Skip to content

S.ஜானகி


மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்

சின்ன வயதில் ரேவதி தான் இந்த வரிகளைப் பாடுகிறார் என்று நம்பினேன். ரேவதியின் பாடும் குரலாகத் தான் ஜானகியின் குரலை உள்வாங்கினேன். பிறிதொரு நாள் எஸ்.ஜானகியின் முகத்தை எதோவொரு பத்திரிகை பேட்டியில் காண நேர்ந்த போது அந்தக் குரலினின்றும் ரேவதி நீக்கம் செய்து கொள்வதற்கு நீண்ட காலமாயிற்று.
முகங்கள் மாறிக்கொண்டே இருக்கக் கூடிய திரைநதியில் மாறாமலராகப் பெருங்காலம் வலம் வந்த குரல் மேதை எஸ்.ஜானகி. தியானங்களுக்கு நிகரான பல பாடல்களைத் தந்த மாபெரும் இந்தியப் பாடகி அவர்.

ஜானகியின் குரலைத் தவிர்க்கவே முடியாது. ஒரு நாளின் எதாவதொரு தருணத்தில் ஜானகியின் குரலில் எதாவதொரு வரி அதன் சில வார்த்தைகள் தம்மை முணுமுணுக்கச் செய்து கொண்டே அந்த தினத்தினுள் தம்மை நுழைத்துக் கொள்ளும் வல்லமை மிகுந்தவை.

ஒவ்வொரு தமிழ் நாளுக்கும் ஒரு ஆண்குரல் இருக்குமானால் அது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலாகவும் பெண்குரல் எஸ்.ஜானகியின் குரலாகவும் தான் இருக்க முடியும். அப்படித் தான் இருந்து வந்து கொண்டிருக்கிறது எல்லா நாட்களும்.

ஐஸ்க்ரீமுக்குப் பக்கத்தில் சாக்லேட்டை இருத்தினாற் போல் பாலுவும் ஜானுவும் பாடிய பல பாடல்கள் இளமை மாறாதவை. சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே என்ற பாடல் ஒரு உதாரணம். அந்தப் பாடலைப் பலரும் போலச் செய்து மேடைகளில் பாடுவதைக் காண முடியும். ஆனாலும் அட்சரம் பிசகாமல் அந்த இரண்டு சிரிப்புக்களையும் யாராலும் பிரதி செய்யவே முடியாது.

காதல் கொஞ்சும் பல பாடல்கள் ஜானகியின் தனி நபர் சாதனைகளாகவே எஞ்சவல்லவை. சில்க் ஸ்மிதாவுக்குப் புகழ் சேர்த்த பல பாடல்களும் ஜானகி பாடித் தந்தவை என்பது அழகிய முரண்.

குழந்தமை மாறாமல் கடைசி வரைக்கும் இருப்பதெல்லாம் கடவுள் மறந்து அளித்துவிட்ட வரமாகத் தான் இருக்க முடியும். ஜானகியின் குரல் ஷாம்லிக்கும் சுஜிதாவுக்கும் இன்னபிற குழந்தைகளுக்கும் அப்படியே பொருத்தமானதெல்லாம் திரை கண்ட வரங்கள் அன்றி வேறேது..?

எந்த மொழியைப் புழங்கினாலும் அதைத் தன் தாய்மொழியாகவே புழங்கி விடுகிற ஆற்றல் அந்தத் தாய்க்கு மட்டும் வாய்த்தது வரலாற்றுச் சாகசம். இது யார் பாடியது என்று தேடத் தோன்றாத அளவுக்குத் தனியே நின்று ஒலித்தது ஜானகியின் குரல். தென் திசைக்கு ஒரே ஒரு ஜானகி போதும் என்று முடிவு செய்த இறைவன் வடக்கே லதா ஆஷா என்று இருவரைத் தந்து திசை சமன் செய்தான். லதாவும் ஆஷாவும் தெற்கே தந்ததை விடவும் வடக்கே ஜானகி அதிகம் அளித்தார்.

வயதும் முதுமையும் எதாவதொரு புள்ளியில் குரலை உடைக்கும் அல்லது கரைக்கும். இந்தக் காலவேட்டைக்குத் தப்பிய குரல் மான்கள் வெகு சிலவே. அந்த வரிசையிலும் பாலுவும் ஜானுவும் சேர்ந்து இடம்பெறுவதும் அவர்கள் இருவரின் மனமார்ந்த கொடுப்பினை தான்.ஜானகி தன் குண வார்ப்புக்காகவும்  போற்றப் பட்ட மேதமையாய்த் திகழ்ந்தார்.

ஜானகியினுடையது தனிமையைத் துல்லியம் செய்த குரல். தனிப்பாடல்களின் சக்கரவர்த்தினி எஸ்.ஜானகி தான். டூயட் பாடல்களில் யாரோடு சேர்ந்து பாடினாலும் அவர்களது தனித்துவத்தை ஆதிக்கம் செய்து விடாமல்/ அளவு மீறாமல் பார்த்துக் கொண்டது ஜானகியின் ஸ்பெஷாலிட்டி. அவரோடு பாடிய பாடல்கள் தான் பல பாடகர்களின் பெஸ்ட் காம்போக்களாக இன்றும் நிலைப்பவை.

எஸ் ஜானகியின் குரலுக்கு மரணமே இல்லை.

பாடல்களில் வாழ்வார்.