நாலு பேர்

நாலு பேர்
குறுங்கதை


அவர்கள் மொத்தம் நாலு பேர் ரொம்பவே நண்பர்கள் முதலாமவன் சத்யா என்கிற சத்யமூர்த்தி.வேலை இல்லாத இளைஞன். முடியைக் க்ளோஸ் ஆக வெட்டிக் கொண்டு மொட்டை போன்ற தோற்றத்தோடு அலைபவன். முறுக்கு மீசை ஷார்ட் ஷர்ட் என்பதான கோபக்கனல் சத்யா. அடுத்தவன் விக்ரம். மைய அரசாங்கப் பணியில் இருந்த போது இவனுக்கு வைத்த குறி தப்பிப் போய் அவனது இளம் மனைவியின் நெற்றியில் பொட்டிட்டது. மூன்று மாதம் கருவுற்றிருந்தவளைப் பறிகொடுத்து விட்டுப் பித்துப் பிடித்தாற் போலிருந்தவனுக்கு நண்பர்கள் தான் ஒரே ஆறுதல். அடுத்தவன் உதயமூர்த்தி என்கிற உதய். பக்கத்திலிருக்கும் பெரிய கிராமம் அவனது ஊர். உதயின் தந்தை பிலஹரி மார்த்தாண்டம் பெரிய பாடகர். புகழை விட அதிகம் கர்வம் என்பது உதயின் அபிப்ராயம். அப்பாவுக்கும் மகனுக்கும் எதற்கெடுத்தாலும் சண்டை. வீட்டில் அண்ணி தான் அவனுக்கு ஸப்போர்ட். அடிக்கடி புல்லட்டை எடுத்துக் கொண்டு நகர் வந்து சேர்வான். நண்பர்களைப் பார்க்காவிட்டால் ஒரு நாள் ஒரு பொழுதும் போகாது.

நாலாமவன் செல்வம். டவுனில் புகழ்பெற்ற சக்திவேல் ஆர்ட்ஸ் காலேஜில் வீப்பீ அதாவது வைஸ் ப்ரின்ஸ்பல். காலேஜில் பசங்கள் பேய்த் தன்மையோடு பலவித பழக்கங்களுக்கு ஆட்பட்டு என்னென்னவோ நடந்ததை எல்லாம் தனி ஒரு மனுஷனாகக் கையாண்டு ஜெயித்தவன். பிரின்ஸிபாலே செல்வத்திடம் தான் எதுவாக இருந்தாலும் கேட்டுக் கொள்வார். அந்தக் கல்லூரியின் பெரிய முகம் செல்வம் தான். தினமும் அரை மணி நேரமாவது நண்பர்களைப் பார்த்து விட வேண்டும் என்பதை மட்டும் மாற்றிக் கொள்வதே இல்லை. மற்ற மூவரும் செல்வத்தின் வசதிக்காக அவனது க்வார்ட்டர்ஸில் இருந்து வெளிப்பட்டதும் சாலையில் இருக்கிற வடக்கத்தி சந்தன் டீக்கடையில் தான் சந்திப்பதே

நாளும் பொழுதும் சந்திப்புக்கெல்லாம் டீக்கடை ஓக்கே. ஆனால் வார இறுதியில் எங்காவது கூடி சீட்டு விளையாடுவார்கள். அவர்கள் நாலுபேர்க்கும் பொதுவான வெகு சில விஷயங்கள் ஒத்துப் போவதில் சீட்டு விளையாடுவதும் ஒன்று. ரூல் என்றால் ரூல் தான் என்பது செல்வத்தின் பிடிவாதம். உடன் விளையாடுவது யாராக இருந்தாலும் ரூல் தான் கடவுளை விடப் பெரியது என்பான். மற்றவர்களும் ஒத்துப் போவார்கள். விளையாடுவதற்கு தகுந்த இடம் கிடைக்காமலே இருந்தது. எங்கே விளையாடினாலும் காசு வச்சி விளாட்றீங்களா நாங்களும் வரவா ஆட்டத்துக்கு எம்புட்டு என்று பலரும் வந்து கழுத்தறுத்தார்கள். உதயின் தோப்பு ஒன்றில் விளையாடலாம். ஆனால் அங்கே சென்று மீள்வதற்கே மணி நேரங்கள் விரயமாகும். செல்வத்துக்கு என்று ஒரு டிகினிடி இருக்கிறதல்லவா..அதும் கெடக் கூடாது ஆட்டமும் தொடரவேண்டும் என்ன பண்ணலாம்…?

