஆசிரியை.

வீட்டில் என் படிப்பைக் குறித்து பெரிதாக மெனக்கெடவில்லை. என்னை அறிவாளி என்று நெடுங்காலம் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டிருந்தாள். எனக்கோ படிப்பு என்பது எட்டிக்காய். பரீட்சைகளோ கடல் தண்ணீரை வாயிலேந்தி எதிர்ப்பக்கம் கொண்டு சேர்க்கிற வேலை. அம்மாவின் பல நம்பிக்கைகளை நான் நொறுக்கியிருக்கிறேன். ஒன்றிரண்டு அல்ல, பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றிருக்கிறேன். பதினாறு வயதுவரை என்னோடு இருந்த என் பாட்டி, அவளுடைய வெகுளித்தனமான அன்பு. நான் வீடு திரும்பி வராவிட்டால் தன் உயிரை அவள் விட்டுவிடுவாள் என்கிற அச்சம் என்னை மீண்டும் மீண்டும் பட்டியில் அடைக்க உதவியது. அவள் இறந்தபிறகு, நான் வளர்ந்திருந்தேன். ஓடிப்போக வேண்டிய அவசியம் அதன் பின் ஏற்படவில்லை.

அப்பா வீட்டோடு முடங்கிய பின்னர், பாட்டியும் இல்லாமற் போன பிறகு, எங்களுக்காக அப்பா காத்திருக்க ஆரம்பித்தார். என் வாழ்வில் கிடைக்காமல், அரிய பண்டமாக இருந்த அப்பாவின் அன்பு, அவரது இரண்டாம் பகுதியில் சொற்ப காலம், அதிகம் கிடைத்துத் திகட்டவும் செய்தது. வீட்டிலிருந்து திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தத்துக்கு என்னுடைய சைக்கிளில் கொண்டுபோய் விட்டு, பெரும்பாலும் மாலை வேளைகளில் போய் அழைத்தும் வருவேன். வெவ்வேறு தனித்த காரணங்களுக்காக, அம்மா அல்லது அக்கா தாமதமாக மாலையில் வீடு திரும்ப நேரிடும். எப்போதாவது நிகழும் அந்த மாதிரி சம்பவங்களில் நானோ அல்லது அப்பாவோ, இருவரும் சேர்ந்து சென்றோ அவர்களை அழைத்து வந்திருக்கிறோம்.

இன்ன வேலையாகப் போகிறேன், இவ்வளவு தாமதமாகும் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடுவாள் அம்மா. எனக்குத் தெரிந்தவரை பொய்யே சொல்லாதவள் அவள். அரிதினும் அரிதாக, காலையில் கிளம்பும்போது எதுவும் சொல்லாமல் திரும்பி வருவதற்குத் தாமதமாகும் அந்த மாதிரித் தருணங்கள் மத்தியம வகுப்புக்கே உரிய பொங்கு நதிப் பெருக்கு போன்றவை. தன் பெருக்கிக் கண்ணாடியில் சூரிய ஒளி ஊடுருவி கீழே இருக்கும் காகிதம் பற்றி எரிகிறாற் போல் தனிமையும் காத்திருத்தலும் பயத்தில் தீப்பற்றி எரியும் மனம். ‘இந்த பஸ்ஸிலாவது வந்துவிடுவாள்,’ என்று ஒவ்வொரு பேருந்திலும் வந்து இறங்குகிறவர்களை முகத்தைப் பாராமல் கால்களைப் பார்த்தபடி, இதில் என் அம்மாவின் கால்கள் எது என்று அடுத்தடுத்து நோக்கிக்கொண்டு காத்திருப்பேன். கிடைத்த இடத்தில் அமர்ந்துகொண்டோ, அல்லது நின்றுகொண்டோ, மணிக்கணக்கில் கடந்து செல்கிற அத்தனை பேரையும் வழியனுப்பிவிட்டுக் காத்திருப்பது கொடுமை. ‘இன்றவள் வரட்டும், என்ன காரணம் சொன்னாலும் சரி, ஏற்பதற்கில்லை. வார்த்தையாலேயே அவளை அடித்து நொறுக்கிவிட வேண்டியதுதான் என்று உத்வேகம் பிறக்கும். ‘ஒருவேளை திசையைச் சுற்றிக்கொண்டு, திருவள்ளுவர் நகர் பஸ்ஸில் வந்து இறங்கி, பின்பக்கமாக வீடு புகுந்துவிட்டாளா?’ என்றெல்லாம் மனம் மருகும்.

அதிகபட்சம் ஐந்தரை மணிக்கு வந்திருக்க வேண்டியவள் எட்டரை, ஏன் ஒன்பது மணிவரை வராமல் இருந்த தினங்களும் உண்டு. ஒருவழியாக வந்து இறங்குபவளைப் பார்த்ததும் வெடித்து, கண் கலங்கி, யார் பற்றியும் ஊர் பற்றியும் கவலையுறாமல், “எங்கம்மா போய்த் தொலைஞ்சே?” என்றுதான் முதலில் கேட்பேன். அத்தனை நேர அவஸ்தை, பசி, தாமதம், பயணக் களைப்பு என எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு, தன்னைத் தேடுகிற, தனக்காகக் காத்திருக்கிற தன் மகன் முகத்தைப் பார்த்த மகிழ்வில், இந்த உலகின் எந்த மலராலும் முடியாத அளவு மலர்ந்து சிரிப்பாள் அம்மா. இயலாமைகளின் மீது நீரூற்றி அழிக்கிற தருணம் அது. அதுவரை கெட்டித்துப் போன மணற்கோடுகள் முழுவதுமாய் கரைந்தழிந்து வண்டலாகிற தருணம். அவள் கையிலிருக்கும் சுமையை வாங்கிக்கொண்டதும் அடுத்த கேள்வி, “எதாவது வாங்கிட்டு வந்திருக்கியா?” அம்மாவுக்குப் பொய் சொல்லத் தெரியாது. அவளுடைய சிரிப்பு ஆமாம் என்று ஒத்துக்கொண்டிருக்கும்போது அவளுடைய உதடுகள் இல்லை என்று பிடிபட்டுக்கொண்டிருக்கும். லேசாக  என் முகம் வாடுவதைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சிப்பாயாகக் கூட ஆவேனோ என்று தெரியாத என்னை ராஜா என்று அழைப்பாள். தான் வாங்கி வந்ததை எல்லாம் ஒப்பிப்பாள்.

அவளுடைய தாமத தினங்கள் அத்தனையிலும் அம்மாவுக்கு எதாவது நேர்ந்திருக்குமோ என்பது மட்டும்தான் எனக்குப் பொது அச்சமாக இருந்துகொண்டெ இருந்தது. எதுவும் நேர்ந்திருக்காது என்று நம்புவதற்கு பதிலாக, நேர்ந்திடக் கூடாது என்று பிரார்த்தித்துக்கொண்டே இருப்பேன்.

சென்ற நூற்றாண்டின் சாமான்யப் பெண்மணிகளின் பிரதிநிதி அவள். ஓர் அண்ணனுக்குத் தங்கையாக, தகப்பனை இழந்த குழந்தையின் பால்யம் வாய்க்கப் பெற்றவள். ஹோம் மேடு ஸ்னாக்ஸ் என்றெல்லாம் இன்றைக்குச் சொல்லுகிறார்களே, அது போலத்தான் அவள் ஒரு மதர் மேடு மனுஷி. மதுரை நகரத்துக்கு நான்கு திசைகளிலும் இருள் பொங்க, தன்னையே திரிநுனி தீபம் என்று ஆக்கிக்கொண்டு, சுயத்தை ஒளியாக்கி, வாழப் புறப்பட்ட ராஜம்மாளின் மகள். சேவாசதனத்தில் வளர்ந்தவள். பெண்களின் படிப்பை முன்னிறுத்தி டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கனவைக் காரியப்படுத்திய அவ்வை இல்லத்தில் படித்துத் தேறியவள். மதுரை நகரத்தில் வேலைக்கென வந்து, இடிந்து நொறுங்கிய சரஸ்வதி பள்ளியின் இருண்ட தினத்தில், தப்பிப் பிழைத்து, மாநகராட்சிப் பள்ளிக்கு மாறி, முப்பத்தெட்டு ஆண்டுகளை, பணியினூடே கடந்து ஓய்வு பெற்றவள்.

