சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ்
தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன்


சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero  நடிப்பை நல்லவ நிஜம் என நம்புகிற மனது, கெட்டவ நடிப்பு என வில்லன்களை மன்னிப்பதில்லை. இதில் உச்ச நட்சத்திரங்களுக்கான வில்லன்கள் கிட்டத்தட்ட தயாரிக்கப்படுகிறார்கள் என்பது நிஜம். ‘மூக்கு இப்டி இருக்கணும், கண்ணு இப்டி இருக்கணும், நானே பயப்படணும், குண்டா இருக்கணும், ஒயரமா இருக்கணும்’ என எக்கச்சக்க ரெசிப்பிகளுடன் ‘கூட்டிட்டு போய் குக் பண்ணி நேரா ஷூட்டிங் கூட்டிட்டு வாங்க’ என்றுதான் டீல் செய்வார்கள். வெளியே டெரர் காட்டினாலும் கூட உள்ளே கோழி நடனம் ஆடிக்கொண்டுதான் வில்லன்கள் உருவாகிறார்கள். இதில், முதல் படமே கமலுக்கு எதிராக என்றால் வில்ல உத்தமன் அல்லவா? வரவேண்டியவனாகிறார். அப்படித்தான் வந்தார் சலீம் கௌஸ். ஜிந்…தா.

ஆங்கிலப் படத்துக்கு நிகரான (என்ன கண்றாவி கம்பேரிசனோ இது? ஆங்கிலத்திலேயே அறுபது எழுபது வகைமைப் படங்கள் உண்டு. மொட்டை ரம்பங்களும் அதில் அடக்கம்) தமிழில் எடுக்கப்பட்ட விஸ்கித்தனமான விறுவிறு படங்களில் முக்கியமான ஒன்று வெற்றி விழா. சிவாஜியார் கண்ணீரும் புன்னகையும் சொரிந்து ஈட்டிய கைப்பொருள் இட்டெடுத்த நற்படம் இது (சாரோட சொந்தப் படம்).

Vettri Vizhaa - Wikipedia

பிரதாப் போத்தன் தான் தனக்கு வழங்கப்பட்ட  முழிமுழி லவ்ஸ் கேரக்டர்கள் போல எதையும் படைக்காமல் மொத்தக் கதையையும் கச்சித அற்புதமாக வடித்திருப்பார். பட ஆரம்பத்திலேயே ‘யார் அந்த ஜிந்தா’ என்றுதான் ஓப்பன் ஆகும். எழுபது நாடுகளில் தேடுகிறார்கள் என்றெல்லாம் பஜ்ஜி பண்ணிவிட்டு அவரைப் பிடிக்க ராதாரவியை அப்பாயிண்டு செய்வார்கள். சுற்றிலும் டூப்ளி போலீஸை வைத்துக் கொண்டு, என் கெரகம் என்று அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவார் ராதாரவி. தன் இன்னுயிரை அந்த ப்ராஜெக்டில் இழந்து ஃபெயிலாவார் ராதாரவி. பட், அதே ஆப்பரேஷனில், கதாநாயகர்களான கமலஹாசரும், பிரபுவும் ஜிந்தா வைத்த மாபெரும் வெடிகுண்டில், சிவப்பு பச்சை வயர்களில், சிவப்பு வயரை கமலர் துண்டிக்கும்போது படத்தின் ப்ரொட்யூசர் மகனும் இளையதிலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவரும் ஆகிய பிரபு அவர்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு, கைகளால் காதுகளைப் பொத்திக் கொள்ளுவார். அந்த சீனைப் பார்க்கும்போதுதான் அந்த பாம் வெடித்திருக்க வேண்டும் என்று அவர்கள் இருவரையும் அன்ஃப்ரெண்டு பண்ணிவிட்டு லவ் யூ ஜிந்தா என அவர் மீது மாறாத பற்றுதல் எனக்கு உருவாகியது. சீரியஸாகவே, மேற்கண்ட ஒரு சீன் தவிர்த்து, வெற்றி விழா படம் என்றால் எனக்கு ஏக இஷ்டம்.

