Skip to content

யாராலும் எழுத முடியாத வரிகள்

வாசகபர்வம் 3


 

 

ஜூடாஸ் மரம்

மலர்விழி

வேரல் புக்ஸ்

முதல் பதிப்பு டிசம்பர் 2022

120ரூ

 

 


யாராலும் எழுத முடியாத வரிகள்


கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ் பை ஒன்றின் உட்புறம் நிமித்தப் பிரகாரம் இடம் பெறவல்ல உபகரணங்களுக்குச் சற்றும் குறைவற்றது தான் கவிதையை நாடுகிற மனதொன்றின் உட்பொருட்களும். நாள்பட்ட கவிஞன் தன் முன்னால் நடப்பவற்றில் இதெல்லாம் கவிதைக்கு ஆகும் ஆகாது எனப் பிரித்தறியப் பழகி விடுகிறான். ஆனாலும் எஞ்சி இருக்கும் ஒரு வேறுபாடு “எது கவிதை ஆகும்” என்பதில் உறைந்திருக்கக்கூடிய தொடர்பின்மையின் சஸ்பென்ஸ். உலகின் பல லௌகீகங்களில் இருந்து கவிதையை விலக்கித் தருவதும் அதுவே.

வாழ்வெனும் ரிமோட்-இல் கண்ணுக்குத் தெரியாத பாஸ் பட்டன் கவிதை. வாழ்வின் நீள் தூரங்களில் வேறு யாரை விடவும் வேகம் குறையாமல், ஓட்டம் தடைப்படாமல் கடந்து கடந்து சலிக்கும் பாதங்கள் வாய்க்கப் பெற்றவர்களுக்கு இத்தகைய பாஸ் பட்டன்கள் விடுதலைக்கான சாளரங்களாக எஞ்சுகின்றன. கவிதையை நம்புகிறவன் எதைப் பெறுகிறானோ அதையே பிறருக்குத் தரவும் விழைகிறான். அடைந்த அனுபவங்களைக் கவிதைப் படுத்தி விடுவதன் மூலமாக அந்த அனுபவத்திலிருந்து விடுபடுவதும் அதை தொலைக்காமல் சேமிப்பதும் மற்ற எந்த விஷயத்தைக் காட்டிலும் எளிதாகிறது. சிலருக்குக் கவிதை என்பது ஒரு ஞான எக்சர்சைஸ்.

சமீபத்தில் வாசித்த அத்தனை கவிதைகளிலும், ஆகச்சிறந்ததென்று மலர்விழி எழுதியிருக்கும் கீழ்க்கண்ட விருட்சம் எனும் கவிதையை முன்மொழிகிறேன். நேர்தன்மையில் ஒலித்தடங்குகிற பிரேரணை போலத் தோற்றமளிக்கிற இந்தக் கவிதையின் வரியிடை மௌனங்கள் தண்டனை வாசியின் கால்களில் சங்கிலி கொண்டு பிணைக்கப் பட்டிருக்கிற இரும்புக் குண்டுகளைப் போல் கனம் பொருந்திக் கிடக்கின்றன. தமிழின் சொற்பலம் இந்தக் கவிதையின் இறுதியில் தொனிக்கிற விருட்சமானாள் எனும் ஒற்றைச் சொல்லில் மிளிர்கிறது. இறந்தவர்களைக் குறிக்கையில் காலமானார் என்று சொல்வது நம் மொழியின் காத்திரம். நிகழ்தலைத் தாண்டிய அர்த்த அலைதல்களைச் சாத்தியம் செய்வது மொழி தான் மட்டுமே அறிந்து வைத்திருக்கிற சுய தந்திரம். இந்தக் கவிதை முப்பரிமாணப் பிம்பங்களின் ஒழுங்கான நகர்வுகளை வாசகனுக்குள் நிகழ்த்துவது ரசம்.  அபாரமான கவிதை!

விருட்சம்

தன்னைத் தாங்கிப் பிடித்து

அழைத்துச் செல்பவரின் கையை விடுத்து

கை நடுங்க பள்ளம் தோண்டி

செடி நடுகிறாள் பாட்டி

 

அந்த நொடியில்

சிறு பிள்ளையாய் மாறிப் போனவளின்

கைச் சுருக்கங்களில் மண் நிரப்பி

தழுவிக் கொள்கிறது பூமி

 

சில நாட்கள் கடந்து

அவள் கைகள்

செடியிடம் உரையாட

 

வம்சம் வளர்த்தவளின்

ஸ்பரிசத்தில் சில்லிட்டு

பனித்துளியைப் பரிசாக தருகிறது இலை.

