முன் குறிப்பு:-
விகடன் வலைதளத்தை யாரேனும் ஹேக் செய்து விட்டிருப்பார்களோ என்று தான் முதலில் பயந்தேன். பிறகு அதெல்லாம் இல்லை என்றறிந்து நிம்மதியானேன். அடிப்படையில் எனது ஆறு வயதிலிருந்து நானொரு விகடன் வாசகன். முதலில் அதுதான். பிறகு தான் எல்லாம். 44 ஆண்டுகளாக என் வாழ்வின் எல்லா அணுக்களிலும் கலந்திருக்கும் ரசனைக்குரிய ஒரு “தேவ- நிகர் விஷயம்” என்றே விகடனைச் சுட்டுவேன். மேலும் காகித ரூபத்திலும் மின்னணு உருவிலும் விகடனை வாசித்து மற்றும் சேகரித்து வரும் வெறிகொண்ட வாசகன் ஒருவனின் முதல் அத்தியாய வாசிப்பு அனுபவம் என்றே இதனைக் கொள்க!
ஆயிரம் சூரியன்கள்
கருவாட்டு ரத்தமும் சோலார் சிக்கனும்
ஆனந்த விகடன் இதழில் நரன் எழுதத் தொடங்கி இருக்கும் ஆயிரம் சூரியன்கள் தொடரின் முதல் அத்தியாயம் வெளியாகி உள்ளது.
“அந்தியின் வானமும், தஞ்சை மண்ணும் அன்று ஒன்றுபோலவே ரத்த நிறத்திலிருந்தன. போர்க்களமே அதிரும்படியாய் பெரும் பிளிறலோடு கம்பீரமான பட்டத்து யானை சிவபாதசேகரன் தள்ளாடி மண்ணில் விழுந்தது. யானையின் முதுகிலிருந்த மூன்றாம் குலோத்துங்க சோழனும் அதிலிருந்து சரிந்து கீழே விழுந்தார். மாபெரும் மலை விழுந்ததுபோல் மண் தூசுகள் நூறு முழம் தூரத்துக்கு எழுந்து அடங்கின. ஒரு பட்டத்து யானை சரிவதென்பது ஓர் உயிரின் வீழ்ச்சியல்ல. அது ஒரு சகாப்தத்தின் முடிவு. அதுவரை நிமிர்ந்து நின்ற ஒரு குலத்தின் நிழல் அந்த பெரிய உடலோடு மண்ணில் சரிவது மாபெரும் துயரம்.
எழுத்தாளரின் முதல் பாராவிலேயே பிழைகள் ஏகத்துக்கும் மண்டிக்கிடக்கின்றன.
யானை சரிந்துதானே விழுந்தது. பின் எப்படி நூறு முழ அளவுக்கு தூசி பறக்கும் நூறுமுழம் என்பது குறைந்தபட்சம் 150 அடி. யானையே மூழ்கிப் போகுமளவுக்கா மண் பறந்தது. அச்சச்சசோ…….யானை வீழுந்தது அரசனின் வீழ்ச்சியைக் குறிக்கலாம். அதென்ன சகாப்தத்தின் குறியீடு. அப்படியென்றால் சோழ அரசே அந்த யானையாகத்தான் இருந்ததா? எதிலும் தெளிவில்லை. வரலாற்று நாவலை எழுத இந்தயிந்த வார்த்தைகள் இருந்தால் போதும் என்கிற எழுத்தாளரின் மனநிலை வியக்கத்தக்கது.
யானையின் தந்தத்தைப் பிடித்து ஊன்று எழும் அளவுக்கு சோழனுக்கு அகண்ட கையா? அதுவும் யானையிலிருந்து சரிந்து விழுந்தால் யானையின் வயிற்றடியில் தானே சிக்கியிருப்பான். அதுவும் சேற்று நீர் இருந்த இடத்தில். பின்னர் முன் சொன்ன 150 அடி தூசி எப்படிப் பறந்திருக்கும். எழுத்தாளர் நிறைய டப்பிங் சினிமா பார்ப்பார் போலிருக்கிறது.