நான் அவள் மகன். கறைபடியாத தாய்நதியின் கசடு போன்ற நான். என் பொய்களை அவள் உண்மை என்றே நம்பினாள். தேர்ந்த நடிகன்தான் நான் எனினும் ஐயுறவே இல்லை அவள். தூய மரியன்னை பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு என்றொரு காலத்தில், அரும்பாடுபட்டு என்னைச் சேர்த்ததோடு, பய்யன் ஒரு டாக்டராகவோ கலெக்டராகவோ வருவான் என்று கனவு காணப் புறப்பட்டவள். அந்தப் பள்ளியின் முறைதப்பிய மாணவனுக்கான விருதை வழங்கியிருந்தால் ஐந்தாண்டு காலம் எனக்குத்தான் அது கிடைத்திருக்க வேண்டும். அல்லது, என் பெயரில் அந்த விருதை வேறு யாருக்கேனும் தந்தாலும் சரி. பள்ளிக்குத்தான் கிளம்புவேன். படத்திலிருந்துதான் திரும்புவேன். சென்னை போன்ற மகாநகரத்தில் ஒருவேளை நான் பிறந்திருந்தால், இன்னும் நீண்ட நெடிய தினப் பயணங்கள், உள்ளூர் ரயில் பரவல்கள், ஏன் படகுப் போக்குவரத்தைக் கூட நான் பயன்படுத்தியிருக்கலாம். மதுரை என்கிற சிறிய நகரத்துக்குத்தான் நான் தோன்றுவதற்கான அதிர்ஷ்டம் என்று எழுதியிருக்கிறது. வேறு என்ன செய்ய முடியும்?

வளர வளர கயமை கூடிப்போய், கபடத்தில் பழுத்தவனானேன். வழியிலேயே என் பள்ளிக்கூடப் பையை ஒரு பெட்டிக்கடையில் கொடுத்துவிடுவேன். சீருடை பேண்ட்டின் உட்புறம் ஒரு கலர்ச் சட்டையை ஒளித்து வைத்துக்கொண்டுதான் வீட்டிலிருந்து கிளம்புவேன். சட்டைதான் பெரும்பாலும் காட்டிக் கொடுக்கும் என்பதால் சீருடைச் சட்டையை அலேக்காக மடித்துவைத்துவிட்டு, கலர்ச்சட்டை அணிந்துகொண்டுதான் ஊரைச் சுற்றுவது. முக்கியமாக தியேட்டர்களுக்குப் போவதற்கு அதுதான் உசிதம், வசதி.

ஊரே புகழ்கிறதே என்று அப்பிராணியாக, “இந்தப் பாட்டு என்ன படம்?” என்று கேட்டேன். நான் ஒரு இளையராஜா வெறியன், அந்த வயதிலேயே. எந்த நல்ல பாட்டு என்றாலும் அது அவர் இசைத்ததுதான் என்பது பிரபஞ்ச விதி. எஸ்பிபி தன் கோன் ஐஸ் குரலில் கிறங்க வைத்துக்கொண்டிருந்தார். முதல் முறை கேட்டபோதே அந்தப் பாடல் என்னவோ செய்தது. “இந்தப் பாட்டு என்ன படம்?” என்று கேட்டேன். “வைகாசி பொறந்தாச்சு” என்று பதில் சொன்னான் நண்பன் மார்லன். கர்வம் பொங்க, “ம்யூசிக் யார், எங்க தலைவர் ராஜாதானே?” என்று கேட்டேன். அவன் உடனே எள்ளலாக, “இல்ல, எங்க தலைவர்… தேவான்னு பேரு,” என்று சிரிக்காமல் சொன்னான். எனக்கு ஆத்திரமாக வந்தது. “எதோ ஒரு பாட்டு அப்படி இப்படின்னு இருந்தா? ரொம்பத்தான்,” என்றேன். ஸ்டைலாக மார்லன், “மொத்தம் பத்து பாட்டு பிரதர்,” என்றான்.

