Skip to content

“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

1.
அந்த ஊரைச் சேர்ந்த யாராவது
எங்களூருக்கு வந்ததுண்டா
எனக் கேட்கையில் எல்லாம்
ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே
சொல்வது வழக்கம்.
உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத
தீராக்கடன் நினைவின் மனப்பாழ்
போலச்
சொல்லியிராத ஒரு கதை
2.
பிறழ் எண் தந்தூக்கிய புதிர்நட்பு நாயகி
நெடுங்காலம் பேசிக்கழித்த பின்
சம்போகத்துக்காக ஒரு நாள் வரச்சொன்னனள்.
வெகுமுன்னரே சுகித்தலின் வெம்மையில்
உடல் காற்றினூடே கொப்பளித்தவண்ணமிருந்தது.
விலங்கிடப் பட்ட கைதியினுடையது போலிருந்தது
அவ்வூருக்கான பயணம்.
3.
பேருந்து நிலையத்தில் இறங்கியதும்
எந்தெந்த வழிகளில் எப்புறங்கள் திரும்பவேண்டும்
என்பதுகளடங்கிய முழுவிபரமும்
பல முறை பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன்.
இட வலக் குழப்பம் நேர்கிற
சிற்சில திருப்பங்களை
எளிதான உபகுறிப்புக்களின் மூலம் தெளிவுபடுத்தி இருந்தாள்.
அவள் சொன்ன அத்தனையும் சத்தியம்
என்றாற் போல் என் கால்கள்
அவள் வீடிருக்கும் தெருவரைக்கும் எனைச் சேர்ப்பித்தன.
4
அவ்விடம் சேர்ந்த பின்னரே
அவளது செல்பேசியை அழைக்கச் சொல்லியிருந்தனள்.
எண்ணை திரையிலிட்டழைக்கையில்
அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக
என் செல்பேசியில் வேறெவளோ சொன்னாள்.
தெருவினை நிமிர்ந்து பார்க்கிறேன்.
ஒரு மதியத்துக்குச் சற்றும் பொருத்தமின்றிப் பெருங்கூட்டம்
மெல்ல அந்தத் தெருவுக்குள் நகர்த்தப்படுகிறேன்.
5.
அவள் சொன்ன வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு துஷ்டி.
சோகவுருவாய்ப் பெண்கள் உள்ளேயிருக்க
கார்யங்களை ஆடவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் முன் நின்றேன்.
இறந்தவரின் மகனாயிருக்க வேண்டும்.
எனக்கு முன் வந்து சேர்ந்திருந்த ஒருவரிடம்
தங்களை எல்லாம் ஏமாற்றி விட்டுத்
தந்தை போய்ச்சேர்ந்து விட்டதைப்
பெருங்குரலழுகையினூடே சொன்னார்.
6.
இறந்தவரின் பெயர்-படம் தாங்கிய பதாகைகளை
தென்பட்ட இடங்களிலெல்லாம்
ஒட்டிக்கொண்டிருந்தனர்.
தன் வெம்மையான கரங்களால்
என் கரத்தைப் பற்றிக் குலுக்கி வரவேற்றார்
இறந்தவரின் மகன்.
எந்தவழியிலாவது
தன் தந்தைக்கு வேண்டியவராய்த் தான்
நான் இருக்கவேண்டும்
என்று நினைத்திருக்கக் கூடும்.
7.
பற்றிய கரத்துடனே வீட்டினுள்ளே அழைத்துச் செல்லப்படுகிறேன்
இறந்தவரின் பிணத்தைத் தாங்கிய
கண்ணாடிப் பெட்டியின் முன் நிற்கிறேன்.
ஒரு கணத்தில் பாதி வெடித்துச் சிதற
என் கள்ளவருகையைக் காட்டிக் கொடுக்கும் சொற்களுடன்
அந்தப் பெரியமனிதன்
பெட்டியை உடைத்து எழுந்துகொள்கிறான்.
8.
மெல்ல வெளியேறி அந்த தெருவினின்றும்
விலகிப் போகிறேன்.
கிளம்பியவண்ணமிருந்த
எங்களூர்ப் பேருந்தில் ஓடிச்சென்றேறி
இல்லாத ஓரிடத்தைச்
சுற்றி நிற்கும் அத்தனை பாதங்களையும்
இறைஞ்சினபடியே சாய்ந்து கொள்கிறேன்.
இன்னும் 27 கிலோமீட்டர்கள் இருப்பதாய்
நெடுஞ்சாலைக் கல் தெரிவித்தபோது
SORRY என்றொரு
குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது