Skip to content

தேன்மழைச்சாரல் 8


   தேன்மழைச்சாரல் 8

                        தண்ணிலவுக்காதல்


குள்ளஞ்சாவடி தனபால் சந்தானம் 16.08.1917 ஆம் நாள் பிறந்த சந்தானத்தின் இயற்பெயர் முத்துக்கிருஷ்ணன். தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய புலமை கொண்டிருந்த இவரது தாய்மொழி தெலுங்கு. நடிகராகவும் கவிஞராகவும் அறியப்பட்ட சந்தானம் எழுதிய பல பாடல்கள் எல்லாக் காலத்துக்குமானவை. தன் உயிரிலிருந்து சொற்களை எடுத்து எழுதுகிறாற் போல் பாட்டெழுதுவதாக சந்தானத்தின் தமிழமுதை வியந்து பாராட்டியவர் பலர். நாடக நடிகராகத் தன் கலைவாழ்வைத் தொடங்கிய சந்தானத்தின் சம கால சகாக்களில் எம்.ஆர்.ராதா டி.எஸ்.பாலையா எஸ்.வி.சகஸ்ரநாமம் எம்.கே.ரதா எம்.என்.ராஜம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்த சிலராவர். பியு சின்னப்பா நடித்தளித்த பிருத்விராஜன் படத்தில் நல்லதோர் வேடம் ஏற்றார் சந்தானம்.

K.D.Santhanam | Antru Kanda Mugamமாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான சதி சுகன்யா படத்தின் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரிக்கு கணவராக நடித்தார் சந்தானம். இப்படி நடிகராக ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும் போது தான் எதிர்பாராத வகையில் ப.நீலகண்டனின் பரிந்துரையின் பேரில் ஏ.வி.மெய்யப்பன் சந்தானத்துக்குத் தான் எடுத்துக் கொண்டிருந்த வேதாள உலகம் படத்தில் பாட்டெழுத ஒரு வாய்ப்பை நல்கினார். அந்தப் படத்தின் நாயகன் டி.ஆர்.மகாலிங்கம். மதனாங்க சுந்தர மனமோகனன் என்ற அந்தப் பாடலைப் பார்த்து விட்டு மெய்யப்பன் மகிழ்ந்து போய் அனைத்துப் பாடல்களையும் நீரே எழுதுக என்று வாய்ப்பளித்தாராம். அந்தப் படத்தில் சந்தானம் எழுதிய பாடல்கள் 18. தொடர்ந்து ஏவி.எம்மின் ஆஸ்தானப் பாடலாசிரியராகவே மாறினார். ஏவி.எம் நிறுவனத்தைப் போலவே ஜூபிடர் பிக்சர்ஸிலும் பல படங்களுக்குப் பாட்டெழுதிய சந்தானம் அவ்வப்போது நடிகாவதாரமும் எடுத்தார். டி.ஆர் மகாலிங்கம் தயாரித்து இயக்கிய சின்னதுரை படத்துக்கு வசனம் சந்தானம் தான். நடிகர் திலகத்துக்கு வாயசைப்பு வசனத் திறன் இவற்றையெல்லாம் கற்பித்தவர்களில் சந்தானம் தலையாயவர் என்றறியப்படுகிறது.

மனதிலிருந்து தன் பாடல்களை உருக்கொடுத்தவர் சந்தானம். எளிமையும் புதுமையுமான வார்த்தைகள் வந்து விழுவது அபாரமான அவரது கற்பனைத் திறனுக்குச் சான்று. எல்லாச்சூழல்களுக்கும் அயராமல் பாட்டெழுதி அடுத்தவரை அயர்த்தியவர் இவர். ஆன்மீகப் பாடல்களுக்கென்று சந்தானத்துக்குத் தனிப் புகழ்க்கொடி பறக்கும் அளவுக்கு அதிலும் வெற்றிபல பெற்று ஒளிர்ந்தவர். பிறவாத வரம் வேண்டும் ஆண்டவன் தரிசனமே போன்ற பாடல்கள் என்னாளும் சந்தானத்தின் பேர் சொல்லிக் காற்றில் தவழ்பவை. சந்தானத்தின் புகழுக்கு ஒளியேற்றும் விருதுகளில் கலைமாமணி கலைச்செல்வம் போன்றவையும் உண்டு. 2001 ஆம் ஆண்டில் நவம்பர் 22 ஆம் நாள் தனது எண்பத்து நான்காவது வயதில் இயற்கை எய்தினார். சந்தானம் எழுதிய பல பாடல்கள் மின்னி மிளிர்பவை. அவற்றிலிருந்து மாதிரிக்கு இங்கே ஒன்று.