யார் நடித்தது என்று தொடங்கி, என் எல்லா அனுமானங்களையும் தகர்ப்பதாய் இருந்த அந்தப் படத்தை, அது வெளிவந்து மூன்று வாரங்கள் ஆன ஒரு தினத்தில், அதுதான் அந்தப் பாடலை, “தண்ணிக் கொடம் எடுத்து…” என்கிற அந்தப் பாடலை நான் கேட்ட முதல் தினமும் கூட. அன்றைக்கே பார்த்தாக வேண்டும் என்கிற பேய்க்குரல் மீண்டும் மீண்டும் என்னை இம்சித்துக்கொண்டே இருந்தது. “மலராத மல்லிகப்பூவே… கொஞ்சம் மனமிரங்கு…” கடமை தவறாத காவல் அதிகாரி ராகவனைப் போலவே, உடனே களம் காணப் புறப்பட்டோம், நானும் மார்லனும். மார்லனின் ஒரு புகழ்பெற்ற தத்துவத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்: “பள்ளிக்கூடம் அதே எடத்துலதான் இருக்கும். அதை யாரும் தூக்க மாட்டாங்க. ஒரு படம் எவ்வளவு நல்லா இருந்தாலும், ஓடி முடிச்சதும் தூக்கிருவாங்க. ஸோ, நாம படத்துக்குப் போகலாம்,” என்பான்.

ஏற்கனவே அந்த மூன்று வாரங்களுக்குள் இரண்டு முறை அந்தப் படத்தைப் பார்த்திருந்தான் மார்லன். “நீ டிக்கெட் போட்டா நானும் வரேன்,” என்று பெருந்தன்மையாக என்னோடு வந்தான். “சரி, வந்து தொலை,” என்று அவனையும் அழைத்துக்கொண்டு, சிவப்பு கலர்ச்சட்டையோடு நானும், மாற்ற வழியின்றி யூனிஃபார்ம் சட்டையோடு அவனும் திருநகரிலிருந்து சிந்தாமணி தியேட்டர் போவதற்காக, பெரியர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கனெக்ஷன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தோம். வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அவனுடைய அக்காள் கணவர் கண்ணில் அவன் பட்டான். “எட்டரை மணிக்கு பள்ளிக்கூடத்துக்குள்ள போயிருக்க வேண்டியவன், ஒம்பதே முக்காலுக்கு இங்கே என்ன பண்றே?” என்று அவன் காதைத் திருகி, தலையில் ஒரு கொட்டு கொட்டி, முதுகில் இரண்டு அறைகளையும் அன்பளித்து, தானே அவனைப் பள்ளியில் விடுவதாய் என்னிடமிருந்து கவர்ந்துகொண்டு போனார். அதில் பாருங்கள், அருகே சிவப்புச் சட்டை அணிந்துகொண்டு ஒருவன் நின்றிருந்தானே, அவனும் அதே பள்ளியில் சிறந்துகொண்டிருப்பவன்தான் என்பதுஅவருக்குத் தெரியாமலே போயிற்று. ஹீரோயின் ஆங்கிலோ இண்டியன் என்று எதோ தன் அத்தைப் பெண்ணைப் புகழ்வதைப் போலவே என்னிடம் அள்ளிக்கொட்டிய மார்லன் விருப்பமின்றி பள்ளிக்குக் கடத்திச் செல்லப்பட்ட பிறகு, நான் மட்டும் அந்தப் படத்துக்குச் சென்றேன்.

சும்மா சொல்லக் கூடாது. மார்லன் ஏற்கனவே என்னிடம் பிரஷாந்த் பற்றி காவேரி பற்றி பாடல்கள் நகைச்சுவை பற்றியெல்லாம் பலவித பில்ட் அப்களைத் தந்திருந்தான். பொதுவாக இப்படி பில்ட் அப் செய்து அழைத்துச் செல்லப்படும் படங்களில் என் மனம் தன்னை ஒட்டிக் கொள்ள மறுத்து விலகியோடவே முனையும். இந்தப் படம் என்னவோ ரொம்பவே பிடித்து விட்டது. நான் மட்டும் தனியாக அமர்ந்து பார்க்க நேர்ந்ததே என்று ஆரம்பத்தில் சங்கடமாய் உணர்ந்த எனக்கு நல்லவேளை கூடவே அமர்ந்துகொண்டு தொணதொண என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்திருப்பான் மார்லன் வராததே சாலச்சுகம் என்று  மனம் நிறைந்து வழிந்தது.