ஜோக்ஸ் அபார்ட், சலீம் கௌஸ், இல்லை இல்லை, ஜிந்தா. வெற்றி விழா படமே ஜிந்தாவின் கம்பீரமும், வெற்றிவேல் மற்றும் விஜய் ஆகியோரின் ஓட்டமுமாகக் கடைசிவரை ஒரு ஜிந்தா போற்றிப் படமாகவேதான் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், ஒரு வில்லன் கொடூரமானவன், கெடுமதியன், அஞ்சாதவன், அடங்காதவன், என்பதிலெல்லாம் நாளும் வித்தியாசங்களை யோசித்துக் கொண்டே, எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென படமெடுக்கிற சார்வாள்ஸ்க்கும், பார்க்கிற ரசிகாஸ்க்கும் ஒருங்கே புரியாமல் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், தோற்றம், ஆளுமை, மௌனம், நடை, உடை, பாவனை, குரல் என எல்லாவற்றிலும் அல்லது இயன்றவற்றிலெல்லாம் விலகித் தனித்து உயர்ந்து ஓங்குவதென்பது, ஒவ்வொரு பாத்திரமேந்திக்கும், குறிப்பாக, எதிர்நாயகன் எனப்படுகிற வில்லனுக்கும் அவசியமாகிறது.

30 Years of Kamal Haasan's Vetri Vizha: A whiff of nostalgic trivia, unseen working stills, and rare- Cinema express
தமிழ் சினிமா சரித்திரத்தில் அழகிய அசுரர்கள் என என் ப்ரியப் பட்டியலில், எம்.ஆர்.ராதா, ரகுவரன், இருவருக்குப் பிறகு மூன்றாவதாக நான் எழுதியிருக்கும் பெயர் சலீம் கௌஸ். கனவான் என்றொரு சொல் நாளும் கதைகளில் அதுகாறும் படித்திருந்தது. அதன் ஞாபகப் பதியனாக ஜிந்தாவைச் சொல்கிறேன். ஜிந்தா ஒரு கனவான். பயங்கரச் செயல்களைத் திட்டமிட்டுத் தலைமையேற்று நடத்திக் கொள்ளுபவன். தன் கூட்டத்தின் தலைவன். தன் நபர்களால் தொழப்படுபவன். இந்தத் திரைப்படத்தில் பல அழகிய சதுக்கங்கள் சலீமுக்கு அமைந்தது தற்செயல் வரம். தன் உடனிருப்பவர்கள் புரிந்து கொள்ளுவதற்காக, மத்திமக் குரலில் தன் கருத்துகளை வெளியில் சொல்வான் ஜிந்தா.

ஸ்டீபன்ராஜ் என்பவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் ஏற்படுகிற வெறுப்பை உமிழ்கையில்

ஜிந்தா: யாரந்த ஸ்டீபன்ராஜ்..?
தெரியலை சார்
ஜிந்தா:எங்கேருந்து வந்தவன்?
தெரியலை சார்..?
ஜிந்தா:இப்ப எங்கே இருப்பான் எப்டி இருப்பான் ஆங்க்..?
தெரியாது சார் தெரியாது சார்..
ஜிந்தா: (சிரித்துவிட்டு) ஜெண்டில்மன்.,அதாவது…கனவான்களே…
நான் என்னைப் பத்தி சொல்ல விரும்புறேன்.ஐம் எ ஸ்போர்ட்ஸ் மேன்.
எனக்கு விளையாடப் பிடிக்கும் விளையாட ரொம்பப் பிடிக்கும் எல்லாரும் விளையாடணும் எல்லாத்துலயும் விளையாடணும்
விளையாட்ல தோத்தவனை எனக்குப் பிடிக்கும்.விளையாட்ல ஜெயிச்சவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஆனா விளையாட்டை வெறுமனே பார்த்தவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.ஏன்னா அவனொரு உப்புசப்பில்லாத ஜாதி உயிரல்லாத ஜடம்.அப்படிப் பட்ட ஜடம் நம்ம கூட இருக்கவே கூடாது
இந்த ரெண்டு பேரும் தண்டத்துக்கு சுத்திட்டு முண்டமா வந்து நிக்குறாங்க..
என் சீட்டுக்கட்டுல ரெண்டு ஜோக்கர்ஸ்..மை ஜோக்கர்ஸ்…

ஹஹஹஹ
எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது
மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

 

என்றவாறே அந்த இருவரையும் சுட்டுக் கொல்வதுடன் அந்தக் காட்சி உறைந்தேறும்.

