யாக்கை 23

யாக்கை 23

யுத்தம்


அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு எப்போதெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தனக்கே உரிய பெருஞ்சப்தத்துடன் எண்ணெய் மணக்கக் கதறிக் கொண்டிருந்தது. இயல்பாகவே ஜெனரேட்டர் சவுண்டு கேட்டுக் கொண்டிருக்கையில் பேச்சு சப்தம் கேட்காது. மண்டபத்தில் ஏற்கனவே மங்கல இசை வேறு முழங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பிரதேசமே கட்டுப்படுத்த முடியாத ஆரவாரத்தின் பிடியில் ஆழ்ந்திருந்தது.

மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் பல்வேறு சட்டதிட்டங்கள் ஆங்காங்கே பொறிக்கப் பட்டிருந்தன. “ மது அருந்தக் கூடாது.சீட்டு விளையாடக் கூடாது. “ என்றெல்லாம் இருந்ததே ஒழிய சண்டையிடக் கூடாது என்று எழுதப்பட்டிருக்கவில்லை.

அழகியரின் கண்ணசைவினால் உலகத்தில் நிகழ்ந்த நன்மை தீமைகள் ஏராளம் இல்லையா..? அப்படிப் பார்த்தால்
அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் நிர்மாணித்தது ஒரே ஒரு ஏளனப் புன்னகை. அந்தத் தீவினைச் சிரிப்பு அது மட்டும் தான் அங்கே நடந்த யுத்தத்துக்கு முழுவதுமாக வித்திட்டது.. வைத்தி மட்டும் கதிரைப் பார்த்ததும் சிரித்திருக்காவிட்டால் கதிரும் அவனோடு வந்தவர்களும் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய் இருப்பார்கள். பல ஆயிரம் சொற்கள் காட்டிக் கொடுக்காததை ஒரு சிரிப்பு காட்டிக் கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அடிவாங்கி நொந்து போய் இருந்தான் கதிர் .. இன்றைக்கு அவன் தனியன் அல்லவே,கூடவே நாலு ஐந்து ஆட்கள் வேறு உடனிருந்த தைரியம் வைத்தியின் சட்டையை பற்றி தூக்கி எடுத்த எடுப்பிலேயே அடிக்க ஆரம்பித்தது எதிர்பாராத ஒன்று.

நிஜத்தில் நடந்தது அது மட்டுமல்ல. பந்தியில் கதிரும் கூட்டாளிகளும் அமர்ந்ததற்கு நேர் எதிர் வரிசையில் வலது புறம் ஐந்தாவது ஆட்கள் தள்ளி முதலில் வெங்கடேசன் அடுத்தது செல்வம் பிறகு வைத்தி என சாப்பாட்டுக்கு அமர்ந்தார்கள். இயல்பாக தன் கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டான் செல்வம். அவனைப் பார்த்த கதிருக்கு செல்வத்தை எங்கே சந்தித்தோம் என்பது ஞாபகம் வரவில்லை. கர்ச்சீப்பால் மூடிய முகமும் மேல்நோக்கிய கண்களும் உற்றுப் பார்த்த ஒற்றை கணத்தில் ” இவன்தான் இவன்தான்” என்று மனசுக்குள் மணி அடித்தது. அடுத்த கணமே வெங்கடேசனின் வண்டி பிரச்சனையை ஒட்டி செல்வா தன்னை வந்து சந்தித்ததும் பேசியதுமெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அப்போதுதான் வைத்தி திரும்பி கதிரைப் பார்த்தான்.

 

பார்த்த மாத்திரத்தில் “பகபக”வென கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க தொடங்கினான். வைத்தி என்பவனுக்கு எல்லாம் தெரியும். வெங்கடேசனுக்கு எதுவுமே தெரியாது. வைத்து ஏன் சிரிக்கிறான் என்பது செல்வத்துக்கு புரிந்த கணத்தில் அவன் தொடையை கிள்ளி

‘சும்மா இருடா’

என்று முணுமுணுத்தான். அதையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு ஒரு மாதிரி விஷயம் புரிந்து விட்டது. வரதன் பேசும்போது சொல்லி இருந்தான்.