அந்த நேரத்தில் தான் செல்வத்திடம் அந்த யோசனையை சொன்னான் விக்ரம். டவுனில் ராயல்ஸ் க்ளப் என்று இருக்கிறதே..அங்கே சீட்டு ஆடுவதும் தின நடவடிக்கைகளில் ஒன்று. நாம் ஏன் அங்கே சென்று விளையாடக் கூடாது..?

ஊரின் மையத்தில் விஸ்தாரமான அந்த கிளப்புக்கு செல்வத்தின் காரில் சென்று இறங்கினார்கள். நிர்வாகியைப் பார்ப்பதற்கே 20 நிமிடங்கள் காக்க வேண்டி வந்தது.
“என்ன ஸார் எதும் டொனேஷனா?” என்றார் நிர்வாகி. சகுனமே சரியில்லையே என்று சத்யாவும் உதயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விக்ரம் வேறெங்கோ பார்த்தான்.
“ஐம் டாக்டர் செல்வம்” என்றான் செல்வம் அவர் அதை மதித்தாற் போலத் தெரியவில்லை.
“இந்த க்ளப்ல நாங்க மெம்பர்ஸ் ஆவணும்..” என்று தொடங்கியதுமே வரவழைத்துக் கொண்ட போலிச்சிரிப்போடு “ஸாரி ஸார். இப்ப புது மெம்பர்ஸ் அலவ் பண்றதில்லை”. என்றார்
“அடுத்து எப்ப அலவ் பண்ணுவீங்க?” என்ற சத்யாவின் குரலில் சண்டைக்கான முஸ்தீபு தொனித்தது.
“எப்டியும் ஃபைவ் இயர்ஸாவது ஆகும் ஸார்” என்றவர் உதயிடம் திரும்பி “இங்க மெம்பர் ஆவணும்னா ஒன் க்ரோர் இன் கம் டாக்ஸ் கட்னா தான் எலிஜிபிளிட்டி” என்றார்.
விக்ரம் உடனே “வெல்…” என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க ஒரு விரலால் கையமர்த்தியபடியே போதும் என்றாற் போல் செல்வம் எழுந்து கொண்டான். எதுவுமே பேசாமல் காரில் ஏறினார்கள்.

உதய்யின் தோப்பு. இளநீரில் சோமபானம் கலந்து குடித்தால் அமுதமாய் இனிக்கும். உதய் என்பவன் குடிக்கு எதிரி. பக்கம் பக்கமாய்த் தத்துவம் பேசுவான். ஆகவே வெறும் இளநீரை மாத்திரம் குடித்து விட்டு ஏவ் என்றார்கள்.

இன்னும் கோபம் ஆறாமல் சத்யா காலி இளநீரை ஃபுட்பால் போல் எத்தினான்.

“சொல்லு செல்வம் என்ன பண்ணலாம்?” என்றான் விக்ரம்

“எதுனா பண்ணனும்” என்றான் சத்யா.

“ஆமடா” என்றான் உதய்.

அமைதியாய் எழுந்து தன் ஷர்ட்டை சரி செய்துகொண்ட செல்வம் மூவரையும் அர்த்தத்தோடு பார்த்தான்.

“ஆரம்பிக்கிறோம். இந்த தோப்பு தான் ஸ்பாட். ஒரு க்ளப்.  நல்லவங்களுக்கான க்ளப்.ஏழைங்க மட்டும் தான் சேர முடியும். பணக்காரங்களுக்கு அனுமதி கெடையாத். நமக்கான க்ளப். வருமான வரி கட்டாதவங்க கொஞ்சமா கட்டுறவங்கன்னு எல்லாருக்குமான க்ளப் ரியல் க்ளப். தொடங்குறோம்” என்றான்.

மூவரும் நம்ப முடியாத அதே நேரத்தில் சந்தோஷமாக பார்த்தார்கள்

களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குரு, சக்தி, சம்மந்தம்,ஆதி எல்லோரும் புன்னகைத்தார்கள்.

தோட்டத்தைப் பராமரிக்கும் வேலு உதய்க்கு அண்ணன் போன்றவர் அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் உதய்யின் தோளைத் தொட்டு அழுத்தினார்

“அண்ணே..” என்றான் உதய்

“நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை” என்றார் வேலு.