Salim Ghouse | Kill The Black Sheep!! - YouTube

இந்தத் திரைக்கதையின் அபாரம் ஒரு வழக்கக் கதையின் எல்லா திருப்பங்களையும் அப்படியே வைத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை மட்டும் மாற்றிக் கொண்டது. பகையாளிக் குடும்பத்தை உறவாடிக் கெடு என்றாற்போல், வில்லன் ஜிந்தாவை, அவனைவிட சீக்கிரத்தில் பிரபலமாக உருக்கொண்ட, புனையப்பட்ட ஸ்டீஃபன்ராஜ் என்கிற கதாபாத்திரம், அவனைப் பிடிக்க முனைவதும் அதில் தன் மனைவியைப் பலி கொடுப்பதும், நினைவு தப்புவதும் பிறகு நினைவு பெறுவதும், பிற்பாடு கடைசியில் வில்லனைக் கொல்லல், சுபம் என்று போய் முடியும்.

சலீம் கௌஸ் என்கிற ஜிந்தா, கமல்ஹாசன் என்கிற வெற்றிவேல் என்கிற ஸ்டீஃபன்ராஜை நம்பி, விரும்பி, நெருங்கி, நட்புக் கொண்டு அனுமதித்து, ஒரு கட்டத்தில் ஏமாந்து, அழிக்க முனைந்து பின் அழியும். சலீம் கௌஸ் என்கிற, தன்னை நிகழ்த்திய நடிகன், ஸ்டீஃபன்ராஜைப் பார்த்து சமரசம் பேசும் காட்சி, இன்னொரு மேற்கத்திய ஸ்டைலிஷ் கவிதை. யூகிக்க முடியாத இளையராஜாவின் இசையும், அசோக் குமாரின் ஒளிப்பதிவும், அந்தக் காட்சியைப் பிரமாதப் படுத்தியிருக்கும்.உறுமும் புலியும் தன்னைச் சுற்றிலும் தன் ஆட்களுமாக ஸ்டீஃபனை வரவேற்பார் ஜிந்தா.

ஜிந்தா: ஸ்டீபன் ராஜ்…சோ யூ ஆர் ஸ்டீபன்ராஜ்.
ஸ்டீஃபன்:மிருகம்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமா.?
ஜிந்தா: அதுனால தான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு
ஸ்டீஃபன்:குட்ஜோக்.பட் சிரிக்கணும்னு தோணலை.
என்னை எதுக்கு வரச்சொன்னே..?
ஜிந்தா: பிஸ்னஸ் பேச ஸ்டீஃபன்ராஜ் பிஸ்னஸ் பேச உனக்கு என்ன வேணும்.?
ஸ்டீஃபன்:எதையும் கேட்டு வாங்குற பழக்கமில்லை
ஜிந்தா:கேக்காம வாங்குறது நான் உயிரை மட்டும் தான்.
அதான் நாலஞ்சு பேரை நிறுத்தி வச்சிருக்கியே.எதாச்சும் பூச்சாண்டி காட்டணும்னா காட்டிடுமி.நான் போகணும்
இந்த இடத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பார் ஜிந்தா.ஹஹஹஹ ஹஹஹ ஹஹ ஹ என்று.சுழன்றேறும் மாடிப்படிகளைப் போல அப்படி ஒரு சிரிப்புக்குப் பின்னால்
ஜிந்தா: ஸ்டீஃபன்ராஜ்…மை டியர் ஸ்டீஃபன்ராஜ் டூ யூ நோ ஒரு ராஜ்ஜியத்துக்கு ஒரு ராஜா ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவன் ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி.நான் நிஜம் ஸ்டீஃபன்ராஜ்.நீ நிழல்..இந்த மாதிரி விளையாட்டுக்கு ஒரே ஒரு ஜிந்தா மட்டுந்தான்.ஹூம்..சுற்றித் தன் ஆட்கள் அத்தனை பேரையும் பார்த்து மௌனமாய் ஆமோதித்தபடி .ஸ்டே அவ்ட் ஆஃப் மை வே..
அவ்ளோ தானே இதைச் சொல்லத் தானே கூப்டனுப்ச்சே வேற ஒண்ணும் இல்லையே..?
செய்தி இல்லை ஸ்டீஃபன்ராஜ் கட்டளை…
இருவரும் நெடிய சிரிப்புக்குப் பின்
ஃபன்ஸ்கூல்.ம்…மௌண்ட் ரோட்ல குழந்தைகளுக்காக ஒரு பொம்மைக்கடை இருக்கு.சின்னப்பசங்க வெளையாட நெறைய்ய பொம்மைங்க இருக்கும்.வாங்கி வச்சி வெளையாடு.
(எழுந்துகொள்ள)
கோபமாகும் ஜிந்தா
சிட் டவ்ன் ஸ்டீஃபன் ராஜ் சிட் டவ்ன்..முன்னாலிருக்கும் பாத்திரத்தை சுட்டியபடி மேனர்ஸ் ஸ்டீஃபன்ராஜ் மேனர்ஸ்…என்றவாறே நீ இங்க ஆயுதமில்லாம வந்து மாட்டிட்டிருக்க…சல்லடையாக்கிருவேன் யூ ஜோக்கர் என்று கொக்கரிக்கும் ஜிந்தா கொண்டுவந்து வைக்கப்பட்டப் பதார்த்த பாத்திரத்திலிருந்து, சட்டென்று துப்பாக்கியை எடுத்துத் தன் நெற்றிக்கு முன்னால் ஸ்டீஃபன்ராஜ் நீட்டி  “எல்லா இடத்துலயும் காசுக்காக வேல பாக்கற ஒருத்தன் இருப்பான்” என்று ஸ்டீபன் சொல்லுகையில் “நீ நல்லாவே விளையாடறே,ஸ்டீஃபன்ராஜ்  நீ ஆட்றது எனக்குப் பிடிச்சிருக்கு ஐ லைக் யூ”