மோகன சுந்தரம் படத்தில் சந்தானம் எழுத்தில் ஜேபி சந்திரபாபு ஜிக்கி இணைந்து பாடிய பாடல் கேட்க இனித்திடும் கானம் சந்தானத்தின் ஆங்கில மேதமையை எடுத்து வைக்கும் பாங்கே தனி.

இன்பம் கொஞ்சும் வேளை மனம்
இன்பம் கொஞ்சம் வேளை மலர்
எழில் மேவும் சோலை
தென்றல் வீசும் நேரமே
தேன் மலர் வாசமே
செண்பக பூவில் வண்டு
பாடும் உல்லாசமே
என்று ஜிக்கி அழகுத் தமிழில் படுகிறார்.
அதற்கு சந்திரபாபு பாடுவது லவ்வாங்கிலம்
ஹெல்லோ மை டியர் டார்லிங்
ஹெல்லோ மை ரோஸ் சார்மிங்
உன்னை எதிர்பார்த்தே மை ஐஸே சபரிங்
நீ இல்லாமல் என் லவ்வே போரிங்
கமான் மைலவ் கமான் மைடவ்
டோண்ட் லீவ்மீ நவ்…ப்ளீஸ் டோண்ட் லீவ் மீ நவ்..
ஐம் யுவர் ஹஸ்பண்ட் யூ ஆர் மை ஒய்ப் திஸ்
இஸ் தி ஹேப்பி லைப் திஸ் இஸ் தி ஹேப்பி லைப்

என்று வரும்

எப்போதும் நின்றொலிக்கும் தண்ணிலவுக் காதல் கானமது. நிகரிலி நடிகர் சந்திரபாபுவுக்கும் சந்தானத்துக்குமான பந்தம் அளப்பரியது. இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும் விளங்கியவர்கள். சந்தானம் எழுதி பாபு பாடிய பல பாடல்கள் காலம்வென்றவை. ஒண்ணுமே புரியலை உலகத்திலே (குமார ராஜா) போடா ராஜா பொடி நடையா(சின்னதுரை) ஜாலி லைஃப் ஜாலி லைஃப் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (மணமகன் தேவை) போன்றவை அவற்றில் சில. கட்டுப்படி ஆகல்லே காதல் தரும் வேதனே என்று சந்திரபாபு பாடியதைக் காலம் என்னாளும் மறக்கத் தயாராக இல்லை.

On TG Lingappa and his musical legacy in Kannada cinema - The Hinduதங்கமலை ரகசியம் படத்தில் அமுதைப் பொழியும் நிலவே என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே எல்லாரும் இன்னாட்டு மன்னர் சித்திரம் பேசுதடி சபாஷ் மீனா போன்ற பாடல்களை மறக்க முடியுமா..?மோகன சுந்தரம் படத்தின் மேற்காணும் பாடல் உள்ளிட்ட இவற்றுக்கெல்லாம் இசையமைத்தவர் டிஜி லிங்கப்பா என்றழைக்கப்படுகிற திருச்சி கோவிந்தராஜூலு லிங்கப்பா. அவரது தந்தை ஒரு இசைமேதை. கன்னடத்தில் முக்கியமான இசையமைப்பாளராக நாற்பது வருடகாலம் விளங்கிய லிங்கப்பா தமிழிலும் குறிப்பிடத் தக்க படங்களுக்கு இசையமைத்துப் பெருமை கொண்டவர். முதல் தேதி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தேடி வந்த செல்வம் ஸ்கூல் மாஸ்டர் போன்றவையும் அவற்றுள் அடக்கம். நிர்ப்பந்தங்களற்ற நல்லிசையைத் தன் பாடல்களெங்கும் படர்த்தியவர் லிங்கப்பா. நிதானித்தொலிக்கும் மெல்லிசைப் பாடல்களைப் போலவே வேகம் பொங்கும் விரைவிசைப் பாட்டுக்களிலும் மிளிர்ந்தவர். சில பாடல்களைப் பாடவும் செய்திருக்கிறார். தன் 72 ஆம் வயதில் 2000ஆவது ஆண்டில் காலம்சேர்ந்தார் லிங்கப்பா.

வாழ்க இசை