அடுத்த பத்திகள் அதைவிட மோசம்.
“பட்டத்து யானை மீண்டும் எழுவதற்காய் தட்டழிந்தது. பல கோடாரிகளால் வெட்டுப்பட்டுத் தொங்கும் அதன் துதிக்கையால், கீழே விழுந்து கிடக்கும் குலோத்துங்கனின் வயதான கால்களை அது துழாவியது. ஒரே நேரத்தில் மன்னிப்புக் கேட்பதுபோலவும், `வா மீண்டும் போராடலாம்’ என அழைப்பதுபோலவுமிருந்தது அந்த துழாவல். அதன் உடலில் எண்ண முடியாத அளவுக்கு பாண்டியப் படைகளின் குத்தீட்டிகளும், கோடாரிகளும் சொருகிக் கிடந்தன. அதிலிருந்தெல்லாம் ஊற்றைப்போல் ரத்தம் குமுறி கொப்பளித்துக்கொண்டிருந்தது. கொடுவலியோடு யானை மீண்டும் பிளிற, துதிக்கையைத் தூக்க எத்தனித்தது. இயலவில்லை.///
அருகில் வெட்டுப்பட்டு, தனியே முறிந்து கிடந்த அதன் பெரிய தந்தத்தைத் தரையில் ஊன்றி எழுந்த குலோத்துங்கன் ஒரு நொடி யானையின் கண்களை வேதனையோடு பார்த்தார். தரையில் வழிந்து விடாமல் அதன் கண்களில் நீர் கட்டித் தேங்கி நின்றது. போர்க்கள மண்ணில் வீரர்களின் குருதிதான் சிந்த வேண்டும். கண்ணீர் சிந்திவிடக் கூடாது என்று நினைத்திருக்குமோ என்னவோ…”///
பழைய டயலாக் பரமசிவம் மிளிர்வதை இதில் காணலாம்.
பல கோடாரிகளால் வெட்டப்பட்டுத் தொங்கும் துதிக்கை எப்படி துழாவும்?
அதுவும் போகத் தந்தமே துண்டாகித் தெறித்து விழுந்திருக்கிறதாம். ஒருவேளை இந்த யுத்தத்தின் மன்னர் அந்தக் காலகட்டத்தின் பாலகிருஷ்ணா போலிருக்கிறது. பாவம் துதிக்கையை விட்டுவைத்துவிட்டு தந்தத்தை வெட்டி அறுத்திருக்கிறார்கள். அடடா!
கொடியிலிருந்த புலி லாஞ்சனையை வாளால் அரிந்து கீழே எறிந்தார்கள் என்று சொல்லிவிட்டு அடுத்தபடியாக புலிக்கொடி உச்சியிலிருந்து வீசி எறியப்பட்டது என்கிறார்.
என்ன சொல்ல வருகிறார் எழுத்தாளர்.
புலியைத் தனியே அறுத்து எறிந்துவிட்டு அதற்குப் பிறகு புலிக்கொடி அரண்மனையிலிருந்து வீசப்பட்டதா?
குழப்பத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார் எழுத்தாளர்.
பாண்டியர்களுடன் போர்க்களத்திலிருந்து நாய்களும் ஆயிரக்கணக்கில் ஓடின என்கிறார் ஆசிரியர். அப்படியெனில் பாண்டியர்களிடம் குதிரைப் படை யானைப்படையோடு நாய்ப்படையும் இருந்திருக்கிறதோ?. அதற்கு ஏதேனும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளதா?
“ரத்தத்தின் கறைகள்”, என்கிறார்.
குருதிக் கறை என்று சொல்லாவிட்டாலும் ரத்தக்கறை என்றாவது சொல்லி விட்டுப் போகலாமே..? ஒருவேளை இதுதான் நவீனப் புனைவு மொழி போல!
