இன்றெலாம் கேட்கலாம் 8

இன்றெலாம் கேட்கலாம் 8


வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை.
எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான்.
எண்பதுகளில் குடி+சோகம் என்றே புதிய பாடல் வகையறா உண்டாகிச் செழித்தது. தண்ணித் தொட்டிப் பாடல்களுக்கென்றே பெரும் ரசிகவட்டமும் இருந்தது. குடிப் பழக்கம் இல்லாதவர்களும் இவற்றைக் கேட்கப் பிரியபட்டார்கள்.

நண்பர்கள் கூட்டமாக சேர்ந்து மது விடுதியில் யாருடைய சோகத்தை யாவது பாடி பகிர்ந்து கொள்வது இத்தகைய பாடல்களில் ஒரு விதம். உண்மையில் இருந்து வெகு தூரம் தள்ளி நிற்பது புனைவின் இயல்பு. பாட்டு என்பதே உண்மைக்கு எதிரானது தானே. கவிஞர்கள்- இசையமைப்பாளர்கள்- பாடகர்கள் என எல்லோருமே அந்தப் பாடலின் மதுக்கிறக்கத் தன்மையை பாடல் முழுவதும் உறுதிப்படுத்தி அதனை உருவாக்க முனைவது வசீகரம்.

குரல் அதன் லேசான சாய்வு, பாட்டுக்கு நடுவே விக்கல் எடுப்பது, நடுங்குவது என பெரும் பிரயத்தனம் இத்தகைய பாடல்களில் அடங்கும்.

எதிர்பாராமல் ஒரு சில பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்கும். குடித்துவிட்டு மனம் இளகி தோன்றியதையெல்லாம் பகிர்ந்து கொள்ளுகிற வாய்ப்பாக அந்தப் பாடலை பயன்படுத்தி கதையை நகர்த்துவது உண்மையிலேயே வணிகப்படங்களில் பலன் கொடுத்த உத்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

தேவேந்திரன் அதிகம் போனால் ஒரு 25 படங்கள் வரை இசை அமைத்திருப்பார் அஜித் குமாரின் முதல் படமான பிரேம புஸ்தகம் தெலுங்கு இயக்குனர் கோலப்புடி ஸ்ரீநிவாஸ் எழுதி இயக்கத் தொடங்கிய படம். அவரது அறிமுக படமும் கூட படத்தை எடுக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங் போது ஒரு விபத்தில் காலமானார். அவருடைய தந்தை தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான கோலக்குடி மாருதி ராவ் உதயம் இந்திரன் சந்திரன் சிப்பிக்குள் முத்து ஹேராம் போன்ற படங்களில் இவரையும் பார்த்திருக்கலாம். தெலுங்கில் முக்கியமான சினிமா ஆளுமை அவர் மறைந்த ஸ்ரீனிவாஸ் பெயரில் ஒரு விருதை நிறுவி வருடம் தோறும் வழங்கி வந்தார். பிரேம புஸ்தகம் படத்தை இயக்கி முடித்தவர் அவரே. அந்தப் படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற்றன அதற்கு இசையமைத்தவர் தேவேந்திரன்

தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் படத்தில் 1986 ஆம் வருடம் அறிமுகமானார் அதற்கு அடுத்த வருடம் பாரதிராஜாவின் வேதம் புதிது அவர் இசையமைப்பில் வெளியானது காலையும் நீயே மாலையும் நீயே கனம் கோர்ட்டார் அவர்களே ஒரே ரத்தம் உழைத்து வாழ வேண்டும் புதிய தென்றல் மீண்டும் சாவித்திரி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் புதிய தென்றலுக்கு இசையமைக்கும் போது தன் பெயரை ரவி தேவேந்திரன் என்று மாற்றி வைத்துக்கொண்டார். மறக்க முடியாத பாடல்கள் சிலவற்றை இசை அமைத்திருக்கிறார்

ஆண்களை நம்பாதே 1987 ஆம் வருடம் பாண்டியன் ரேகா ரம்யா கிருஷ்ணன் சார்லி செந்தில் ஒருதலை ராகம் சங்கர் போன்றவர்கள் நடிப்பில் உருவானது. எழுத்தாளர் ஸ்டெல்லா புருசின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியதோடு ஒரு வேடத்தில் நடிக்கவும் செய்தார் அலெக்ஸ் பாண்டியன்.

மொத்தம் இருந்த ஏழு பாடல்களில் ஐந்தை வாலி எழுதினார். ஒரு பாடலை எம் ஜி வல்லபன் எழுதினார்.

அவற்றை தவிர காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேன் எனத் தொடங்கும் மது கூட பாடல் ஒன்றை வைரமுத்து எழுதியிருந்தார்.

 

 

எந்தப் பாடலுக்கும் தொடக்க வரி என்பது மிகவும் முக்கியமானது என சொல்ல வேண்டியது இல்லை பாடலில் பல்லவி பலமுறை வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை ஒவ்வொரு பாடலும் ஏற்கனவே பலமுறை பாடற்படுத்திய பழக்கப்பட்ட சிச்சுவேஷனுக்கு ஏற்கனவே ஒரு முறை கூட எழுதப்பட்டிராத புதிய வெர்ஷன் ஒன்றாக சொல்லப்பட வேண்டிய கவித்துவ நிர்பந்தத்தோடு உருவாகின்றன.

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்கிற பாடலை அதன் முதல் வரிக்காகவே சிலாகிக்க தொடங்கலாம். எண்பதுகளில் இந்தப் பாடலை இந்த படத்தில் எழுதக் கிடைத்த ஒரே ஒரு பாட்டு எனும் பட்சத்தில்

காதல் காயங்களே
நீங்கள் ஆறுங்களேன்

என்று தொடங்கியது மிகவும் ரசிக்க செய்கிறது.  மற்ற எல்லாப் பாடல்களை விடவும் இன்றளவும் இந்தப் படத்தின் முகவரித் தொடக்கமாகவே இந்தப் பாடல் சுடர்ந்து கொண்டிருக்கிறது

அதற்கு அடுத்த வரி

சோக நெஞ்சங்களே
ஜோடி மாறுங்களேன்

என்று புலம்புகிறது

காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது

என்று அடுத்தடுத்து சிக்ஸர் அடித்துக் கொண்டே செல்கிறது இந்த பாடல்

எனக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த சொற்கதுப்பென்று இதனைச் சுட்டுவேன்

வானம் அதுவொன்று தான்
வானில் நிலவொன்று தான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவொன்றுதான்

இந்தப் பாடலை ஜேசுதாஸும் மலேசியா வாசுதேவனும் சேர்ந்து பாடினார்கள் இந்த காம்பினேஷனுக்காகவே இந்தப் பாட்டை லட்சம் முறைகள் கேட்கலாம். படமாக்கிய விதமும் ஈர்க்கும். தேவேந்திரனின் இசைவல்லமை தெளிவாய்ப் புலப்படும் நேசவாதைப் பாடல். பாடலின் இசை செல்லும் திசையாகட்டும் கருவிகள் அமைந்தொழுகிய தேர்வாகட்டும் குரல்களைப் பயனுறுத்திய நேர்த்தியாகட்டும் இன்னும் பல நூறு படங்களுக்கு இசைப்பதற்குத் தேவையான திறன் கொண்டவர் தேவேந்திரன் என்பதை மெய்ப்பிக்கும் நற்பாடல் இதுவென்பது நிசம்.

கோப்பைகள் தள்ளாடும் காற்றூடும் நேரம் கேட்பதற்கான காதலின் துயர் பகிரும் பாடல்.

இன்றெலாம் கேட்கலாம்.