” ஏன்யா அடி வாங்கின நீ என்கிட்ட சொல்ல வந்த மாதிரி, அடிச்சவன் தன் சந்தோஷத்தை யாரிடமாவது சொல்லாமையா இருப்பான்? தன்னுடைய சினேகிதக்காரன் கிட்ட சொல்லி சிரித்திருக்க மாட்டான். எப்படியாச்சும் வெளியில வரும் வெயிட் பண்ணு”

அப்படியே அவன் சொன்னது நடக்கிறாற் போல் தோன்றியது கதிருக்கு. ஒரு காரணமும் இல்லாமல் தன்னை பார்த்ததும் அவன் ஏன் அப்படி சிரிக்க வேண்டும் நிச்சயமாக எதார்த்தத்தில் வேறு எதையோ கேட்டு விட்டு அல்லது யோசித்து விட்டு சிரிப்பது போல தோற்றமளிக்கலாம் அது நம்புவதற்கு இல்லை கர்ச்சீஃப் மூடிய அந்த கணத்தில் நிச்சயமாக இவனாக ஏன் இருக்கக் கூடாது என்று கதிருக்கு தோன்றி விட்டது. அதை மெய்ப்பிக்கிறாற் போலத் தான் வைத்தியம் சிரிப்பு அமைந்துவிட்டது.

காய் கூட்டு இத்யாதிகள் வரிசையாக பரிமாறிக் கொண்டிருக்க எதிர் வரிசையில் அப்போதுதான் இனிப்பை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் சாப்பிட்டு முடித்த பிறகு சண்டையிழுக்கலாம் என்று தான் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் கதிர். அடுத்த கணமே வைத்தியின் முகமொழி இன்னும் மிச்சம் வைத்திருந்த எள்ளலைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் தலைக்கேறியது. ஆத்திரம் மனிதனுக்குச் சத்ரு. எவ்வளவு பெரிய ஞானவானுக்குக் கூடச் சறுக்குகிற சந்தர்ப்பங்கள் வந்தே தீரும். சிறுதுளி ஆத்திரத்தால் கடலளவு குருதி கொட்டியிருக்கிறது. கதிருக்குத் தன் ராஜவரலாற்றின் சமீபத்திய தோல்வி உடம்பெல்லாம் எரிந்தது.

யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சடார் என்று எழுந்து தன் வேஷ்டியைப் பிரித்து அதை இறுக்கி கட்டிக் கொண்ட கதிர் மூர்த்தியைப் பார்த்து திரும்பி

‘எங்கூட வாடா’

என்று கூப்பிட்டான். அவனுக்கு அடுத்தாற் போல் யுவராஜ் அவனுக்கு பக்கத்தில் வரதனும் சண்முகவேலும் முத்துப்பாண்டியும் வரிசையாக அமர்ந்திருக்க இவர்கள் இருவரும் எதிர் வரிசை நோக்கி போவதை பார்த்து யுவராஜும் அழைக்காமல் அவர்கள் பின்னால் போனான்.

கைகலப்பு ஆரம்பிக்கிற நேரம் சாப்பாட்டு அறையில் இன்னொரு பக்கத்தில்  சந்தனக் கலர் சட்டை, பட்டு வேட்டி கழுத்தில் ஸ்படிகமாலை, கண்களில் ஆட்டோகூலர் கிளாஸ் சகிதம்  சின்ன தியாகராஜன், பந்திவரிசையில் முதலில் அமர அவனுக்கு அடுத்து   டூ ஆர் டை என்றெழுதிய டீசர்ட் அணிந்த முனீஸ்வரன்,  ஜீன்ஸ் பேண்டும் நீல சட்டையுமாக முரளி, சக்தி ஆகியோருடன் யூனிஃபார்மில் குணாளன் ஏட்டையாவும் வரிசையாக அமர்ந்திருக்க அவர்களுக்கு பந்தி பரிமாறுவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த பவுன்ராஜ் பார்க்கும்போது கதிரின் முதுகு தான் முதலில் தெரிந்தது. ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே பாயாசம் என்று கேட்க

“இங்கன பாயாசத் தூக்கை எடுத்தா செவந்தி”

என யாரையோ ஏவினான் பவுன்ராஜ்.