“இறந்தவீரர்கள் கழுகுகளுக்கும் நரிகளுக்கும் செந்நாய்களுக்கும் தங்கள் உடல்களையே விருந்தாகக் கொடுக்கத் தொடங்கினார்கள்.” என்கிறார். அப்படியெனில் அவர்கள் இறந்துவிட்டார்களா இல்லை விருந்து கொடுக்குமளவுக்கு உயிரோடு இருக்கிறார்களா? இலக்கிய மொழியும் கைகூடவில்லை போலும்!
அங்கு வந்த நாய் நரி உள்ளிட்ட “அவற்றுக்குள் சண்டையில்லை. மிகுதிக்கும் மிகுதியாய் உண்ண உடல்களிருக்கின்றன. காயம்பட்டு உயிர்போகும் நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் சில வீரர்களின் இறப்புக்காய் நரிக்கூட்டங்கள் காத்திருக்கின்றன.”
ஏன் நரிகள் காத்திருக்க வேண்டும்.
வீரர்களின் உயிர் போவதற்காக என்று சொல்கிறார்.
அதன் பின்
மிகுதிக்கும் மிகுதியாய் உண்ண உடல்களிருக்கின்றன
என்கிறார்.
ஒரே வரியில் எத்தனை குழப்பங்கள்? அதை விடக் குழப்பம். வீரர்கள் சாக நரிகள் காத்துக்கொண்டிருந்த என எழுதிவிட்டு அடுத்த பத்தியில் உயிருடன் இருக்கும் வீரன் ஒருவனின் குடலை இரண்டு மூன்று நரிகள் சேர்ந்து பற்களால் கிழித்தன என்கிறார். என்னதான் சொல்ல வருகிறார் எழுத்தாளர்.
இன்னொரு இடத்தில்
கதவுகளும் கண்ணீரும் திறக்கத் தொடங்குகின்றன. முதலில் ஒரு பெண், இல்லை… இரண்டு பெண்கள்… இல்லையில்லை நூறு… இல்லை.. எண்ண முடியவில்லை. நொடிக்குள் ஆயிரம் பெண்கள் கையில் நெருப்புப் பந்தங்களோடு கத்தியபடியே ஓடிவந்து நரிகளை விலக்கிவிட்டு, தங்கள் வீட்டு ஆண்களைத் தேடத் தொடங்கினார்கள்.///
எண்ண முயன்றது பிசகா? அல்லது எண்ண முடியவில்லை என்பது பிழையா? எண்ண முடியாத அளவொன்றைச் சுட்டிய அடுத்த கணத்தில் நொடிக்குள் ஆயிரம் என்று சொல்வதெல்லாம் பாண்டியசோழ கணிதாமுறைகளில் உட்படுமா என்பது எழுதியவருக்கே வெளிச்சம்
அதில் ஒரு கிழவி தன் பெயரனை நரிகள் அண்டவிடாமல் கல்லை எடுத்து எறிவதாகச் சொல்லுகிறார். அதே சமயம் அதற்கு முதற்பத்தியில்
‘பிணங்கள், நெடுந்தூரத்திற்குப் பல ஆயிரக்கணக்கில் கிடக்கின்றன. யாராலும் அவ்வளவு எளிதாய் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை”
என்றும் சொல்கிறார். கணக்குப் போட்டுப் பார்த்தால் லட்சக்கணக்கான நரிகள் அங்கிருந்திருக்க வேண்டும். அதைவிடக் கொடுமை கிழவி அவளுக்கு அருகில் துண்டாகிக் கிடக்கும் குதிரையின் காலை எடுத்து நரிக்கூட்டத்தில் எறிகிறாள். அப்படியெனில் அருகில் இறந்து கிடக்கும் குதிரையை விட்டுவிட்டு பாட்டியின் பெயரனை மட்டும் தனிப்பட்ட முறையில் நரிகள் கடித்திருக்கின்றன. வாசிப்பவர்களுக்கு கண்ணில் இரத்தக் கண்ணீர் வர வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் உழைத்திருப்பது நன்கு தெரிகிறது.