என்பதோடு முடியும் அந்தக் காட்சி. அதன்பின் தான் இருவரும் ஒட்டுவார்கள் உறவாடுவார்கள். ஒரு கட்டத்தில், தனது குழுவில் ஒரு கருப்பு ஆடு இருப்பதாகக் காவல் துறையில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு ஜிந்தாவிடம் காட்டிக் கொடுக்கும். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே ஸ்டீஃபன்ராஜின் நிஜமான வெற்றிவேலின் மனைவி சுசிலாவின் மோதிரத்தை ஸ்டீஃபன்ராஜின் கையில் தருவார் ஜிந்தா. அதாவது, தன்னோடு கலந்தது, நெருங்கியது ஒரு காவல் அதிகாரி என்பதும், உளவும் களவுமாய்த் தன்னோடு பழகியிருக்கிறான் என்பதும், தன்னைப் பிடித்து, அழித்துவிடுவதற்கான திட்டமிடுதலே அவன் வருகை என்பதெல்லாமும் தெரிந்துவிட்ட பிற்பாடும், ஒரே ஒரு கணம் அந்த மோதிரத்தைக் கையில் இட்டுவிட்டு  “ஸ்டீஃபன்ராஜ்…உன் ப்ளேட்ல இருக்கிற மோதிரம் ஒரு அழகான பொண்ணோட விரலுக்குச் சொந்தமானது.இதைப் போட்டவன் ஒரு துரோகி”

என்பதோடு முடியாது இந்தக் காட்சி.இந்த இடம்தான் சலீம் கௌஸ் என்கிற ஜிந்தாவின் பேரெழுச்சி. “ஏண்டா நாயே, துரோகி, நம்பிக்கை துரோகி, உளவு பாக்க வந்த களாவாணி” என்றெல்லாம் எவ்வளவு வைதிருக்கலாம், நையப் புடைத்திருக்கலாம்? லேசாய் உதடோரம் தவழும் கேலிப் புன்னகையோடு, சற்றே குறைந்த தொனியில், “மைடியர் ஸ்டீஃபன்ராஜ் நீயுமா..?” என்பார்.

ஆண்டனியின் “யூ டூ ப்ரூட்டஸை” அதன் அட்வர்ஸ் ஆக நோக்குகையில், துரியோதனனுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட கர்ண பிம்பங்களுக்கு மாற்றாகக் கூனிக் குறுகிக் கரைந்து சிதறும் நாயகபிம்பம் வெற்றிவேலைப் பார்த்து, கவனிக்கவும் – ஸ்டீஃபன்ராஜை அல்ல – வெற்றிவேலைப் பார்த்து, ஜிந்தா, “யூ ஜோக்கர்” என்பதோடு தூள் தூளாகிச் சிதைந்தழியும்.