இதற்குள் யுவராஜ் செல்வாவின் சட்டையைப் பிடித்து இழுத்ததில் இரண்டு பட்டன்கள் அறுந்து போய் லேசாய் சட்டை கிழிந்து விட்டது. இதை பார்த்து உக்கிரமான செல்வா யுவராஜை கீழே தள்ளி கழுத்திலும் நெஞ்சிலும் மிதிக்க ஆரம்பித்தான். செல்வா சண்டையிடுவதைப் பார்த்ததும் பவுன்ராஜ்

“எலேய் என் சகலைப்பா”

என்று சின்னுவிடம்  உரக்கச் சொன்னான். அடுத்த கணமே செல்வாவை நோக்கி வேக வேகமாக ஓட ஆரம்பித்தான்.

சின்ன தியாகராஜன் எழுந்து கொண்டால் மற்ற எல்லோரும் சேர்ந்து எழ வேண்டியதுதான் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் சண்டை நடக்கும் வரிசைக்கு வந்து சேர யார், யாரை அடிக்கிறார்கள் என்பதே தெரியாத வண்ணம் இடமே ரணகளமானது. பொது மனிதர்கள் ஆளுக்கொரு தரப்பைப் பற்றி அடக்க முயலும் போது அவர்களுக்கும் சரமாரியாக அடிகள் விழுந்தன. நாலைந்து பேருக்கு வலுவான  ரத்தக்காயம். வெங்கடேசன் என்பவன் ஒரு இரும்பு பென்ச்சை அப்படியே தூக்கி எறிந்து விட அந்த பென்ச்சு கோணல் மாணலாய் சண்முகவேல் மீதும் வரதன் மீதும் விழுந்தது. சண்முக வேல் மண்டை பிளந்து குருதி கொட்டத் தொடங்க  அதுவரை பொறுமை காத்துக் கொண்டிருந்த வரதன் சட்டென்று தன் இடுப்பிலிருந்து கைக்கத்தி ஒன்றை எடுத்து வெங்கடேசனின் விலாவில் ஓங்கி இறக்கினான். அவன் அலறியபடி இடது பக்கம் சாய்வதைப் பார்த்து அலர்ட்டான செல்வா சற்றே பின்னால் நகர்ந்து கொள்ள அடுத்து வரதன் ஓங்கிக் காற்றில் வீசிய கத்தி தடுத்துப் பேச வந்த முரளியின் வயிற்றில் இறங்கியது. அவன் துடிதுடித்துச் சரிந்தான்.

நிலைமை எதோ விபரீதமாவதை அப்போது தான் உணர்ந்து கொண்ட கதிர் தன் ஆட்களைப் பார்த்து

“விடுங்கடா”

என சொல்லிக் கொண்டிருக்கும் போதே குணாளன் ஏட்டைய்யா வேகமாய் வந்து வரதனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து அவன் கைகளைப் பின் பக்கமாய் பிடித்துக் கட்ட முனைந்தார். அந்த நேரம் சட்டென்று மின்சாரம் துண்டிக்கப் பட  ஜெனரேட்டர் மீண்டும் முடுக்கப் படுவதற்குள் யாரோ எவரோ

” மண்டபத்து வாசலை பூட்டுங்க. கேட்டை சார்த்துங்க”

என்றெல்லாம் கூவியும் பயன் இருக்கவில்லை. ஏட்டய்யாவின் வயிற்றோடு தன் தலையால் முட்டித் தூக்கிய வரதன் சடாரென்று ஓடி மண்டபத்தின் பின் வாசல் வழியாக வெளியேறினான். கதிரும் மூர்த்தியும் முன் பக்க வாசல் வழியாகவே வெளியேறும் போது எதிரே ஒரு பெரியவர்

“என்னங்க அங்க பிரச்சினை?”

எனக் கேட்க மூர்த்தி பொறுப்பாக

“சண்டை போட்டுக்கிறாங்கிய,அடிதடி”

என்று சொல்லிவிட்டுக் கலைந்தான்.

