Skip to content

அந்தக் கதை

அந்தக் கதை


உன் வாழ்வின் மறக்க முடியாத நாள் எது? என்று கேட்ட அந்த மனிதனை முற்றிலும் வெறுக்க தொடங்கி இருந்தேன். மிகப் பழைய கருப்பு வெள்ளை இங்கிலீஷ் சினிமாக்களில் தான் இவனைப் போன்ற அழுக்கான கோமாளிகளை பார்த்திருக்கிறேன். இந்த நகரத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒருவன் ஏதோ ஒரு பழைய ஓவியத்தில் இருந்து எழுந்து வந்தாற் போல் தெரிந்தான்.

30 பேர் வரை பயணிக்கலாம் போன்ற பெரிய லிஃப்ட். அந்த கட்டிடத்தின் 30 மற்றும் 31 வது மாடிகளுக்கு நடுவில் பழுதடைந்து நின்றுவிட்டது. அத்தனை பெரிய லிப்ட்டில் நானும் அவனும் மட்டும்தான் இருந்தோம்.  செல்பேசிகள் வேலை பார்க்கவில்லை. லிப்டின் உட்பக்கம் இருந்த அலாரம் அவசர காலத்தில் எடுத்துப் பேசுவதற்கான டெலிபோன், எதுவுமே வேலை பார்க்கவில்லை மின்சாரம் துண்டிக்கப்பட்டு பேட்டரி விளக்கு குறைந்தபட்ச ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.

முதல் 10 நிமிடங்கள் வரை ஒருவர் முகத்தை மற்றவர் நோக்காமல் இரண்டு பேரும் சமாளித்துக் கொண்டிருந்தோம். வெளிறிய கருப்பு நிறத்தில் அழுக்கான கோட், வர்ணம் தப்பிய தொப்பி, லொடலொட கருப்பு கண்ணாடி, வெளியே தெரியும் தையல் பிரிகளுடன் ஜீன்ஸ் பேண்ட் அவனைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடிக்காமல் போனது வியப்பில்லை. திடீரென அவன் அப்படி கேட்டது நான் எதிர்பாராதது.

“உன் வாழ்வின் மறக்க முடியாத நாள் எது?”  முதலில் வேறு எங்கோ பார்ப்பவனை போல் அவனது கேள்வியில் இருந்து தப்பிச் செல்லவே விரும்பினேன். அவனுடைய குரல் தகர பாத்திரத்துக்குள் பொருத்தமற்ற தனிமங்கள் உராய்வது போல் வினோதமாக ஒலித்தது.  மீண்டும் அந்த கேள்வியை அவன் என்னிடம் கேட்டான். பதில் சொல்லாமல் விடமாட்டான் என்பது தெரிந்த நேரத்தில், அப்போதுதான் அவன் புறம் திரும்புவது போல திரும்பினேன்

” மன்னிக்கவும், ஏன் அப்படி கேட்கிறீர்கள்? குறிப்பிட்டுச் சொல்ல அப்படி எந்த தினமும் நினைவுக்கு வரவில்லையே” என்று சமாளித்தேன்.

ஓரிரு நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மௌனத்தை உடைத்தான் ” ஒருவேளை இன்றைய தினம் கூட அப்படியானதாக இருக்கலாம்”  ஒரு பெரிய பிரார்த்தனையின் முடிவில் வாக்கு சொல்லுகிற துறவியைப் போல் அதை அவன் ஒலித்தான். எனக்கு வந்த ஆத்திரத்தை நளினமாக அடக்கிக் கொண்டேன்.

அதன் பிறகு ஒரு 15 நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்த இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தோம்.
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் சற்று தரையில் அமர்ந்து கொள்கிறேன்” என்றபடி அந்த மனிதன் லிப்டின் ஒரு மூலையை நோக்கி சென்று குழந்தைகள் சறுக்கு மரம் விளையாடுவது போல் மூலையில் தன் முதுகைச் சறுக்கி தரையில் அமர்ந்தான். சற்றைக்கெல்லாம் தன் செல்பேசியில் எதையோ பார்த்து தானாகவே சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் எதைப் பார்த்துச் சிரிக்கிறான் என்பதும் தெரியவில்லை. இந்த லிஃப்ட் எப்போது மீண்டும் இயங்கத் தொடங்கும் என்பதும் தெரியாது. வெளியே இருப்பவர்களுக்கு இந்த லிஃப்டின் நிலை புரிந்திருக்குமா? மீண்டும் இதனை இயக்குவதற்கான நடைமுறைகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பார்களா என்பதெதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கையில் இந்த அழுக்குக் கோட் அணிந்த மனிதன் தன்னை மறந்து சிரிக்கிறான். எனக்கும் இவனுக்கும் ஒரே சூழ்நிலை தான். எங்கள் முன்பிருப்பது ஒரே சிக்கல் தான். இருவருக்கும் ஒருங்கே தான் சரியாகப் போகிறது. இப்படி இருக்கையில் தனக்கு மட்டும் எந்த கஷ்டமும் இல்லை என்பது போல் நடிக்கிறானா அல்லது இவன் பைத்தியமா..? தெரியவில்லை.