ரத்தச் சகதிக்குள் கையைவிட்டு நனைந்து சிவந்த ஒரு கல்லை எடுத்து நரி கூட்டத்தின் மேல் எறிந்தாள். //
இந்த இடத்தில் அந்தக் கிழவி மீது உருவாகும் பரிவு அடுத்த சில வரிகளில் உடைந்து போகிறது ஏனென்றால் அதே கிழவி அதே இடத்தை மீண்டும் துழாவி ஒரு சிவந்த கல்லைத் தேடி எடுத்து மீண்டும் நரிகளின் மீது எறிகிறாள்.
சிவந்த கற்களை மட்டும் அவள் தொடர்ந்து தேடியெடுத்து நரிகளின் மீது எறிவதாக எழுதுகிறார் எழுத்தாளர். வாசிப்பவனுக்கு அங்கே கிடக்கிற கற்கள் எல்லாமே குருதியாற் சிவந்திருந்தன என்பது எந்த விதத்திலும் புரிய வைக்கப்படவில்லை. குவிந்து கிடக்கிற பலவண்ணக் கற்களில் இருந்து தேடித்தேடிச் சிவந்த கற்களை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த எறிகிறாள் என்று தோன்றுகிறது.
நமது மொழியின் சிறப்பு அதன் கட்டுமானத்திலும் புழக்கத்திலும் உறைந்திருக்கிறதல்லவா..?
பசுவே என்கையில் தொனிப்பது வேறு
மாடே என்று விளிப்பது வேறு
இரண்டும் ஒரு பொருள் கொண்டவை என்பது ஒரு புறம் பயன்பாடு இடம் பொருள் ஏவல் போன்றவை தமிழின் வசீகரம்.
இதைவிடக் கொடூரம்
ஒரு நாள் கழிந்தது.
விரைந்து வேறொரு நாள் தொடங்கியது.
போர் முடிந்த ஏழாம் நாள். தஞ்சையை அணுகும் பாதையில் நான்கு மைல்களுக்கு முன்பாக ஒரு சிறு படைக்கூட்டம் முகாமிட்டிருந்தது.”
என்கிறார் எழுத்தாளர். வரலாறும் தெரியவில்லை. வரலாறை புனைவாக எப்படி எழுதுவது என்றும் தெரியவில்லை என்பதைப் போல் தோன்றவில்லையா?. ஒருநாள் கழிந்து அடுத்து ஏழாம் நாள் சட்டென முளைத்து வருகிறது. நடுவில் விரைந்து வேறொரு நாள் தொடங்கியது எதற்கோ?
அதைவிடக் கொடுமையாக “நான்கு மைல்கள்” என்று எழுதுகிறார். ஆக அந்தக் காலத்திலேயே மைல்கள் கணக்குமுறைகள் எல்லாம் இருந்திருக்கிறது. தலையிலடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
உரையாடலும் வரவில்லை. ‘தப்பு செய்துவிட்டேன் நரசிம்மா’ என்றவர் அடுத்தபடியாக நாடகத்தமிழையும் போட்டுக் குழப்பியுள்ளார். “வீரத்தால் சிவந்திருந்த மன்னனின் கண்கள்” என்ற பழைய டயலாக்கையெல்லாம் இன்றும் வைத்து மீண்டும் மீண்டும் பழைய டயலாக் பரம நாராயணனாக காட்சியளிக்கிறார்.
ஓங்களித்தான்
ஓங்கரித்தான் என்பது நவீன புனைவில் இப்படி வரும் போல.
“அழுகி நாற்றமடித்துக்கொண்டிருக்கும் வீரர்களின் பாதத்தில் கைதொட்டு மன்னிப்புக் கேட்க அவரின் கைகள் நீண்டன. ஆனால் நடுக்கமெடுக்கத் தொடங்கின. அழுகிய சதைகள் கையோடு வந்தன. சில கால்களில் எலும்புகள் மட்டுமே துருத்திக் கொண்டிருந்தன.”