சிந்தாமணி திரையரங்கம் இப்பொழுது இல்லை. அந்த இடத்தில் மதுரையின் பிரபல துணிக்கடையான ராஜ்மகாலின் சிறப்பு ஷோரூம் வந்திருக்கிறது. அந்தத் திரையரங்கத்தில் நான் எண்ணற்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். என் பள்ளியிலிருந்து நடந்தே சென்று விடக் கூடிய தூரத்தில் ரோட்டுக்கு மேலே நெடிதுயர்ந்து வசீகரித்த அரங்கம் அது. அங்கே பாகவதர் நடித்த ஹரிதாஸ் உள்ளிட்ட படங்கள் சக்கை போடு போட்டன என்பது தலபுராணத் தகவல். டீ.ட்டி.எஸ் முறையில் ஒலிப் பதிவாகியிருந்த  மோனிஷா என் மோனலிசா படத்தின் பாடல்களை அந்தத் தியேட்டரில் கேட்ட போது எல்லையில்லா அனந்தத்தில் திளைத்தது ரசம். சிந்தாமணி என்று சொல்ல மாட்டான் மார்லன் அதை சுருக்கமாக சிந்துவை மீட் பண்லாமா என்பான் செல்லமாக.

இரண்டு கோன் ஐஸ்களைத் தின்று விட்டு இரண்டாம் பாதியை ஜூரஜிலீருடன் பார்த்து முடித்தேன். மனசுக்குள் காதல் ஒன்று தான் உலகில் தெய்வீகமான ஒரே பண்டம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். காதல் என்ற வார்த்தையே ஒரு மாதிரி ஜிலுஜிலு என மனசுக்குள் வருடலாயிற்று. என்னென்னவோ எண்ணங்களுடன் வீடு திரும்புவதற்காகப் படம் முடிந்து நடந்தே கீழவாசல் ஸ்டாப்பின் வளைவில் நின்றுகொண்டிருந்தேன்.

31ஏ என்றொரு பஸ். திருநகர் எட்டாவது நிறுத்தத்தில் கிளம்பி அனுப்பானடிக்கும் பிறகு அங்கிருந்து மீண்டும் திருநகருக்கும் வந்து செல்லக் கூடிய பேருந்து. எங்கள் பள்ளி வழியாகச் செல்லும் ஆறேழு திருநகர் பஸ்களில் அதுவும் ஒன்று. அம்மாவுக்கு அனுப்பானடியிலிருந்து நேரே திருநகருக்கு வந்துவிடக் கூடிய ஒரே த்ரூ பஸ் அது தான். அதில் பேருந்தின் மையப் பகுதியில் ஜன்னலோர சீட்டில் அம்மா அமர்ந்திருந்ததை தாமதமாகத் தான் பார்த்தேன். முதலில் அந்தப் பேருந்தை விட்டு விட்டு அடுத்ததில் செல்லத் தான் முடிவெடுத்திருந்தேன். நானோ வண்ணச்சட்டையில் இருப்பவன். வீடு திரும்பும் முன் மூணாவது ஸ்டாப்பில் மணி டீக்கடையில் பத்திரம் செய்திருந்த ஸ்கூல் பையை மீட்டுக் கொண்டு உச்சியா கோயில் பக்கமாய் நடந்து கொண்டே கலர் சட்டையை மாற்றி மீண்டும் யூனிஃபார்மை அணிந்து கொண்டல்லவா வீடு திரும்ப வேண்டும்.?

