சமீபத்து ப்ரியக்காரி
21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்
1
ஸ்டெல்லா என்பது யார்
யார் கேட்டாலும்
எந்த பதிலும் சொல்வதில்லை
என்பது நெடுங்காலப் புகார்
2
ஒரு ஸ்டெல்லா
ஒரு போதும்
ஸ்டெல்லா என்பது யார்
எனக் கேட்க மாட்டாள்
என்பதொரு பதில்.
சொல்வதில்லையெனினும்.
3
ஒரு ஸ்டெல்லா,
ஸ்டெல்லா என்பது நான் தானே
என்று வினவ மாட்டாள்.
4
எப்போதாவது அல்லது
ஒரேயொரு முறை
எதிர்ப்படும் பட்சத்திலும்
மெலிதான புன்னகையொன்றின்
வழியாக
நான் தான் ஸ்டெல்லா
என்று உணர்த்திச் செல்வதுண்டு
5
இரயிலடியில்
“சிறிது நேரம்
என் சுமைகளைப்
பார்த்துக் கொள்ள முடியுமா..?
ஒப்பனையறைக்குச்
சென்று வந்து விடுகிறேன்”
என்று இறைஞ்சுகிற அதேகுரலில்
உங்களால்
சிறிது நேரத்துக்காவது
ஸ்டெல்லாவாக
இருக்க முடியுமா..?
என்று கேட்க நினைத்து
“ப்ளீஸ்…” என்று தொடங்கிய
வார்த்தையிலேயே முடிவது
யாருக்குப் புரிகிறதோ
அவள் பெயர் ஸ்டெல்லா-
அல்லது காயத்ரி-
அதுவுமில்லையேல்
இன்னொரு பெயர்.