நடுங்கும் கைகளால் தொட்டதும் அழுகிய சதைகள் கையோடு எப்படி வந்தது. ஒருவேளை பிடித்து இழுத்திருப்பாரோ!
அடுத்தபடியாக எழுத்தாளரின் நகையுணர்ச்சி உச்சத்துக்குச் செல்கிறது.
“அருகில் கிடந்த ஈட்டியைத் தரையில் ஊன்றி தன் முயற்சியில் எழுந்த வீரனொருவன் இருட்டுக்குள் தன் காலைத் தேடிக் கொண்டிருந்தான். கத்தினான். ‘`தீவட்டி வேண்டும்…’’ வலியோடும் பதற்றத்தோடும் தனக்குப் பொருத்தமற்ற காலொன்றை எடுத்துக் கொண்டு, ஈட்டியை ஊன்றியபடியே ஆதுர சாலைக்குக் கிளம்பினான்.”
இத்தனை வறட்சியோடு படைக்கப்பட்ட ஒரு போர்க்காட்சியை இதுவரை நான் வாசித்தது இல்லை. முந்தைய வரிகளில் தான் ஆயிரக்கணக்கான பெண்கள் தீப்பந்தங்களோடு அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். தமக்கு உற்றவர்களைத் தேடுவதற்காக முனைகின்றனர்.இந்தக் குறிப்பிட்ட கால் இழந்த வீரனுக்கு, அவனைத் தேடி யாருமே வரவில்லை என்றாலும் கூட அந்த இடமே தீப்பந்தங்களால் சூழப்பட்டிருக்க வேண்டுமே…? குறைந்தபட்சம் ஓர் இரண்டு தீப்பந்தங்களாவது அங்கு இருந்திருக்கும் இல்லையா?
ஓருவேளை அவன் மட்டும் சற்று தள்ளி இருந்தால் கூட அவனது குரலைக் கேட்டு ஒருவர் கூட தீப்பந்தத்தோடு அங்கு வரவில்லை என்றால் உண்மையில் இழந்தவர்களைத் தேடுகிற ஒருவருக்குக் கூட ஒளிதந்து உதவுகிற ஈரமனம் இருந்திருக்கவில்லை என்கிற எதிர்மறைச் சிந்தனையைத் தானே எழுதுபவர் முன்வைப்பதாக அர்த்தம்..?
ஒருவேளை சோழகுலப் பெண்மணிகள் இரக்கம் படி என்ன விலை என்று கேட்பவர்கள் என்று எண்ணச் செய்வதற்காக இவ்வரியா?
தீவட்டி கிடைக்காதவன் தனக்கு பொருத்தமற்ற காலொன்று எடுத்துக் கொண்டு ஈட்டியை ஊன்றிய படியே ஆதரசாலைக்கு கிளம்பினான் .
அய்யா…
பொருத்தமற்ற என்கிற வார்த்தை மிகவும் பொருத்தமற்றது என்று தோன்றவில்லையா..?
சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல மறுக்கும் சொல்லாக அது விளங்குகிறதே
தன் கைக்கு கிடைத்த /தன் கையில் அகப்பட்ட
காலொன்றை எடுத்துக் கொண்டு
ஆதரசாலைக்கு கிளம்பிப் போனான்
என்று அங்கு இருந்திருக்கலாம்
தன் கையில் அகப்பட்ட அல்லது கையில் கிடைத்த கையில் சிக்கிய கால் என்று குறிப்பிடும் போது புரிய வருவது கூட பொருத்தமற்ற எனும் சொல்லை பயன்படுத்தும் போது புரிவதற்கு இல்லை
அது சரி அந்தக் காலத்தில் ஆதுர சாலைகளில் போர் முடிவுகளில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு உறுப்புகள் பொருத்துகிற அறுவை சிகிச்சைகள் ஏதும் சாத்தியமானதா? மருத்துவ அதிசயம் எதையும் மறைபொருளாக்கிப் பூடகம் செய்திருக்கிறாரா எழுத்தாளர் என்று மூளையைக் கசக்கிப் பார்த்தேன். முடியவில்லை. அப்படி நடந்திருக்குமே ஆனால் அதுவல்லவா ஆறேழு அத்தியாயங்களுக்கான கருப்பொருள். அதனைப் பற்றி அடுத்து வரும் கதா காட்சிகளில் சற்று விளக்கித் தரலாமென விண்ணப்பிக்கிறேன்.