வாட்ஸப் செய்தி போகிறதா எனப் பார்த்தேன். ஒரு சின்ன கீற்று நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினேன். இந்தக் கட்டிடத்தின் 40 ஆவது மாடியில் எனது அலுவலகம் இருக்கிறது. நகரின் மையத்தில் உயரத்தில் இருந்து பார்க்கையில் நான்கு திசைகளும் தெள்ளத் தெளியும். அதில் ஒரு இன்ப அகங்காரம் நேற்று வரை என்னுள் இருந்ததென்னவோ நிசம் தான். இந்த நிமிடத்தில் இத்தனை உயரத்தைத் தேடிப் பெற்றதை எண்ணி என்னையோ நொந்து கொண்டேன்.

வாட்ஸ் அப் செய்தி ஒன்றை கட்டிடத்தின் அலுவலக மேலாளன் ஜிம் எனும் இளைஞன் இரண்டு முறை விவாகரத்தானவன். பெரிய தத்துவங்களைப் போகிற போக்கில் உதிர்ப்பான். காலண்டரில் ப்ரிண்ட் செய்யும் தகுதி கொண்ட வாசகங்கள் அவை!

“ ஜிம், நானும் இன்னொரு மனிதனும் லிஃப்டில் இருக்கிறோம். ஒளியில்லை. குறைவான காற்றுடன் அல்லாடுகிறோம். எதாவது செய்து எங்களை வெளியேற்று. சீக்கிரம்” என்று அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு எந்தச் சலனமும் இல்லை. என் கண்களை முக்காலே மூணு சதம் மூடியிருந்தேன். அரைத்தூக்கம் என்பார்களே அப்படிக் கூட அல்ல அரை மயக்கம் அது.

இன்னும் என் பக்கத்தில் இருப்பவன்  எதோவொரு பழைய ஸ்பானியப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அதில் பல சொற்கள் அவனாகவே உருவாக்க முயன்றவை. என் ஆத்திரத்துக்கு இசையமைக்காதே எனச் சொல்ல நினைத்து கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்,

ஜிம்மிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.

பெரும் பரவசத்தோடு ஹெட் செட்டின் ஆழத்தில் அதை ஒலிக்க வைத்தேன்.

” உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நிர்வாகத்தின் சார்பிலும் என் சார்பிலும் மட்டற்ற வருத்தங்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன் திரு ஆலன் ஜோன்ஸ். நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்தச் சூழலின் அசாதாரணத்தை உங்களுக்கு விளக்குகிறேன். நம் கட்டிடத்தில் இருக்கும் லிப்ட் 20 ஆண்டு பழமையானது. அதை தயாரித்து அளித்த நிறுவனத்துக்கும் நமக்கும் ஆன ஒப்பந்தங்கள் முடிந்து போயின. மறுபடியும் பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தப் பெரிய சைஸ் லிப்டை அதற்குண்டான உபகரணங்களுடன் பழுது பார்ப்பதற்கு இந்த மாநிலத்திலேயே ஒரே ஒருவனுக்கு தான் தெரியும். அவன் பெயர் ஜானி ஜுனியர். அவனுடைய செல்பேசி நம்பரை கஷ்டப்பட்டு வாங்கி ஒரு மணி நேரமாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படியும் சீக்கிரத்திலேயே அவனை வரவழைத்து லிப்ட்டை மறுபடியும் இயக்கி உங்களை வெளியே கொண்டு வந்து விட முடியும் என்று நம்புகிறேன். தயவு செய்து சிரமத்தை பொறுத்துக் கொள்ளுங்கள். கடவுள் துணை இருப்பாராக”

எனக்கு சப் என்று போய்விட்டது. இந்த தினத்திற்கென்று அடுக்கி வைத்திருந்த அத்தனை காரியங்களும் கெட்டுப் போய் விட்டன.

இதுவரையிலான தாமதம் கூட பொறுத்துக் கொள்ள முடிந்தது தான். இனி எத்தனை நேரம் ஆகும் என்பது  தெரியாமல் இருப்பது கொடுமை. மதியம் இரண்டு மணிக்குள் என்னை அனுப்பி விடுவதாக இருந்தால் நான் வருகிறேன் என்று கண்ணைச் சிமிட்டியபடியே வீடியோ காலில் பறக்கும் முத்தங்களை அனுப்பி விட்டு வைத்த எஸ்டினா நிச்சயமாக இன்னொரு அப்பாயின்மென்ட்டை தருவதற்கு யோசிப்பாள். கதவைத் திறந்ததும் எதிர்வரும்  மாடியில் இருந்து குதித்து   விடலாம் போல எரிச்சல் பெருகிற்று.

தனது பெரிய பையை சற்றே நகர்த்திய அந்த மனிதன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான்.

” நீங்கள் விரும்பினால் நாம் இருவரும் பேசலாம். பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது.   என்னோடு பேசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் கட்டாயப்படுத்த மாட்டேன். நேரத்தைக் கொல்ல வேண்டும் அல்லவா?” என்றபடி கை குலுக்க முற்பட்ட அந்த அழுக்கு மனிதனை என் சக்தி மொத்தமும் கொண்டு வெறுத்தேன்.   என் பெயரைச் சொன்னதும் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அந்த மனிதன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

” ஹெல்லோ, என் பெயர் ஜானி ஜூனியர்.”

*************