வெற்றிவிழா படத்தில் ஜிந்தாவின் வருகைக்கு முன் பின்னாய் அந்தப் படம் இரண்டால் வகுபடும்.அவர் வந்தபின் அவருக்கானதாக மாறும்.சலீமின் குரல் சந்திரபாபுவின் ஆளுமை மிகுந்த அதே குரலின் கம்பீர அருகாமையில் இன்னொரு குரலாய் முன்னெழும்.சந்திரபாபுவின் பகடி செய்தபடி தனிக்கும் அதே குரலின் நீட்சியாக இருக்குமோ என்கிற அளவில் முழுப்படத்தின் வசனங்களையும் பேசினார் சலீம் கவுஸ்.மேற்கத்திய மனோபாவத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட குரலும் நடை உடை பாவனைகளும் கொண்டவர் சந்திரபாபு.வார்த்தைகளை இரட்டிக்கிறதாகட்டும் ஆங்கிலத்தைத் துல்லிய வெட்டுடன் உச்சரிப்பதாக இருக்கட்டும் ஜிந்தா என்று இரண்டாக வகுத்து இடைவெளி உருவாக்குவதாக இருக்கட்டும்…யூ ஜோக்கர் என்று பகடி செய்வதிலாகட்டும் சந்திரபாபுவின் பரிமளிப்பை சலீமுக்கு முன்பும் பின்னரும் அத்தனை நெருக்கமாக அவரை ஒட்டித் தன் ஆளுமையைப் பிரதிபலித்த இன்னொரு நடிகரின் வருகை இந்தியமொழிகளில் நிகழவே இல்லை.

கார்த்திக்குடன் சீமான் அஜீத்துடன் ரெட் விஜய்யுடன் வேட்டைக்காரன் சரத்குமாருடன் சாணக்யா ஜெயம் ரவியுடன் தாஸ் சத்யராஜூடன் மகுடம் மற்றும் விஜய்காந்துடன் சின்னக் கவுண்டர் பிரபுவுடன் தர்மசீலன் ஆகிய படங்களில் நடித்த சலீம் கவுஸ் அடிப்படையில் நடிப்பின் மீது தாகம் குன்றாத பறவை.ஆயிரம் கோடி பணத்தைத் தேடி அலையும் விக்ரம் எனும் கதாபாத்திரமாக திருடா திருடாவில் சலீம் கவ்ஸ் மிளிர்ந்தார்.

சலீம் கவ்ஸ் நடித்ததில் என்னை பெரிதும் பாதித்த இன்னுமோர் படம் தாழ்வாரம்.பரதன் எழுதி இயக்கிய இந்தப் படம் முழுவதுமே மோகன் லால் மற்றும் சலீம் இருவருக்கும் இடையிலான உடன் முரண் விலக்கங்களைக் கொண்டே நகரும்.மனித மனதின் பேராசை துரோகம் தீமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒருவனின் பாதகம் ஆகியவற்றை எல்லாம் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிற ராஜூ மற்றும் ராகவன் ஆகிய இரு பேர்களில் வாழ நேரும் ஒரு துரோகபாத்திரமாக சலீம் கவ்ஸ் அத்தனை இயல்பாக வாழ்ந்திருப்பார்.மோகன்லாலுடனான பந்தயமற்ற பந்தயமான இந்தப் பாத்திரத்தில் சலீம் தன் புன்னகையாலும் முகபாவனைகளாலும் அசத்தினார் என்பதே மெய்.சலீமுக்காகவே பார்த்த படம் தாழ்வாரம்

Theatre list Thaazhvaaram Malayalam Movie - 1990 Story, Ca
நடிப்பென்பது நிகழ்த்துகலை.அறிவியல் வசதி தான் அதனைத் திரைப்படமாக்குவது.இன்னமும் நிகழ்த்துகலையான நாடகத்தின் பால் தங்கள் உடல் பொருள் ஆவி அத்தனையையும் சமர்ப்பித்துவிட்டு வாழ்வெலாம் இருளுக்கும் ஒளிக்கும் நடுவாந்திர நட்சத்திரத்தின் ஒளிவருகையை நோக்கிக் காத்திருக்கிற சன்னதமனசு கொண்ட கலைப்பித்தர்கள் எத்தனை ஆயிரம் பேர்..?அந்த வகையில் நடிகர் என்பவர் நடிப்பதில்லை.நிகழ்த்துகிறார்.சலீம் கவுஸ் கலையின் அரிய வருகை.