தொடரின் இறுதிப் பக்கம் முழுவதும் கடுப்படிக்கிறது.
இந்தா பெண்ணே நான் யார் தெரியுமா..? நான் தான் மன்னன். என்னைத் தெரியவில்லையா உனக்கு . யாரைத் தேடுகிறாய்..? என்னிடம் சொல்!”
என்று சமீபத்தில் தோற்றுத் தன் நாட்டுக்கு உடனே ஒரே வாரத்தில் திரும்பி வருகிற ,தோற்றுப்போய் இருந்தவர் -அவமானத்தில் இருந்தவர் துக்கத்தில் இருந்தவர்- என்றெல்லாம் விவரிக்கப் பட்ட அதே மன்னர் தான் யார் என்பதைத் தான் தோற்ற அதே போர்க்களத்தில் சென்று அங்கே எஞ்சி இருக்கிற ஒரே ஒரு பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வதெல்லாம் தமிழில் இதுவரை யாருமே முயன்று பார்க்காத ஹாரர்- அங்க- ஜண்டா கதைவகை. ஒய்சள மன்னர் இறுதிக் கட்டப் போரில் குலோத்துங்கருடன் சேர்ந்து போரிட்டாரா, அல்லது போரில் அவர் தோற்ற பிறகு ஆறுதல் அளிப்பதற்காக வந்து சேர்ந்தாரா..? போரில் அவர் பங்கேதும் இருந்ததா அல்லது போர்த் தோல்விக்கப்பால் குலோ- மற்றும் அவருடைய மகன் மூன்றாம் ராஜராஜன் இருவரையும் பாதுகாப்பதிலிருந்து அவர் பங்குபாகம் தொடங்குகிறதா என்பதெல்லாம் அந்தச் சோழச் சக்கரவர்த்திகளுக்கே வெளிச்சம். அல்லது பாண்டிய மன்னர்களுக்கே தெரிந்திருக்கும் ரகசியம் .
மன்னர் கேட்கும் வினாவுக்கு அந்தப் பெண் பதிலேதும் சொல்லாமல் போவதாக முதல் அத்தியாயத்தை முடித்து வைத்திருக்கிறார் எழுத்தாளர்.
முடிவதற்குச் சற்று முன்பாக “போர்க்களச்சகதி” என்று ஒரு சொல்லாடல் வருகிறது. ஏழு தினங்களுக்கு முன்பாக போர்க்களமாக இருந்து போர் முடிந்து அதன் பிறகு ஏழு சூரியன்களைப் பார்த்துவிட்ட பிறகும் இன்னும் சகதியாக எஞ்சி இருக்கும் அந்தப் போர்க்கள சகதி குறித்து சற்று விலாவாரியாக சொல்லி இருக்கலாம் எழுத்தாளர் போர் எவ்விதம் தொடங்கி எப்படியெல்லாம் நடந்து எவ்வண்ணம் முடிந்தது யாரெல்லாம் அதில் ஈடுபட்டு எப்படியெல்லாம் போரிட்டு எவர் வென்று எவர் தோற்றார் என்பதெதுவும் விவரிக்கப் படவே இல்லை என்பது பெருஞ்சோகம். கதையின் நடுநடுவே தவற விட்டு விலகி ஓடுகிற பல முக்கிய இடங்களைக் கண்டெடுத்தாலே சிறக்க முடியுமே?
அதுவரை நிமிர்ந்து நின்ற ஒரு குலத்தின் நிழல் அந்த பெரிய உடலோடு மண்ணில் சரிவது மாபெரும் துயரம்.