 

பின்னொரு நாள்

மண் வேறு அவள் வேறு

என்றறியாத வண்ணம்

அவள் விருட்சமானாள் .

சாதாரண- எளிதில் புழங்கி விடுகிற- வாழ்வின் எல்லா தருணங்களிலும் கேட்க வாய்க்கிற வாக்கியங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகிற மலர்விழி சட்டென்று யூகிக்க முடியாத வரிகளைக் கொண்டு வந்து பொருத்தி அயரடிக்கிறார். வாழ்வில் சகஜமான பண்டங்களை மட்டுமே கைக் கொண்டு மாயாஜாலம் செய்கிற தேர்ந்த வித்தகம் போலவே மலர்விழியின் பல கவிதைகள் நிகழ்கின்றன.

ரகசிய அறை

 

இரவும் பகலும் சந்தித்துக் கொள்ளும்

ரகசிய அறையை திறக்காதே

மனம் கூண்டில் இருந்து வெளிப்பட்டு விடும்

 

பல கிலோமீட்டர்கள் கடந்து பயணிக்கும்

ஒரு முத்தப் பறவையை வளர்த்தால்

 

ஊடல்கள் பசையாகி

இடைவெளி சுருங்கும்

அதிசயம் நிகழும்

 

அதன் பின்

அங்கு

கண்ணீர்த் துளி வரைந்த ஓவியத்தில்

யார் கையொப்பமும் இருக்காது.

 

இந்த கவிதையின் முதல் மூன்று பத்திகளை எங்கேயும் எப்போதும் எதிர்பார்க்க முடிகிற அதே மனது கடைசி பத்தியில் சுருண்டு சுருண்டு திகைக்கிறது. யாராலும் எழுத முடியாத வரிகள் அவை.

எந்த ஒரு கவிதையும் அதன் நடுவரிகளை விடவும் தொடக்கம் அல்லது முடிவு வரிகளில் கூர்ந்து வாசிக்கப்படுவது இயல்பு. அதிர்ச்சி தரக்கூடிய ஆரம்பங்கள் அல்லது முடிவு வரிகள் பார்த்து பார்த்து ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கும் பட்சத்திலும் பலர் கவிதைகளில் அவ்வரிகள்  விரும்பப் படுபவை ஆகவே தோற்றமளிக்கும். அரிதினும் அரிதாக அத்தகைய ஆரம்ப இறுதி வரிகள் ஒரு பிரயத்தனமும் இன்றி எழுதப்படுவதும் நிகழவே செய்கிறது. மலர்விழியின் கவிதைகளில் அத்தகைய ஆரம்ப/முடிவு வரிகள் மிக இயல்பாகத் தோன்றுகின்றன. கனமான உணர்பொருட்களைக் கையாளுகிற அத்தகைய வரிகள் மீண்டும் மீண்டும் வாசகனைக் கவிதைக்கு உட்புறமாகவே திருப்பி விடுகின்றன.

 

உதாரணமாக “இரண்டுக்கும் ஆசைப்படுபவள்” என்கிற தலைப்பிலான கவிதை தொடங்கும் வரிகள் இவை

 

பூமியில் பிறந்த போதே

தற்காலிகம் நெருங்கிய தோழியானது

 

புத்தகத்தை மூடி வைத்த பிறகும் இன்னொரு முறை/ பல முறைகள் திறந்து இதே கவிதைக்குள் வந்து வந்து போக நேர்வது அனந்தம்.

 

தொகுப்பின் கடைசிக் கவிதை

 

தினசரி எத்தனை கண்களைக் கடந்தாயிற்று

 

என தொடங்குகிறது.

 

இரவு முழுக்க ஆடி ஆடி

இடுப்பெல்லாம் நீராகிப் போனவள்

ஆடை கலைகிறாள்

 

என தொடங்குகிறது ஒரு கவிதை.

 

தூர தேசம்” என்கிற கவிதை இப்படி முடிகிறது

 

அதுவரை இந்தக் கண்ணீர்

கடல் இல்லாத ஊரில் உப்பாகட்டும்

யாருடைய சாயலும் இல்லாத,எளிமையான அதே நேரம் பொருட் படுத்தத் தகுந்த கவிதைகளை தன்னுடைய ஜூடாஸ் மரம் என்னும் தொகுப்பில் எழுதி இருக்கிற மலர்விழி இன்னும் நிறையக் கவிதைகளைக் கண்டடைய  வாழ்த்துகள்.  வாழ்தல் இனிது.

 

ஜூடாஸ் மரம்-கவிதை விரும்பிகள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.