அம்மா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.எனக்கு வெலவெலத்து விட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அம்மாவை தாண்டி சென்று பின்பக்கமாக அதே பேருந்தில் ஏறி விட்டேன் திருநகர் மூன்றாவது நிறுத்தம் செல்லும் வரை எங்கே என்று அவள் என்னை திரும்பிப் பார்க்கப் போகிறாளோ என அடிக்கடி அவள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தேன் அம்மா என் பக்கம் திரும்பவே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் பேருந்து நின்று அடுத்த வினாடியே குதித்து இறங்கி யார் கண்ணிலும் படாமல் மணிகண்டன் டீக்கடையில் நுழைந்து பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன் அம்மா ஐந்தாவது நிறுத்தத்தில் இறங்கி டீச்சர்ஸ் காலனி வழியாக மேடு ஏறி வீட்டுக்குச் செல்வதற்குள் நிச்சயமாக மூன்றாவது நிறுத்தத்தில் இருந்து உச்சியா கோயில் வழியாக பி ஆர் சி காலனியை ஊடுருவி குறிஞ்சி நகருக்குள் நுழைந்து வீட்டுக்குச் சென்று விட முடியாது என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் ஒரே பாதையில் செல்வதற்கு பயமாக இருந்தது நிச்சயம் அம்மா என்னை பார்த்து விட்டாள் வீட்டுக்கு போனதும் மண்டகப்படி தான். அம்மாவை கூட சமாளித்து விட முடியும் அவள் அடித்து திட்டி அழுது முடித்த பிறகு பாட்டி ஆரம்பிப்பாள். நான் சொல்வது அவளுக்கு கேட்காது அவளாக எதையாவது யூகித்துக் கொண்டு சற்று நேரத்துக்கு எதையாவது திட்டிக் கொண்டே இருப்பாள். எல்லாம் கழிந்தது என்று ஆசுவாசமடைந்தால் அதற்குப் பிறகு குறைந்தது ஒரு வாரம் ஆவது பாட்டி என்னோடு பேச மாட்டாள். அம்மா பேசுவதற்கு மூன்று நாட்கள் ஆகும். கண்ணுக்கு முன்னால் இத்தனையும் வந்து வந்து போக படம் பார்த்த மகிழ்ச்சி கொஞ்சம் கூட மனதில் தங்காமல் வீட்டுக்கு போக வேண்டுமே என்ற எரிச்சல் மட்டும் எனக்குள் இருந்தது.

ஒரு வழியாக வீட்டுக்கு சென்றேன். அப்பாவும் அம்மாவும் சாதாரண குரலில் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பாட்டி உள்ளே அன்றைய மாலை டிபனை தயாரித்துக் கொண்டிருந்தாள் போலும். எனக்கு மூத்தவள் என்னை நோகடிப்பது போலவே இங்கிலீஷ் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாமல் முகம் கை கால் கழுவி விட்டு யாரும் சொல்லாமலே திருநீறிட்டுக் கொண்டு சாமி முன்னால் சற்று அமைதியாக நின்று பிறகு வந்து எழுத்து மேஜையை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ ஒரு நோட்டை எடுத்து எதையோ எழுதத் தொடங்கினேன்.

பாட்டி அதிசயப்பட்டாள். அம்மாவுக்கோ மகிழ்ச்சி. சித்தப்பா வந்து அழைத்ததில் அப்பா அவரோடு கிளம்பி போயிருந்தார். வீடே அமைதியாக இருந்தது ஒரு மணி நேரம் எதையெதையோ செய்து விட்டு எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் ” என்ன தலைவா, இன்னும் ஆரம்பிக்காம இருக்காங்கிய? புது உத்தி எதுவும் ட்ரை பண்ண போறாங்களோ? பார்ப்போம் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ?

அடுத்த மூன்று தினங்கள் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஏதோ காரணத்துக்காக லீவு. லீவு தினங்களில் அம்மா வரிந்து கட்டிக்கொண்டு வேலைகளை பார்ப்பாள். நான் அவளுடைய கோபத்தை தணிக்கும் வண்ணம் சொன்ன வேலைகளை எல்லாம் செய்தேன். சொல்லாமலே ஒட்டடை அடித்து கிளீனிங் வேலை எல்லாம் பார்த்து எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று முயன்று கொண்டிருந்தேன்.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி தொடங்கி நானும் ரெண்டு நாள் ஸ்கூலுக்கு போய் திரும்பி இருந்தேன். என்னால் இந்த நரக அவஸ்தையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதுதான் நமது பாணி. “என்னை கலர் சட்டையில் பார்த்தியா என் கிட்ட கேளு. என்னை இரண்டு சார்த்து சார்த்து. அதோட உன் வேலை நீ பார்க்க போ. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லவில்லை வீம்பாக நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் எனக்கே குழப்பம் ஆகிவிட்டது இவள் என்னை பார்த்தாளா? பார்க்கவில்லையா?. ரஜினி படங்களில் வருவது போல மீனாட்சிக்கு பதிலாக டபுள் ஆக்சன் காமாட்சி யாரையும் நான் தான் பார்த்து குழப்பிக் கொண்டேனா? மண்டை உடைத்து விடலாம் போல இருந்தது. தெளிவடைய ஒரு உபாயம் செய்தேன். அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அதே கீழ வாசலுக்கு போய் நின்று கொண்டேன் பெரிய புளிய மரத்தின் பின்னால் நான் இருப்பது எனக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டேன். அன்றும் அம்மா 31ஏ பஸ்ஸில் அதேபோல் நடுவாந்திரம் அமர்ந்து வந்தாள். கீழவாசல் ஸ்டாப்பில் இருந்து பஸ் கிளம்பும் வரை நான் அவள் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பஸ் கிளம்பி சென்றதும் நானும் அடுத்த வேறு வண்டியில் ஏறி கிரைம் பிரான்ச் சென்று அங்கிருந்து திருநகர் பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு போனேன்.

