மகிழ்தலுக்கான போராட்டம்

மகிழ்தலுக்கான போராட்டம்


சாரு நிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா நூலை அதன் வெளியீட்டுக்கு முன்பாக வாசிக்கிற வாய்ப்பு உருவானது மிகவும் தற்செயலாகத் தான்.அந்தப் புத்தக உருவாக்கத்துக்குப் பின்னாலும் அடிக்கடி பேசுகிற வாய்ப்பு தொடர்ந்து எற்பட்டது. இன்றைக்கு மாலை நடிகர் சலீம் கௌஸ் காலமான செய்தி அறிந்த கணத்திலிருந்தே எதோவொரு மனத்தடை. சட்டென்று மனம் கவிந்து இருள் நசியத் தொடங்கிற்று. வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் எதாவது திரைப்படம் பார்ப்பதோ அல்லது நூலெதையும் வாசிப்பதோ பெரிதாகப் பலனளிக்காது. வெளியே சென்று திரும்பலாம் என்றாலும் மனம் ஒப்பவில்லை. மனம் தானே மகா கனம்..? நேற்று இரவு சிரஞ்சீவி நடித்து 80களில் வெளிவந்த தெலுங்குப் படம் கூடாச்சாரி நம்பர் 1 என்ற நகைச்சுவை ஸ்பை படத்தைப் பாதி பார்த்திருந்தேன். அதை விட்ட இடத்திலிருந்து தொடரலாமா என்று பார்த்தால் ஒரு காட்சியிலும் ஒன்றமுடியவில்லை.

இந்த இடத்தில் தான் சாருவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. இந்த இசையைக் கேட்டதுண்டா? என்று ஒரு வரி. அதன் கீழே
Listen to this right now man. Tell me how u feel. I think of u now when I’m listening to this என்று எழுதியிருந்தது.

அதுவொரு இசைக்காணொளி. அதை ஐம்புலன்களையும் தொலைத்தாலொழிய அதனுள் ஆழ்வது கடினம் என்று தோன்றியது. இசையின் ஆகப் பெரிய வசீகரம் அது சிறந்த அழிப்பான். தன்னைப் புடம் போடுவதற்குத் தகத்தகாய ஒரே மார்க்கம் இசை தான். என்னை அப்படி அடிக்கடிப் புத்தாக்கம் செய்திருக்கிறேன். இன்று சூழல் விசித்திரமாய் இருந்தது. எங்கோ இருந்தபடி இந்தவொரு இசைக் கோவையை என்னை நோக்கி மருந்து வில்லைகளைக் கவர்ந்து வந்து கையளித்த மாயப்பறவை போல அனுப்பி வைக்க முடிந்தது அறிவியல் முன்னேற்றத்தின் வசதிப்பாடுகளில் ஒன்று என்பதெல்லாம் பம்மாத்து. நான் அற்புதங்களை நம்புகிறவன். நான் அற்புதங்களின் ஆழத்தில் எங்கோ லயித்திருப்பவன். நான் என்பவனே அற்புதமொன்றின் உபவருகை தான் என்பது என் கூடுதல் நம்பகம்.

இந்த இசைக்கோவை முடியும் போது மனம் இசைவசமாயிருந்தது. முற்றிலுமாக மனவலியின் கனம் குறைந்து இறகு போலாகியிருந்தேன்.

இதை ஏன் எனக்கு இன்றைக்கு அனுப்பினீர்கள் என்று சாருவிடம் கேட்க வேண்டும் என நினைத்தேன். அதற்குப் பதிலாக இதை எனக்கு இன்றைக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி சாரு என்று மட்டும் சொன்னேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் ஒரு முறை அதே காணொளியில் கரைந்து திரும்பினேன்.

அந்தக் கோட் பட்டனுக்கு ஸ்வரங்கள் தெரியும் என்று படுகிறது.
அந்த மோதிரம் அணிந்து கொள்ளத் தான் எத்தனை ராக ஆடைகள்?
எப்படி இத்தனை பேர் ஒன்று கூடித் தனித்திருக்க முடிகிறது?
தெய்வத்தால் ஆகாதெனினும் இசைத்தல்
தன்
மெய் உணர்த்தக் கூலி தருவதாகப் படுகிறது.
மதுவின் நிறைக் கிறக்கத்தில்
இலக்கின்மையை இலக்காகக் கொண்ட
ராஜகுடிகாரனொருவனின்
நகைமிகுந்த நடைப்பிறழ்தல் போல்
அந்த அத்தனை விரல்களின்
ஒழுங்கற்ற நடனத்தை என்ன சொல்வது..?
யாரை ஆள்வதற்கு இந்த அஸ்வமேதம்..?
யாராவதற்கு இத்தனை ஆகுதி?
நரை கூடி இசைப்பருவமெய்திய இந்தப் பேரரசன் யார்..?
அய்யோ
அந்தப் பியானோவிலிருந்து
கையை எடுக்காதிரேன்ன்ன்ன்ன்ன்!!!!

என்று எழுதியனுப்பினேன்.

சாருவிடமிருந்து ஒரே ஒரு வரி வந்தது.

God appears at the last moment and speaks with u

அடுத்த காணொளியினுள் நுழைந்தேன். முற்றிலுமாய் என்னை வேறொருவனாக உணர்ந்தேன்.

இதோ அந்த இரண்டாவது காணொளி

ஏழு நிமிடப் பாடலில் குரல்கள் நாலு நிமிஷங்கள் தள்ளி நிற்க வேண்டுமா..?
அடடா…இப்போது தான் நனையத் தெரிந்த பிறகு முதலாக நனைகிறேன்.
அடுத்த பிறவி என்றவொன்றிருந்தால் எந்த வாத்தியமாகி எவர் கையில் இசையாவேன் நான்..?
பாழும் மானிடப் பிறவியில் செய்யவல்ல
ஒரேயொரு இறைமை இசை மட்டும் என்றானபின்
இசையாவேன் இசையாவேன் இசையென்றவொன்றேயாவேன் நான்.

இந்த தினத்தை இந்த தினத்தின் பின்மாலைப் பொழுதை இதன் பின்னிரவை இதன் ஞாபகத்தை இங்ஙனம் இவ்வண்ணம் பதிந்து கொள்கிறேன்