சத்தியமாகச் சொல்கிறேன்
நிச்சயமாகச் சொல்கிறேன்
எனக்குத் தமிழ் போதித்த ஆசான்கள் மீதெல்லாம் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
இதுவரை சொன்ன எல்லாவற்றையும் திரும்ப வாங்கி விட்டாலும்
இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் என்னால் செரிமானம் செய்து கொள்ளவே முடியாது
யாராக இருந்தாலும் சரி எந்த குலமாக இருந்தாலும் சரி நிமிர்ந்து நிற்கும் போதே நிழல் மண்ணில் சரியத்தானே அய்யா செய்யும்?
உடல் வீழ்ந்து மண்ணில் சரிவது தானே துயரமாகவே இருக்க முடியும்?
நிழல் அந்த பெரிய உடலோடு அதுவரை மண்ணில் சரியவில்லை என்றால் இதுகாறும் வாசித்து வந்தது சரித்திரம் கலந்த பேய்க் கதை ஒன்றின் முதல் அத்தியாயமா என்பதும் எழுத்தாளருக்கு தான் வெளிச்சம் அல்லது அந்த பேய்க்குத் தான் வெளிச்சம்.
போதும்!!!!
முதல் அத்தியாய நீளத்துக்கே பிழைகளை விரித்து எழுதலாம். தமிழ் வாசகர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. சரித்திரத்தை அபத்தமாய் எழுதுவதற்காக ஒரு விருதிருந்தால் இந்த முதல் அத்தியாயத்துக்கே அதைப் பெறுகிற முழுத் தகுதியும் உண்டென்பேன்.
புனைவு மொழி இருந்தால் போதும் வரலாற்றுப் புதினம் எழுத. பழைய சொற்கள் சில பெயர்கள் இருந்தால் போதும் எதையும் வரலாற்றுப் புனைவு என்ற பெயரில் கலைத்து அடுக்கிவிடலாம் என்பதெல்லாம் அராஜகம். இந்த அத்தியாயத்தைப் படித்த வகையில், வேண்டி விரும்பிக் காத்திருந்து பற்பல வாரங்கள் விகடன் இதழில் இதுவரை நான் படித்த வரலாற்றுப் புனைவுகளின் வரிசையில் கடைசி இடத்தைக் கூட இதற்கு என்னால் வழங்கமுடியாது.
ஒரு வரலாற்றுப்புனைவை எழுதுபவர், வரலாற்றின் காலவரிசையில் பிழை செய்யலாம். தன் சார்பாக வரலாற்றைக் குழப்பலாம், புனைவில் வேறொரு நீதியைச் சொல்லலாம். அதே போல் புனைவில் வரலாற்றில் ஒளிந்திருக்கும் கேள்விகளுக்கு விடையைக் கூறலாம். போர் என்றால் என்ன அதன் குரூரம் என்ன என்பதை விவரித்து நம்மை அச்சமுறச் செய்யலாம். போரென்றால் இத்தனை அழிவா என நம்மைப் பதறச் செய்யலாம். ஆனால் இந்தப்புனைவு! இவற்றில் எதையுமே செய்துவிடக் கூடாது என்று போட்டு உழப்புகிறது. சொல்ல வேண்டியதை சொல்ல விடுத்து சொல்ல வந்ததைக் குழப்பிக் கதையற்ற ஒன்றைக் கதையாக்க முனைவது போல் படுகிறது
இனி வரும் அத்தியாயங்களில் வரலாற்று வார்த்தைகளை குறிச்சொற்கள் ஆக்கி தேடல் இயந்திரத்தில் கண்டடைந்து எழுதினாற் போன்ற மொழியை விடுத்து கூர்மையில் குவிந்த மொழி ஒன்றைக் கையெடுத்து எழுதினால் சிறக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு சொல்லத் தோன்றுகிறது.
கருவாட்டு ரத்தம் காப்பிடி
கருங்குரங்கு மூத்திரம் முக்காப்பிடி
இன்னும் 993 சூரியன்கள் இருக்கின்றனவே.
பார்க்கலாம்!