மீண்டும் கரண்ட் வந்த போது சாப்பிடும் இடமே ரணகளமாயிருந்தது. கல்யாண வீட்டுக்காரரான செல்வராசு முகமெல்லாம் சிவக்க கோபத்தின் உச்சத்தில் இருந்தார். இன்னும் சாப்பிட வேண்டியவர்கள் மணக் கூடத்திலேயே அமர்ந்திருந்தனர். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிளம்பிப் போய்விட்டிருந்தனர்.

செல்வராசுவுக்கு என்ன பிரச்சினை யாருக்கும் யாருக்கும் தகறாறு என்பதெல்லாம் நன்கு புரிபட்ட நிமிஷம் ரத்தம் கொதிக்கத் தன் மச்சினன் பாஸ்கரை அழைத்தார்

“ இந்தாரு பாஸ்கரு…கலியாண வீட்ல வந்து சண்டியர்த்தனம் செய்துட்டு போயிருக்கானுங்க..அவனுக யாரா இருந்தாலும் சரி பொலி போட்டுட்டுத் தான் மறு சோலி பாக்கணம்”

என்று மூச்சு வாங்க பேசினார். அவரை உறவுக்கார்கள் லேசாம ஆறுதல் சொல்லி அடக்கினார்காள்.

வெங்கடேசனையும் முரளியையும் ஆட்டோ பிடித்து

“ஜீஹெச்சுக்குப் போயி அட்மிட்டாயிருங்க. நா அங்க வந்து கம்ப்ளேண்டு வாங்கிக்குறேன்”

என அனுப்பி வைத்த குணாளன் ஏட்டய்யா சின்ன தியாகராஜன் காதோடு

“நீங்க ஒருவார்த்தை இன்ஸ் கிட்டே பேசிருங்க”

என்றார்.அவன் “ம்ம்” என தலையாட்டினான்.

“அவனுங்கள்ல ஒருத்தனுக்கு மண்டை உடஞ்சிச்சேய்யா”

என்று  ஏட்டய்யா கேட்க “ ரத்தம் ஒழுக அவனையும் கூட்டிட்டுத் தான் ஜெண்டாயிட்டானுன என முணுமுணுத்த பவுன்ராஜைப் பார்த்து

“சரிய்யா பவுனு. நான் கெளம்புறேன். அப்பறமா கச்சேரிக்கு வந்து சேரு. மறக்காம (சின்னுவைக் காட்டி) ஐயாவைக் கூட்டியாந்துரு”

என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பவுன்ராஜூக்கு என்ன பிரச்சினை என்பதில் தொடங்கிப் பல கேள்விகள் இருந்தாலும் செல்வா அவனுக்கு சகலையாக வரவிருப்பவன். இனி அவன் வேறு தான் வேறு அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது.

“ தம்பி நீங்க என் கூட வாங்க”

என்று செல்வாவைப் பார்த்து அழுத்தமான குரலில் சொன்னான்.

உடனே திரும்பி

“ சின்னு மாடிக்கு வாய்யா. செல்வராஜு முதலாளி நீங்க வாங்க கொஞ்சம் பேசணும்”

எனக் கைப்பற்றி சைடு படிகள் வழியாக மாடியில் இருந்த ரூமுக்குச் சென்றான். செல்வாவின் கைக்கடிகாரம் எங்கோ சிதறியிருந்ததைப் பிறகு தேடிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். சட்டை பக்கவாட்டில் கிழிந்திருந்ததை மறைக்க முயன்று முடியாதெனத் தெரிந்ததும் கைவிட்டான். அவனுடைய மேலுதடு எரிந்தது. உடல் வெவ்வேறு இடங்களில் ரணமாகியிருந்தது. வலது கால் லேசாகப் பிறண்டாற் போல் வலி “விண் விண்” எனத் தெறித்தது. செல்வா தயக்கமாகத் திரும்பிப் பார்க்க மணக் கூடத்தில் பெண்கள் குழுமியிருக்க நடுவே சிந்தாமணியும் வடிவும் எதுவுமே நடக்காதது போல் முகத்தை ஒருபோல வைத்தபடி சம்பிரதாயமாகப் புன்னகைக்க லேசாய் விந்தியபடி மாடிப்படிகளில் ஏறினான்.

 

(வளரும்)