நான் தயாரித்து வைத்திருந்த கதையை அம்மாவிடம் சொன்னேன். என்னுடைய யூனிபார்ம் சட்டையில் கூட படிக்கும் பையன் மையை உதறி சட்டை பாழாகி விட்டது. ஹாஸ்டல் பையன் ரமணி கொடுத்து உதவிய கலர் சட்டையோடு நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் நல்ல கூட்டத்தில் 31 ஏ பேருந்து வந்து நின்றது அம்மா என்னை பார்க்கவே இல்லை நான் மட்டும்தான் அம்மாவை பார்த்தேன். கூட்டமாக இருந்ததால் அடுத்த வண்டியில் வந்தேன். ” உன் கண் முன்னால் நின்றேன் ஆனாலும் நீ ஏன் என்னை பார்க்கவில்லை” என்று அம்மாவிடம் கேட்டேன்.

அம்மாவின் முகத்தில் மிக நிஜமான வருத்தம் ஒன்றை பார்த்தேன் சாரிப்பா என்று ஆரம்பித்தாள். அங்கே நான் உடைந்து நொறுங்கினேன். எல்லா நாளும் மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப் தாண்டும் போது எங்கே என் கண்ணன் என்று யூனிஃபார்ம் அணிந்த ஒவ்வொரு முகத்தையும் தேடித்தேடி பார்த்துவிட்டு தான் வருவேன். உன்னை கலர் சட்டையில் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஒருவேளை நீ என் கண்ணில் படவில்லையோ என்னவோ”. என்றவள் மீண்டும் “சாரிப்பா” என்றாள்.

இது ஒரு சிறிய விஷயம் போல் தோன்றலாம். அந்தப் பள்ளியில் படிக்க வைத்த பெருவாரி தினங்களில் வகுப்பை புறக்கணித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருந்த ஒருவன் நான். பின்வந்த ஒரு தினம் என் அத்தனை பொய்களும் தெரிந்து போய் என்னைப் பற்றி அவள் சேர்த்து வைத்திருந்த மொத்த பிம்பமும் உடைந்து நொறுங்கியது. அதன் பின் பத்தாம் வகுப்பில் நான் தேறியது நிஜமாகவே ஒரு சாகசம். அடுத்த வகுப்புக்கு வேறொரு பள்ளிக்குச் சென்று அந்தப் புள்ளியில் இருந்து கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் நன்கு படித்துப் பட்டதாரி ஆனதெல்லாம் பின் கதை. என்னைப் பொருத்த மட்டிலும் அம்மா என்பவளின் மனத்தில் என்னை வரைந்து வைத்திருந்த தூய பிம்பத்தின் சுடர்வெப்பம்  தாளாமல் என் பொய்மேனி பொசுங்கித் துன்புற்றது அந்தக் கணத்தில் தான்.

தாய்மை என்பது வேண்டி விரும்பி தனக்குத் தானே சூடிக் கொள்ளுகிற ஒரு அறியாமை மலர். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அறிதல்களும் அந்த மலருக்கு முன்பு ஒரு தூசு கூட பெறுமானம் அற்றவை.

பல ஆண்டுகளுக்குப் பின்னொரு தினம் அம்மாவிடம் நான் கட் அடித்து விட்டுப் படத்திற்குப் போனதைக் குறித்து விலாவாரியாக விளக்கிச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு இப்ப இதுக்கு நா என்ன சொல்றது என்று தான் கேட்டாள்.

அம்மாவிடம் நான் சொன்னேன். “இல்லம்மா..நீ சொல்றதுக்கு எதுவுமே இல்லைம்மா. நான் சொல்றதுக்குத் தான் ஒண்ணு இருக்கு,

ஸாரிம்மா!” என்றேன்.