Skip to content

லிங்கம்


லிங்கம் பார்த்தேன்.

தம்பி வாஸ்தோவின் எழுத்து கச்சிதமாக அமையப் பெற்றிருக்கிறது. பல இடங்களில் வசனம் வீர்யமாகவும் அளவு கூடாமலும் ஒலித்தது.

புஷ்பா-சுப்ரமணியபுரம்-நந்தா- தொடங்கித் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேங்க்ஸ்டர் படங்கள் பலவற்றிலும் பார்த்துப் பழக்கமான காட்சிகள் பலவற்றையும் கழித்து விட்டுப் பார்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. வேறெதையும் நினைவுபடுத்தாத பல நல்ல காட்சிகளும் முகபாவங்களும் நடிப்பும் இன்னபிறவும் நிறைந்தே இருக்கின்றன. அவற்றை ரசித்தேன்.

லிங்கத்தின் ஆகச்சிறந்த ப்ளஸ் பாயிண்ட்  கதாபாத்திரத் தேர்வு. கிட்டத் தட்ட எல்லாப் பாத்திரங்களையுமே பொருத்தமான நடிகர்கள் வசம் தந்திருப்பது மாபெரும் ஆறுதல். ஒளிப்பதிவும் இசையும் அதனதன் வேலைகளைச் செவ்வனே செய்திருக்கின்றன. கதிர் ஒற்றை ஆளாகப் பெரும்பாரம் சுமந்திருக்கிறார். முழுமையான நடிகர் எனச் சொல்லத் தக்க அண்டர்ப்ளே யுவ நடிகர் கதிர். அவரது இன்னுமொரு சதவிளாசல் லிங்கம். போஸ் வெங்கட் அவர் தம்பி மற்றும் தங்கையாக வரும் இருவருமே அசரடிக்கும் நடிப்பு.

வசனகர்த்தா வாஸ்தோ முருகனாக வந்து மடிகிறார். முதல் பாகத்தில் வெட்டித் தனியே எடுத்தாளப் படுகிற சிலபல தலைகளில் வாஸ்தோவின் தலையும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. அவரைத் தவிர உயிர் எழுத்து ஆசிரியர் கவிஞர் சுதீர் செந்தில் ஒரு நாயகியின் தந்தையாக வருகிறார். நடிப்பைப் பெரிதும் விரும்பும் நாடகக் கலைஞருமான சுதீர் செந்தில் கிடைத்த வேடத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். அண்ணன் மணிஜி மந்திரியாக வருகிறார். முக்கியமான பஞ்சாயத்து சீன் உட்பட மணிஜி வரும் காட்சிகள் கதையின் முக்கிய நகர்வுகளாக அமைந்திருப்பதால் தனியே தெரிகிறார். இவர்களைத் தவிர இந்தத் தொடரின் இயக்குனர் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் பற்பல இந்தி-தெலுங்கு தமிழ் கேங்க்ஸ்டர் படங்களில் அசரீரி ஒன்று கதையின் நடுநடுவே வந்து பேசிப் போவது போல் கதையின் அம்சங்களைத் தன் சொந்தக் குரலில் எடுத்துரைக்கிறார். இவையெல்லாம் இலக்கிய உலகத்துக்கும் இந்தத் தொடருக்குமான தொடர்புகள்.

லாட்ஜில் இரண்டு தரப்பாரையும் சந்திக்க அழைக்கிறார் டி.எஸ்பி (முரளி அப்பாஸ்). அந்தக் காட்சியில் அந்தச் சின்ன லாட்ஜ் அறைக்குள் மாபெரும் எதிரிகள் இருவருமே கலியாண பந்தியில் அடுத்தடுத்து அமர்வதைப் போல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அடியாட்கள் சற்றுத் தள்ளி நின்று ஒருவரை ஒருவர் முறைத்து வசனம் பேசுகிறார்கள். அவர்களுக்கு அப்பால் தன் ரூமில் தனக்கே ஒரு நாற்காலி கிடைக்காமல் டி.எஸ்பி நின்று கொண்டிருக்கிறார். வெளியே ஏதோ சப்தம் கேட்டு கதிரும் சிலரும் அடுத்த அறையின் கதவைச் சிறிது நேரம் உடைத்துத் திறக்க முயன்று பிறகு மாடிக்குச் சென்று மேல் அறையைப் பார்த்தால் அங்கே கதிரின் நண்பனும் அவனது தோழியும் சம்போகத்தில் இருப்பதை அறிகிறார். பேச்சுவார்த்தைக்கு நடுவே என்னவோ பெரிதாய் நடக்கப் போவது போன்ற இசை முஸ்தீபுகளும் சேர்த்து முடிகையில் எதுவுமே இல்லாமல் இந்தக் காட்சி அப்படியே அந்தரத்தில் தொங்கி விடுகிறது. (அடுத்த அத்தியாயத்தில் இதற்கான விடையேதும் இருக்குமோ என்று கொஞ்ச நேரம் விழித்து மீண்டேன்.)

ரெண்டாவது எபிசோடில் டீக்கடைக்கு அடுத்த ரியல் எஸ்டேட் கடை பெயர்ப் பலகையில் வீடு-மனை-நிலம் வாங்க/ விற்க அனுகவும் “G.ராஜா செல் நெம்பர் :” என்று இருக்கிறது. இந்தியாவில் செல்போன் வரப் போகிறது என்று முன் கூட்டியே அறிந்து கொண்டு அதைத் தன் கடை விளம்பரத்தில் எழுதி வைத்த வகையில் G.ராஜா என்பவர் அந்தக் காலகட்டத்தின் ஆகச்சிறந்த ஆருட அருள்வாக்காளராக இருந்திருக்கக் கூடும்.  தசாவதாரம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ஆகாஷ் இதிலும் எந்தப் பதவி உயர்வும் இல்லாமல் இன்ஸ்பெக்டராகவே வருகிறார். அவர் பெயரை டைட்டில்ஸில் தேடினேன். காணோம். பெயரை எதுவும் ந்யூமராலஜி பார்த்து மாற்றிக் கொண்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

இரண்டரை மணி நேரப் படமாக எடுத்திருக்க வேண்டியதை ஓடீடீ தளங்களின் வெப் சீரீஸ் தேவையை பிரதானப் படுத்தி இரண்டு பாகங்களாக்கி அதில் ஒரு பாகத்தை கதையின் முற்பகுதிக்குச் சற்று முன்னதாகவே நிறுத்தி மீதியை அடுத்த பாகத்தில் காண்க என்று சொல்லாமல் நிறைத்திருக்கிறார்கள்.
சின்னச் சின்னக் குறைகளைத் தாண்டி முதல் பாகம் நிச்சயமாக போர் அடிக்கவில்லை. அடுத்த பாகத்தில் இந்தியாவின் மாபெரும் ஆக்ரோச நடிகர் “வெமெல்” நடிப்பது போலத் தெரிகிறது அது மட்டும் தான் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது. மற்ற படி பிரசாந்த் பாண்டியராஜ்-பாலசரவணன் இன்ன பிறர் எல்லாம் இரண்டாம் பாகத்தில் தோன்ற இருப்பது சந்தோசமே.

ஹாட்ஸ்டாரில் எட்டு அத்தியாயங்களாக ஒளிபரப்பப் படுகிறது லிங்கம் தொடர்.

பார்க்கலாம்.